இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கும், இலங்கை படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் ஏற்க முடியாத அளவுக்கு மிகவும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான தனது விஜயம் குறித்து ஐக்கியநாடுகள் மன்றத்தின் பொதுச்சபைக்கு விளக்கிப் பேசிய அவர், இறந்தவர்களில் தொகையாக ஐ. நாவினால் எந்தவொரு எண்ணிக்கையும் வெளியிடப்படவில்லை என்றும், அப்படியாக ஐ.நாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டதாகக் கூறப்படுவது தவறு என்றும் கூறினார்.
அதேவேளை, இலங்கையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஐக்கிய நாடுகள் சபை குறைத்து வெளியிட்டது என்று கூறப்படுவதையும் தான் குறிப்பாக நிராகரிப்பதாகவும் அவர் கூறினார்.
அது பற்றி செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஐ.நா தலைமைச் செயலரின் சார்பில் பேசிய மிஷேல் மொண்டாஸ் அவர்கள், இலங்கையில் பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து ஐ நா பொதுச் செயலர் தனது கடுமையான கவலையை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதாக அவர் கூறினார்.
சில ஊடகங்களில் வெளியான தகவல்கள் குறித்து கருத்துக் கூறிய அவர், இறந்தவர்கள் எண்ணிக்கை இன்னமும் வெளியாகவில்லை என்றும், வெளியான பல தகவல்கள் ஐ.நாவில் இருந்து வெளியானவில்லை என்றும், பெரும்பாலானவை எமது வெளியீடுகளில் இருந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை அல்ல என்றும் கூறினார்.
அதே நேரம் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை என்னவாக இருந்த போதிலும், அது ஏற்கப்பட முடியாத அளவுக்கு அதிகமானது என்றும் பான் கீ மூன் சார்பில் பேசவல்ல அதிகாரியான மிஷேல் மொண்டாஸ் கூறினார்.
இலங்கை உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சர்வதேச நாடுகளால் விடுக்கப்படுகின்ற கோரிக்கையை இலங்கை அரசாங்கம் ஏற்க வேண்டும் என்று மே மாதம் 22 மற்றும் 23 ஆம் திகதி தான் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் ஐ. நாவின் தலைமைச் செயலர் கூறியுள்ளார்.
இந்த விடயத்தில் முழுமையான பொறுப்பேற்றலும், வெளிப்படைத்தன்மையும் தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மூலம்:BBC