இலங்கையில் அப்பாவித் தமிழர்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்துமாறு சிறிலங்க அரசிடம் வற்புறுத்துவது என பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அவசர ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் தற்போதைய நிலவரம் குறித்து விவாதிப்பதற்காக, பிரதமர் மன்மோகன்சிங் நேற்றிரவு உயர்மட்ட அவசர ஆலோசனைக் கூட்டத்தை தனது இல்லத்தில் கூட்டினார்.
இக்கூட்டத்தில் மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், அயலுறவு செயலர் சிவசங்கர் மேனன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இலங்கையில் போர்ப் நடந்து வரும் பகுதியில் நிலவும் சூழ்நிலை பற்றியும், அப்பாவி தமிழர்கள் மீதான ராணுவ தாக்குதலை முடிவுக்கு கொண்டு வருவது பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
ராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ள அப்பாவி தமிழர்களுக்கு தேவையான உணவு, மருந்துகள் மற்றும் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைப்பது பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடனடியாக போரை நிறுத்துமாறு சிறிலங்க அரசிடம் வற்புறுத்துவது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக, விரைவில் இலங்கை அரசிடம் இந்தியா அதிகாரப்பூர்வமாக கோரிக்கை விடுக்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கூட்டம் முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் நிகழ்வுகள் ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.
அங்கு அப்பாவி தமிழர்கள் தொடர்ந்து கொல்லப்படுவது உடனடியாக நிறுத்தப்படவேண்டும். அப்பாவி மக்களை பணய கைதிகளாக பிடித்து வைககும் காட்டுமிராண்டித்தனமான செயலை விடுதலைப் புலிகள் உடனே நிறுத்தவேண்டும்.
இப்பிரச்சனைக்கு அரசியல் மூலம் தான் தீர்வு காண வேண்டும். இதற்காக இந்தியா எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும். இந்த பிரச்சனை தொடர்பாக பிற நாடுகளின் அயலுறவுத்துறை அமைச்சர்களுடன் தொடர்புகொண்டு நான் விவாதித்து வருகிறேன் என்றார்.







