இலங்கைக்கான இராணுவ உதவிகள் நிறுத்தப்படும் : சீனா தீர்மானம்

எண்ணெய் வள ஆய்வுகள் தொடர்பாக இந்தியாவுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை முடிவுக்குக்கொண்டுவர இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் இராணுவ உதவிகளை இடைநிறுத்தப்போவதாக சீன அரசாங்கம் எச்சரித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் வள ஆய்வுகளை மேற்கொள்வது தொடர்பாக கடந்த திங்கட்கிழமை இந்தியாவின் ‘கெயன்’ நிறுவனமும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தனர்.

இலங்கையில் எண்ணெய் வள ஆய்வுப் பணிகளை சீனாவிடம் கையளிப்பதற்கே முன்னர் இலங்கை இணங்கியிருந்தது. எனினும், தற்பொழுது இந்திய நிறுவனத்திடம் இந்தப் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

2007ஆம் ஆண்டு பீஜிங்கால் இலங்கைக்கு வழங்கப்பட்ட போர் உதவிகள் 37.6 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்தன. இதன்மூலம் இலங்கைக்கு அதிகளவான உதவிகளை வழங்கும் நாடான ஜப்பானைவிட ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கூடுதலான உதவிகளை சீனா வழங்கியிருந்தது.

இதற்கும் மேலதிகமாக நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையம், ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் உள்ளிட்ட பாரிய திட்டங்களையும் சீனா இலங்கையில் முன்னெடுத்துவருகிறது. இதனைக் கருத்தில்கொண்டு மன்னார் எண்ணெய் வள ஆய்வுகளை சீனாவுக்கு வழங்க இலங்கை தீர்மானித்திருந்தாகவும், எனினும், இதில் இந்தியா இடையில் தலையிட்டதாகவும் ‘லங்கா நியூஸ் பேப்பர்’ செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவிடமிருந்து ஆயுதங்கள் கொள்வனவை நிறுத்துமாறு கோரியிருந்த இந்தியா, இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வைக் கைவிட்டு, சமாதானமான தீர்வொன்றை எட்டுமாறு கோரிக்கை விடுத்திருந்தது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சிறி விஜய் சிங் ஆகியோர் சில வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்துசென்ற நிலையில் எண்ணெய் வள ஆய்வு தொடர்பாக இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தது.

இந்த விடயம் தொடர்பாக சீனா, புதுடில்லியுடன் இராஜதந்திர ரீதியான பேச்சுவார்த்தையில் ஈடுபடவிருப்பதாகவும் அந்த ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.