இலங்கையில் சீனாவானது வலுவான அரசியல், பொருளாதார பிரசன்கத்தை கொண்டிருக்கின்ற போதிலும் இலங்கையிடம் இருந்து மிகவும் குறைந்தளவிலானவற்றையே கொள்வனவு செய்கிறது. ஆனால், இந்தியாவின் நிலைமை இதற்கு வேறுபட்டதாக உள்ளது. இலங்கை பொருட்களுக்கு தனது சந்தையை இந்தியா திறந்துவிட்டிருப்பதன் மூலம் தனது உறவுகளை சமநிலைப்படுத்தியுள்ளது என்று எக்ஸ்பிரஸ் செய்திச்சேவை குறிப்பிட்டுள்ளது.அம்பாந்தோட்டையில் 360 மில்லியன் டொலர் செலவில் பாரிய துறைமுகம் ஒன்றை சீனா நிர்மாணித்து வருகிறது. மேற்கு கரையிலுள்ள பாணந்துறை துறைமுகம் சீனாவின் 5.7 மில்லியன் டொலர் உதவியில் நவீனமயப்படுத்தப்படவுள்ளது. அம்பாந்தோட்டை களஞ்சிய திட்டமானது 76.7 மில்லியன் டொலராகும். மேற்கு கரையிலுள்ள நுரைச்சோலை அனல் மின் உலைக்கு 455 மில்லியன் டொலர் உதவியை சீனா வழங்குகிறது. இந்த திட்டத்தின் 2 ஆம், 3 ஆம் கட்டங்களின் செலவு 400 மில்லியன் டொலர்களாகும்.
கொழும்பு கட்டுநாயக்கா வீதியை 248.2 மில்லியன் டொலர் செலவில் சீனா நிர்மாணித்து வருகிறது. இதற்கப்பால் 10 மில்லியன் டொலர் செலவில் சிறிய வீதித் திட்டங்களை மேற்கொண்டுள்ளது. இலங்கையின் புகையிரதப் பகுதிக்கு 38.5 மில்லியன் டொலர் செலவில் டீசல் என்ஜின்களை சீனா விநியோகிக்க உள்ளது. பெட்டிகளை 27 மில்லியன் டொலர் செலவில் வழங்கவுள்ளது.
சீனா நிர்மாணித்துக் கொடுத்த பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் 7.2 மில்லியன் டொலர் செலவில் தரமுயர்த்தப்பட உள்ளது. 45 மில்லியன் டொலர் செலவில் நீதிமன்றத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்கான திட்டங்களும் உள்ளன. அத்துடன், 22 மில்லியன் டொலர் வீடமைப்புத் திட்டத்திற்கும் 45 மில்லியன் டொலர் கிராமிய மின்விநியோக திட்டத்திற்கும் சீனா நிதியுதவி அளிக்கவுள்ளது.
இலங்கையில் சீனா முதலீடுகளின் அதிகரிப்பால் அண்மையில் இலங்கை அரசாங்கம் விசேடமான பொருளாதார வலயத்தை உருவாக்கியுள்ளது. ஜப்பானுக்கு பின்னர் இலங்கைக்கு உதவி வழங்கும் 2 ஆவது நாடாக சீனா உள்ளது. எவ்வாறாயினும், வர்த்தகத்தைப் பொறுத்தவரை சீனர்களிடமிருந்து அதிகளவு இலங்கைக்கு விடயங்கள் மேற்கொள்ளப்படவில்லை. 2008 பெப்ரவரியில் சீன அரசாங்கம் வெளியிட்ட அறிக்கைகளின் பிரகாரம் இலங்கைக்கு சீனா 386 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால், 13 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை மட்டுமே இலங்கையிடமிருந்து சீனா கொள்வனவு செய்திருக்கிறது.
இதேவேளை, இலங்கையில் அதிகளவு முதலீடுகளை மேற்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்திய முதலீடுகள் அநேகமாக தனியார் துறையை சார்ந்தவையாக உள்ளன. இலங்கை முதலீட்டுச் சபையின் பிரகாரம் இலங்கையில் 50 சதவீதம் இந்திய கூட்டுத் தொழிற்துறை காணப்படுகிறது. அதேசமயம், 54 சதவீதமாக இந்திய சமத்துவ முதலீடு காணப்படுகிறது. சீனாவைப் போன்று இலங்கையில் இந்தியா பாரிய திட்டங்களை மேற்கொள்ளவில்லை. ஆனால், சீனாவைப் போன்று இல்லாமல் தனது சந்தையை இந்தியா இலங்கையில் விரிவுபடுத்தியுள்ளது. உதாரணமாக 2007 இல் இலங்கையிடமிருந்து 514 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை இந்தியா கொள்வனவு செய்தது. அதேசமயம், 2750 மில்லியன் டொலர் பொருட்களை இலங்கைக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. குறிப்பிடத்தக்களவில் இந்த ஆண்டுகளில் இந்தியாவின் விகிதாசார நிலைமையானது மேலும் முன்னேற்றம் அடையும் என்று கூறப்படுகிறது.