இறுதி கட்டப் போரின் போது ஐந்து வயதுக்கும் உட்பட்ட குழந்தைகள் பெருமளவில் காயமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு மெனிக்பாம் அகதி முகாம் வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் பிரான்ஸின் எம்.எஸ்.எவ். மருத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது.
எம்.எஸ்.எவ். மருத்துவ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
‘வவுனியாவில் உள்ள மெனிக்பாம் முகாமில் 150 கட்டில்கள் கொண்ட வைத்தியசாலையில் இரண்டு சத்திர சிகிச்சை அறைகள் உள்ளன. இங்கு மே மாதத்திற்குப் பின்னர் சேர்க்கப்பட்ட 600 பேரில் பெரும்பாலானவர்கள் ஐந்து வயதிற்கு உட்பட்டவர்கள். இந்த வைத்தியசாலையில் 300 சத்திரசிகிச்சைகளுக்கு மேல் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் அதிகளவானவை யுத்த காயங்கள் தொடர்பானவை. வெடிகுண்டு, துப்பாக்கி சன்னங்களை அகற்றுவதற்காகவே இவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. வவுனியாவில் உள்ள வைத்தியசாலையில் நான்காயிரம் சத்திர சிகிச்சைகள் யுத்த காயங்களுக்காக மேற்கொள்ளப்பட்டவை. இலங்கைச் சுகாதார அமைச்சுடன் இணைந்து வவுனியாவில் செயற்படும் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு கடந்த ஐந்து மாதங்களில் 5 ஆயிரம் சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டுள்ளது.’ எனக் கூறப்பட்டுள்ளது.