“சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிப் போரின்போது பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை தொடர்ந்து விடுத்த கோரிக்கைகள் பலவற்றுக்கு சிறிலங்கா அரசு பதிலளிக்கவே இல்லை” என ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான தலைவர் நவநீதம்பிள்ளை தெரிவித்தார்.
போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து அனைத்துலக விசாரணை வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் கூட சிறிலங்கா அரச தலைவரிடம் கோரிக்கை விடுத்தார் என நவநீதம்பிள்ளை பிறசல்சில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்தார்.
“இந்த விடயம் குறித்துத் தான் பொறுப்புடன் நடந்துகொள்வார் என சிறிலங்கா அரச தலைவர் ஐ.நா. பொதுச் செயலாளருக்கு உறுதி அளித்திருந்தார். அதனை அவர் நிறைவேற்றுகிறாரா என்பது குறித்து அறிவதற்கு பொதுச் செயலாளருடன் நாங்கள் நெருங்கிச் செயற்படுகின்றோம்.
உறுதியளித்தபடி சிறிலங்கா அரச தலைவர் இந்த விடயத்தில் எத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளார் என்பதை நாங்கள் அறியவேண்டும்” என்றார் நவநீதம்பிள்ளை.
அனைத்துலக பட்டினிக்கு எதிரான நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர்கள் கிழக்குப் போரின்போது கொல்லப்பட்டமை குறித்து சிறிலங்கா நடத்திய விசாரணைகளைச் சுட்டிக்காட்டிய நவநீதம்பிள்ளை, அந்தக் கொலைகள் மிக மோசமானவையாக இருந்தபோதும் அது குறித்து தேசிய அளவில் நடத்தப்பட்ட விசாரணைகள் கைவிடப்பட்டுள்ளன என்பதையும் குறிப்பிட்டு கூறினார்.
“மிக முக்கியமான குற்றங்கள் குறித்து அவர்கள் நடத்திய விசாரணைகள் குறித்து இதுவரை நல்ல பதிவுகள் எவையும் இல்லை. தற்போது எந்த வகையிலான விசாரணை முறைகள் அவர்களுக்கு ஏற்புடையதாக இருக்கும் என்பது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளருடன் நான் ஆராய்ந்து வருகின்றேன். ஆனாலும் இவற்றை சிறிலங்கா அரசு நிராகரிக்கின்றது என்பதுதான் நான் இறுதியாகச் சொல்லக்கூடியது” என நவநீதம்பிள்ளை மேலும் தெரிவித்தார்.
சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்து அறிந்துவரும் பொருட்டு அந்த நாட்டுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு நவநீதம்பிள்ளை திட்டமிட்டுள்ளாரா என ஊடகவியலாளர்கள் வினவினர். அதற்குப் பதிலளித்த அவர், தான் சிறிலங்கா சென்றால் தன்னை அனுமதிக்கப் போவதில்லை என்று ஐ.நா. பொதுச் செயலாளரிடமும் பொது அரங்குகளிலும் சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது என்றார்.