இலங்கையில் இம்மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரங்களில் கவலையளிக்கக்கூடிய வன்முறை இடம்பெற்று வருவதாக தேர்தலை கண்காணிக்கும் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
தவிர அரசு இயந்திரம் முறைதவறி தேர்தல் பணிகளில் பயன்படுத்தப்படுவதாகவும் அந்த அமைப்புகள் கூறுகின்றன.
தேர்தல் கண்காணிப்பாளர்கள் இதனை அறிவித்துக்கொண்டிருக்கும்போதேகூட, வேட்பாளர்களின் ஆதரவாளர்களிடையே மத்திய இலங்கையில் மோதல்கள் நடந்துள்ளன.
எதிர்கட்சியின் பெண் ஆதரவாளர் ஒருவர் செவ்வாயன்று சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். தேர்தல் வன்முறைகள் என்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பு கஃப்பே கூறுகிறது.
மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிராதான எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளரான சரத் ஃபொன்சேகா ஆகிய இருவர் தரப்பிலுமே அரச இயந்திரம் சட்டவிரோதமான வகையில் பயன்படுத்தப்படுகிறது என்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் கூறுகின்றன.
இலங்கையின் கிழக்கே பொலன்னறுவை நகரில் பணிபுரியும் பிபிசி சிங்கள சேவையின் பெண் செய்தியாளர் தக்ஷிலா தில்ருக்ஷி ஜெயசேனா, தேர்தல் பிரச்சாரக் மோதல் பற்றி செய்தி சேகரித்துக்கொண்டிருக்கும்போது ஆளுங்கட்சி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.
இந்த சம்பவம் குறித்து செய்தியை சேகரித்துவிட்டு வெளியேறும் போது, ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் என்று கூறப்படுபவர்களால் தஷிலா தாக்கப்பட்டு, அவரது செய்தி சேகரிக்கும் கருவி மற்றும் அவர் அணிந்திருந்த நகைகள் பிடுங்கப்பட்டதாக செய்திகள் கூறின.
காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு போலிஸ் பிரிவு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக போலிஸ் வட்டாரங்கள் கூறின.