இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களால் இலங்கையில் தோன்றியிருக்கும் மோசமான நிலை குறித்து சர்வதேச விசாரணைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மனித உரிமைகள் சபை உடனடியாக மேற்கொள்ளவேண்டுமென சுயாதீனமான ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழு கோரிக்கைவிடுத்துள்ளது.
“இலங்கையில் அண்மைய மாதங்களில் ஏற்பட்டிருக்கும் நிலைமைகள் மற்றும் தற்பொழுது அங்கு காணப்படும் சூழ்நிலை போன்றவற்றை விசாரிப்பதற்கு சர்வதேச ஆணைக்குழுவொன்றை அமைப்பது அவசியமானது” என சுகாதாரத்துக்கான உரிமை, உணவுக்கான உரிமை, சுகாதாரம் மற்றும் நீருக்கான உரிமை போன்ற விடயங்களைக் கையாழும் நிபுணர்கள் குழு இணைந்து விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்பொழுது காணப்படும் மனிதநேய நிலமைகள் முக்கியமாகக் கவனத்தில் கொள்ளப்படுவேண்டியவையெனவும், மோதல்களில் கொல்லப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை மாத்திரமன்றி, நிலைமைகள் குறித்த வெளிப்பாட்டுத் தன்மை மிகவும் குறைவாக இருப்பதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியுள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
“கடந்த மூன்று மாதங்களில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டமை சரியான ஒரு காரணமாக அமையும். எனினும், கொல்லப்பட்ட மக்கள் குறித்து இலங்கை அரசாங்கம் சரியான தகவல்களை இன்னமும் வெளியிடவில்லை. அத்துடன், ஊடகவியலாளர்களோ மனிதநேயக் கண்காணிப்பாளர்களோ அங்கு செல்லமுடியாதநிலை காணப்படுகிறது” என அந்தக் குழுவைச் சேர்ந்த அல்ஸ்டன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 196,000 பேர் இடம்பெயர்ந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் மனிதநேய விவகாரங்களுக்கான இணைப்பகம் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்ததுடன், இன்னமும் 50,000ற்கும் அதிகமானவர்கள் மோதல் பகுதிகளில் சிக்கியிருக்கலாமெனவும் சந்தேகம் வெளியிட்டிருந்தது.
“மோதல் பகுதிகளில் சிக்குண்டிருக்கும் மக்களுக்குப் போதியளவு உணவுப் பொருள்களோ அல்லது மருந்துப் பொருள்களோ செல்வதில்லை. அம்மக்களுக்கு நீரோ அல்லது சுகாதார வசதிகளோ இல்லை. அவர்கள் மரணத்திலிருந்து தப்புவதும், காயங்கள் ஏற்படாமல் தப்புவதும் மோதல்களில் ஈடுபட்டிருக்கும் இரண்டு தரப்பிலுமே தங்கியுள்ளது” அந்தக் குழு வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.