இலங்கை இராணுவம் மேற்கொண்ட போர்க் குற்றங்கள் ,பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கப்பட்டமை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகள் மனித உரிமைகள் பேரவையின் நம்பகத் தன்மை குறித்து சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமையும் என சுட்டிக்காட்டியுள்ளது.
மனித உரிமை பேரவையினால் வழங்கப்பட்ட இந்த தீர்மானம் யதார்த்தத்திற்கு புறம்பானதென்பதே ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்படாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இலங்கைக்கு எதிராக மேலைத்தேய நாடுகள் சில இணைந்து அறிக்கையொன்றை முன்வைத்தமையால் இலங்கை முன்வைத்த அறிக்கையில் சில மாற்றங்கள் சேர்க்கப்பட்ட பின்னரே ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
“மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதநேயப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட அமர்வில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்று கிடைக்கும் என எதிர்பார்க்கமுடியாது என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலையடைகிறது” என அது வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த சில விடயங்கள் கலந்துரையாடப்படாமல் இலங்கையின் அறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளன. இது எமக்குக் கவலையளிக்கிறது” என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது, இதனை மனித உரிமைகள் பேரவை ஏற்றுக்கொண்டுள்ளது என மனித உரிமைகள் பேரவையின் தலைமைப் பதவியை வகிக்கும் செஸ் கூறியுள்ளது.