தமிழக மீனவரை இலங்கை கடற்படை சுட்டுக்கொன்றுள்ளது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து டெல்லியில் உள்ள இலங்கை தூதரை இன்று நேரில் வரவழைத்து விளக்கம் கேட்டது இந்திய அயலுறவுத் துறை அமைச்சகம்.
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்திலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நேற்று காலை துப்பாக்கியால் சுட்டதில் பாண்டியன் என்ற மீனவர் கொல்லப்பட்டார்.மேலும் இரண்டு பேர் காயம் அடைந்தனர்.
மீனவர் ஒருவர் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு ஜெகதாப்பட்டினத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இப்பிரச்சனை இன்று தமிழக சட்டசபையிலும் எதிரொலித்த நிலையில், தமிழக மீனவர்களை சுட்டு கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது போன்ற செயலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் கூறி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் கருணாநிதி தந்தி அனுப்பியிருந்தார்.
இந்நிலையில் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து விளக்கமளிக்க நேரில் வருமாறு டெல்லியில் இலங்கை தூதர் பிரசாத் கரியாவாசமுக்கு இந்திய அயலுறவுத் துறை அமைச்சகம் அழைப்பாணை அனுப்பியது.
இதனைத் தொடர்ந்து இந்திய அயலுறவுத் துறை அமைச்சகத்திற்கு நேரில் வந்த கரியாவாசாமிடம், தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு இந்தியா தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் வெளியே வந்த கரியாவாசம் செய்தியாளர்களிடம் பேசுகையில், துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் தாங்கள் தாங்கள் இல்லவே இல்லை என்று இலங்கை கடற்படையினர் மறுத்துள்ளதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்றும் மறுப்பு தெரிவித்திருப்பதாக கூறினார்.
இருப்பினும் இதுகுறித்த புகார் வந்துள்ளதால் அதுகுறித்து விசாரிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
டெல்லியில் இன்று இந்திய அயலுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக இலங்கை தூதரகத்திடம் கடுமையான ஆட்சேபத்தை தெரிவித்துள்ளதாகவும், இதுபோன்ற சம்பவங்களை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்றும் அதில் கூறியுள்ளது.
இது வரை நூற்றுக் கணக்கில் மீனவர்கள் கொலைசெய்யப்பட்டும் நாளந்தம் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட போதும் இந்திய அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இலங்கை இனப்ப்படுகொலைக்கும் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கும் இந்திய அரசு முழுமையான ஆதரவு வழங்கி வந்தது.
தேர்தல் நெருங்கும் காலப்பகுதியில் இந்திய தமிழ்நாடு அரசுகள் நடத்தும் நாடகத்தின் ஒரு பகுதியாக இது கருதப்படுகிறது. மறு புறத்தில் தமிழக – இலங்கை மீனவர்களிடையே முரண்பாட்டை வளர்க்கும் நோக்கிலேயே இவ்வாறான கொலைகள் பயன்படுத்தப்படுகின்றன.







