04.11.2008.
நாணய மிகை மதிப்பீடு, வெளிநாட்டுக் கடனில் தங்கியிருத்தல், வரவு செலவுத் திட்டத்தில் சீரான முகாமைத்துவமின்மை என்பனவற்றால் இலங்கையின் பொருளாதாரம் பாரதூரமான அபாயத்தில் சிக்கியிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.
2008 ஆம் ஆண்டு முடிவில் பணவீக்கம் 23.9 சதவீதமாக இருக்குமென இலங்கை தொடர்பாக வெளியிட்ட வருடாந்த மதிப்பீட்டு அறிக்கையில் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
பரும்படியாக்க பொருளாதார சமச்சீரற்ற தன்மை, ஐந்தொகைக் கூற்றின் நிலைமை, உயர் பணவீக்கம், வெளிமட்ட நிதி அழுத்தங்கள் என்பன பொருளாதார உறுதிப்பாட்டுக்கு பாரதூரமான நெருக்கடிகளை ஏற்படுத்தியிருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்டோபரில் பணவீக்கம் 23.4 சதவீதமாக இருந்தது.
நுகர்வுப் பொருட்களின் விலைகளை தளர்த்துதல், அரச செலவினத்தைக் கட்டுப்படுத்துதல், நிதி மேற்பார்வையை அதிகரித்தல், உள்நாட்டு நாணய அழுத்தத்தை இல்லாமல் செய்தல் போன்ற மறுசீரமைப்புகளை மேற்கொள்ளுமாறு சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.
உள்ளூர் கூட்டமைப்பு திட்டங்களுக்காக பல மில்லியன் டொலர்களை திரட்டுவதற்காக அக்டோபரில் அரசாங்கம் வெளியிட்டிருந்த திட்டத்திற்கும் கடுமையான எச்சரிக்கையை சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ளது.
2 வருட பங்கீட்டுக் கடனாக 300 மில்லியன் டொலர்களை திரட்டும் யோசனை தொடர்பாக தற்போது மத்திய வங்கி மதிப்பீடுகளை மேற்கொண்டு வருவதுடன் வெளிநாட்டு வர்த்தக வங்கியிடமிருந்து 150 மில்லியன் டொலர்களை கடனாக பெறுவதற்கும் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றது.
வெளிவாரி நிதி திரட்டுதல் அதிகரித்து வரும் நெருக்கடியாகும்.சர்வதேச முதலீட்டுத் துறை வீழ்ச்சியால் இலங்கையின் வெளிநாட்டு கணக்குகள் நெருக்கடியான நிலையில் உள்ளன என்று சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.
பொருளாதார வளர்ச்சி வீதமும் வீழ்ச்சியடைந்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக் காட்டியுள்ளது. 2007 இல் 6.8 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி வீதம் 2008 இல் 6.1 சதவீதமாகவும் 2009 இல் 5.8 சதவீதமாகவும் இருக்குமென நிதியம் கூறுகிறது.
ஜூலையில் அந்நியச் செலாவணி கையிருப்பு 3.4 பில்லியன் டொலர்களாக வீழ்ச்சி கண்டிருந்தது. இந்த வாரம் 2.6 பில்லியன் டொலர்களாக மேலும் வீழ்ச்சி கண்டுள்ளது.
கடந்த ஜூனில் 18 சதவீதம் அதிகமாக நாணயப் பெறுமதி மிகை மதிப்பீடு செய்யப்பட்டிருந்ததை வங்கி புள்ளி விபரங்கள் வெளிப்படுத்தின.
சர்வதேச நிதி நெருக்கடியால் இலங்கையின் ரூபா மதிப்பீட்டு அரச பிணை முறிகளை வெளிநாட்டு கொள்வனவாளர்கள் திரும்பப் பெற முயற்சிக்கும் போது உள்நாட்டு நாணயத்துக்கு அதிகளவு அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன.