10.12.2008.
2009 ஆம் ஆண்டுக்கான புதிய வரவு செலவுத்திட்டத்தில் அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் கடந்த வருடத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை விட 38,935 மில்லியன் ரூபா குறைக்கப்பட்டு அது அரச செலவுகளுக்கு ஒதுக்கப்பட்டு மக்கள் மீது கடுமையான வரிச்சுமை சுமத்தப்பட்டுள்ளது என்று அபிவிருத்தி கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கொழும்பு தேசிய நூலகத்தில் அந்த அழைப்பு நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் சட்டத்தரணி நந்தமுருத்தடுவேகம மற்றும் ஹாசான் திலகரட்ண ஆகியோர் கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் பேசுகையில்;
கடந்த நவம்பர் 6 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டமானது யானை விழுங்கிய விளாம்பழம் மாதிரியாகும்.
அதாவது மேலாக ஏதோ ஒன்று இருப்பது போன்று காட்டினாலும் உண்மையில் மக்களுக்கு நன்மைபயக்கும் எந்தவொரு திட்டமுமில்லை.
இதேவேளை, கடந்த வருட வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி இவ்வருடம் குறைக்கப்பட்டுள்ளது.
ஆனால் மிஹின் ஏயாருக்கு கூடுதலான நிதி இம்முறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வரவு செலவு திட்டத்தை ஒட்டுமொத்தத்தில் பார்க்கப் போனால் முக்கிய அபிவிருத்தித்திட்டங்களை புறக்கணித்து தமது சுயநலத்துக்கு அதிகரிக்கப்பட்டதை காணலாம்.
பொதுவாக வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்படும் போது கடந்த வருட முன்னேற்றம் குறித்து பேசப்படுவது வழக்கமாகும். இம்முறை அது செய்யப்படவில்லை. இதன் மூலம் கடந்த வருட வரவு செலவு திட்டம் தோல்வியென்பதை மூடிமறைப்பதாகவே தோன்றுகின்றது.
இம்முறையும் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டயோசனையில் எதிர்பார்க்கப்பட்ட முன்னேற்றம் எதுவும் இல்லாத நிலையில் இலக்கை எட்டுவது பாரிய இடைவெளியை உருவாக்கியுள்ளது.
கடந்த வருடம் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 23 வீதம் மாத்திரமே செலவிடப்பட்டுள்ளது. ஏனைய நிதி முடக்கப்பட்டுள்ளது.
நாட்டை அபிவிருத்தி செய்வதை விட்டுவிட்டு பெரிய அமைச்சரவைக்கு செலவிடுவதற்கே இந்த நிதியை அரசு பயன்படுத்தியுள்ளது.
குறிப்பாக சுகாதார அமைச்சுக்கு இவ்வருடத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 47 வீதம் பயன்படுத்தப்பட்டது. மிகுதி 53 வீதம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல மனித வள அபிவிருத்திக்கு 17 வீதமும் உற்பத்தி சேவை சூழல் நடவடிக்கைக்கு 17.5 வீதமும் விஞ்ஞான தொழில்நுட்பத்திற்கு 15.3 வீதமும் மட்டுமே செலவிடப்பட்டு மிகுதி ஆட்சியாளர்களின் தேவைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டுக்கு சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் ஆரோக்கியமானதாக காண முடியவில்லை.
அதேநேரம் 2008 ஆம் ஆண்டு ஜனாதிபதி செலவினத்தை விட இம்முறை 1,212 மில்லியன் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கின்ற போது ஜனாதிபதி செலவினம் 2009 க்கு 6000 மில்லியன் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஏனைய அமைச்சு திணைக்களங்களுக்கு ஒதுக்கப்பட்டவற்றில் குறைக்கப்பட்டே ஜனாதிபதி தனக்கான நிதியை அதிகரித்துள்ளார்.
இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் கல்வியமைச்சுக்கு 640 மில்லியனும், போக்குவரத்து அமைச்சுக்கு 7,458 மில்லியனும், குறைக்கப்பட்டுள்ளது.
சிறுவர் பாதுகாப்பு மகளிர் விவகாரத்துக்கு கடந்த வருடம் 518 மில்லியன் ஒதுக்கப்பட்ட போதும் இம்முறை 240 மில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறே தொழிற்பயிற்சி தொழில்நுட்பத்துக்கு 468 மில்லியனும், ஏற்றுமதி அபிவிருத்தி சர்வதேச வர்த்தகத்துக்கு 170 மில்லியனும் கிராமிய கைத்தொழில் சுய தொழில் வேலைவாய்ப்புக்கு 144 மில்லியனும் குறைக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் சுமக்க முடியாத வரிச்சுமையை இந்த அரசு மக்கள் மீது சுமத்தியுள்ளதெனவும் அவர்கள் தெரிவித்தனர்.