பிரித்தானிய காலனி ஆதிக்கத்திலிருந்து இலங்கை விடுதலை அடைந்த நாளாகக் கருதப்படும் மாசி மாதம் 4 ஆம் திகதி இலங்கையில் சுதந்திரதினம் கொண்டாடப்படுகின்றது. பிரித்தானிய ஏகாதிபத்தியம் தனது நாட்டிலிருந்தவாறே இலங்கை போன்ற நாடுகளில் அதிகாரம் செலுத்தலாம் என்று கருதிய வேளையில் தமது பிரதிநிதிகளிடம் ஆட்சியை ஒப்படைத்தனர் (04.02.1948). இவ்வாறான போலிச் சுதந்திரம் ஒன்றை இலங்கைக்கு வழங்கிய பிரித்தானிய அரசு, தேசிய இன ஒடுக்குமுறையையும் இனங்களிடையே பகைமையையும் ஏற்படுத்திவிட்டுச் சென்றது. பௌத்த சிங்கள மேலாதிக்க வாதத்தைத் தோற்றுவித்து தனது ஆளும் வர்க்கப் பிரதிநிதிகளின் கரங்களில் ஒப்படைத்த பிரித்தானியா, மறுபக்கத்தில் இந்துத்துவம் கலந்த தமிழ் அடிப்படைவாதிகளையும் வளர்த்துவிட்டது. இந்த சுதந்திர நாள் என்பது இலங்கை உழைக்கும் மக்களின் சுதந்திர நாளோ அன்றி ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் சுதந்திர நாளோ அல்ல. இந்தவகையில் சுதந்திர நாளை எதிர்க்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலும், யாழ்பாணக் கச்சேரிப் பகுதிகளிலும் கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டன, பல்கலைக் கழகத்தைச் சூழ இராணுவத்தினர் அதிகமாக நிறுத்தப்பட்டுள்ளனர்.