இலங்கையில் உயர்வடைந்து செல்லும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பாலியல் துஸ்பிரயோகங்கள்…

23.09.2008

இலங்கையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் பாலியல் துஸ்பிரயோகச் சம்பவங்கள் உயர்வடைந்துள்ளதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
திருகோணமலை உப்புவெளி பிரதேச விடுதி ஒன்றில் வைத்து இளம் யுவதி ஒருர் மீது நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாலியல் வல்லுறவு மேற்கொண்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பைச் சேர்ந்த 18 வயது இளம் யுவதி ஒருவரே இவ்வாறு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் ஒரு சார்ஜன் ஆகியோர் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிரதேசத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆனந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
 
பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான குறித்த யுவதி தற்போது திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நான்கு பொலிஸ் அதிகாரிகளும் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இதேவேளை, சிங்கள பௌத்த மக்களின் புனித தளங்களில் பிரதானமானதாகக் கருதப்படும் அனுராதபுரம் ஸ்ரீ மா போதி விஹாரையில் வைத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
 
குடிபோதையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் பௌத்தர்கள் புனிதப் பிரதேசமாக மதிக்கும் போ மலுவவில் வைத்து பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக அனுராதபுர பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை எதிர்வரும் 3ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு அனுராதபுர மேலதிக நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
அண்மைக்காலமாக இவ்வாறான பல சம்பவங்கள் குறித்து ஊடகங்கள் மூலம் தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.