இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சிங்கள அரசை கண்டித்தும், இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தியும் வரும் 12ம் தேதி நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடத்துவதற்காக ஈழத் தமிழர் தோழமைக் குரல் அமைப்பினர் டெல்லி புறப்பட்டு சென்றனர்.
இலங்கையில் நடைபெறும் இனப் படுகொலைகளுக்கு எதிராக மாணவர் கூட்டமைப்பு, படைப்பாளிகள், கலைஞர்கள், மனித உரிமைப் போராளிகள், பெண்கள் அமைப்பினர், பத்திரிகையாளர்கள், திருநங்கைகள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், வழக்கறிஞர்கள், உழைக்கும் மக்கள் அனைவரும் இணைந்து ‘ஈழத் தமிழர் தோழமைக் குரல்’ என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
கடந்த 1ஆம் தேதி நடந்த இந்த அமைப்பின் கூட்டத்தில், டெல்லி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கும் வரும் 12ஆம் தேதி, நாடாளுமன்றம் முன்பு பேரணி, மறியல் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் ஆகியவை நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, போராட்டம் நடத்துவதற்காக ஈழத் தமிழர் தோழமைக்குரல் அமைப்பினர் இன்று புதுடெல்லி புறப்பட்டு சென்றனர்.
இந்த அமைப்பை சேர்ந்த லீனா மணிமேகலை, வெங்கடாசலம், படைப்பாளிகள் சுகிர்தராணி, அஜயன்பாலா, மாலதி மைத்ரி மற்றும் மாணவர் கூட்டமைப்பைப் சேர்ந்த 60 பேர் உட்பட மொத்தம் 150 பேர் சென்னையில் இருந்து ரயிலில் டெல்லி புறப்பட்டு சென்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு இக்குழுவினரை வழியனுப்பி வைத்தார்.