இலங்கையின் கிராமமொன்றில் யுத்தம் மட்டுமே தொழில்வாய்ப்பு

தென்னிலங்கையில் இயத்திகேவேவா என்ற கிராமம் தொழிற் சாலைகளைக் கொண்டிருந்தாலும் அங்குள்ள இளைஞர்கள் படையணியில் இணைவதனையே பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர். நாட்டின் தெற்கு எல்லையிலிருந்து 27 மைல் தொலைவில் அமைந்துள்ளது இக்கிராமம், இங்குள்ள இளைஞர்கள் இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸ் படை ஆகியவற்றிலேயே இணைந்துள்ளனர்.

பொலிஸ் படையில் கடமையாற்றும் இக்கிராமத்தைச் சேர்ந்த 38 வயதுடைய சிசிர சேனாரட்ண என்பவர் தெரிவிக்கையில் ;

நாம் ஒரு வேலையைத் தேட ஆரம்பித்தால், மிகவும் இலகுவானவழியாக படையணியில் சேர்வதொன்றுதான் உள்ளதென கூறினார்.

இதேவேளை இவருடைய இருசகோதரர்கள் இராணுவத்தில் கடமையாற்றும் அதேநேரம் மற்றுமொரு சகோதரர் பொலிஸ் படையில் கடமையாற்றுகின்றார்.

இக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான கதிரிகே என்பவர் தனது தொழிலில் நட்டம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இராணுவத்தில் இணைந்துள்ளார்.

விவசாயம் மேற்கொண்ட காலத்தில் மண்ணாலான குடிசை ஒன்றிலேயே வசித்துவந்த இவர்களுக்கு மூன்று பிள்ளைகளும் உள்ளதுடன் அவர்களைக் கற்பிப்பதற்கும் கடினப்பட்டுள்ளார்.

இதேவேளை மண்ணெண்ணெய் விளக்கின் மூலமே இவர்கள் இரவு நேரங்களில் வெளிச்சத்தை பெறுகின்றனர்.

இக்குடும்பத்தலைவி கதிரிகே லீலாவதி தெரிவிக்கையில்; நாம் எமது பிள்ளைகளைக் கற்பிக்க மிகவும் கடினப்பட்டுள்ளோம்.

அத்துடன் வாரத்தில் ஒரு தடவைதான் எமக்கு இறைச்சி உண்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.

ஆனால் தற்போது எனது கணவர் இராணுவத்தில் இணைந்ததன் பின்னர் கிடைக்கும் வேதனம் மூலம் 2 படுக்கை அறைகள் கொண்ட கல்வீடு ஒன்றை எம்மால் நிர்மாணிக்க முடிந்தது.

அத்துடன் இவ்வீட்டிற்கான மின்சாரம், தொலைபேசி, தண்ணீர் இணைப்புகள் ஆகியனவும் பெறப்பட்டுள்ளதுடன் கலர் தொலைக்காட்சிப் பெட்டியொன்றும் உள்ளது.

யுத்தம் அதிகரித்திருந்தாலும் இதனைவிட வேறு தெரிவு எமக்கு இல்லையெனத் தெரிவித்தார்.

இவர்களின் பிள்ளைகளில் ஒருவர் இராணுவத்திலும் மற்றவர் கடற்படையிலும் எஞ்சியவர் ஊர்காவல் படையிலும் கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

1161 குடியிருப்பாளர்களைக் கொண்ட இக்கிராமத்தில் 175 பேர் படைகளில் இணைந்துள்ளதுடன் இவர்கள் மாதத்துக்கு 230 முதல் 280 வரையான அமெரிக்க டொலரினை மாதச் சம்பளமாகப் பெறுகின்றனர்.