2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட ஒதுக்கீட்டில் பாதுகாப்புக்கான செலவினம் 215 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த வருடத்தினை விட 6 சதவீத அதிகரிப்பாகும். யுத்தம் முடிவடைந்துவிட்ட நிலையில் பாதுகாப்பிற்காக பெருமளவு நிதி ஓதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. பெற்றுக்கொண்ட ஆயுதங்கள், இராணுவ உபகரணங்களுக்கான கொடுப்பனவுகளை செலுத்த வேண்டியிருப்பதனாலும் பாதுகாப்புச் செலவினத்திற்கு அதிகளவு தொகையை ஒதுக்க வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்டுகிறது.
2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் பிரதமர் சமர்ப்பித்தபோதே மேற்படி தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாராளுமன்றத்தில் அசவசரகால சட்ட நீடிப்பு பிரேரணையை சமர்ப்பித்துப் பேசிய பிரதமர், உலகம் முழுவதும் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களை ஒன்று திரட்டி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்க மேற்கொள்ளப்பட்டு வரும் அணியினர் தொடர்பாக சர்வதேச பொலிஸாருடன் ஒன்றிணைந்து பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாகவும், விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பையும் அதன் செயற்பாடுகளையும் முழுமையாக தோற்கடிப்பதே எதிர்காலத்தில் பிரதான சவாலாக இருக்கப்போகிறது எனவும் தெரிவித்திருக்கிறார். கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களில் எஸ்.எம்.எஸ். தகவல்கள், கையடக்கத் தொலைபேசி வலையமைப்பு ஊடாக உறுப்பினர்களை ஒன்றிணைக்கும் இயக்கமொன்று உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் மேற்கொள்ளப்படுகிறது என்பது தெளிவு எனவும் பிரதமர் தெரிவித்திருக்கிறார்.