ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் எல்லோருடைய கவனமும் குவிந்துள்ள நிலையில் நாணயச் சந்தையில் இலங்கை ரூபாய் நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. இறக்குமதியாளர்களினால் அமெரிக்க டொலரின் கேள்வி அதிகரித்ததால் இலங்கை மத்திய வங்கியானது 40 மில்லியன் டொலர்களை சில அரச வங்கிகளுக்கு விற்பனை செய்துள்ளது. இதனால் 123.40 ரூபாவாக இருந்த அமெரிக்கடொலர், 121.40 ஆக சற்று கீழிறங்கி, மேலதிக வீழ்ச்சிக்குச் செல்லாமல் தடுக்கப்பட்டுள்ளது.
இத்தகைய ரூபா நாணய வீழ்ச்சியை தடுப்பதற்காக நாணயக் கையிருப்பிலிருந்து டொலர்களை விற்பனை செய்வதால், சென்மதி நிலுவை நெருக்கடி அதிகரிக்கும் வாய்ப்பு அதிகமாக விருப்பதாக நாணயச் சந்தைத் தரகர்கள் கவலை கொள்கிறார்கள். அதாவது நாட்டின் பொருளாதார இயங்கு நிலைக்கு ஆதாரமாகக் கருதப்படும் மசகு எண்ணெய் இறக்குமதிக்கான நிதிக்கு, திறைசேரியில் அமெரிக்க டொலர் அல்லது தங்கம் இருக்க வேண்டும்.
அவற்றை ரூபாய் நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியைத் தடுப்பதற்காகப் பயன்படுத்துவது, எண்ணெய் இறக்குமதியில் பாதிப்பினை ஏற்படுத்திவிடும்.
ஈரான் வங்கிகளை பொருளாதாரத் தடை மூலம் மேற்குலகம் முடக்குவதால் தங்கத்தில் தன்னோடு வியாபாரம் செய்யலாமென அந்நாடு மாற்று வழிமுறைகளைக் காண்பித்தாலும் எண்ணெய் கொள்வனவு செய்பவரிடம் போதியளவு தங்கம் கையிருப்பில் இருக்க வேண்டும்.
இலங்கையைப் பொறுத்தவரை இது சிக்கலான விவகாரம்.
அதேவேளை, யூரோ வலய நாடுகளின் இறக்குமதித் திறனை அதிகரிப்பதற்கு, பொருளாதார நெருக்கடி நிலைமைத் தவிர்ப்பு என்கிற அடிப்படையில் கடந்த டிசெம்பரில் 489 மில்லியன் யூரோக்களை வங்கிகளுக்கு கடனாக வழங்கிய ஐரோப்பிய மத்திய வங்கி, மேலதிகமாக 530 பில்லியன் யூரோக்களை ஒரு சதவீத வட்டிக்கு 3 வருட கடனடிப்படையில் வழங்கவுள்ளது.
இலங்கையிலும் இது போன்ற கடன் கொடுப்பனவுகளை மத்திய வங்கி மேற்கொள்ளாமல், நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த திறைசேரி டொலர்களை விற்கும் மாற்று உபாயங்களை பிரயோகிக்கிறது.
அதேவேளை, எண்ணெய் மற்றும் மின்சாரக் கட்டிட உயர்வால் மக்கள் மத்தியில் போராட்டங்கள் முனைப்புப் பெறுவதைக் காணக் கூடியதாகவிருக்கிறது.
இதனைத் திசை திருப்புவதற்கு மனித உரிமைப் பேரவையில் மேற்குலகால் கொண்டுவர உத்தேசித்துள்ள பிரேரணைக்கு எதிராக மக்களை அணி திரட்டி போராட முற்படுகிறது அரசு.
அரசால் உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு கூறுவதை,
இலங்கைக்கு எதிரான சதி முயற்சி என்று சொல்வது வேடிக்கையாகவிருக்கிறது.
அதாவது ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை நிராகரித்த இலங்கை அரசு, தன்னால் உருவாக்கப்ட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகிக்க முற்படும் சுய முரண்பாட்டுப் போக்கினையும் காணக் கூடியதாகவுள்ளது.
இருப்பினும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை தாம் நிறைவேற்றி வருவதாகக் கூறுவதோடு, அதனை மையப்படுத்தி ஒரு தீர்மானம் தேவையில்லை என்பதே அரச தரப்பு வாதம்.
ஆனால் பேரவையிலுள்ள 47 நாடுகளுக்கு, உத்தேச பிரேரணைக்கு ஆதரவு கோரி கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் இரா. சம்பந்தன் அனுப்பிய கடிதத்தில் பரிந்துரையிலுள்ள நான்கு முக்கிய விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
வட கிழக்கு இராணுவ மயமாக்கலை விரைந்து அகற்றுதல், துணை இராணுவக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் குறித்த விசாரணை, தகவல் உரிமைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் என்பதோடு பொறுப்புக் கூறும் கடப்பாடு என்பன அதில் உள்ளடங்குகின்றன.
ஆனாலும் இறுதிப் போர் காலத்தில் நிகழ்ந்த இனப்படுகொலை குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது இங்கு குறிப்பிடப்படவில்லை.
வெள்ளியன்று மனித உரிமைப் பேரவையில் உரையாற்றிய அமெரிக்கப் பிரதிநிதியும், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை வரவேற்றதோடு நிரந்தர அமைதியை நிலைநாட்ட, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றபபட வேண்டுமெனக் கூறியுள்ளார்.
ஆனால், தனது கூட்டத் தொடரிற்கான அறிக்கையை வெளியிட்டு உரை நிகழ்த்திய மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார், நிபுணர் குழு அறிக்கையை குறிப்பிட்டதோடு, ‘முழுமையான பொறுப்புக் கூறல்’ என்கிற சொல்லாடலையும் அவர் அழுத்திக் கூறியிருந்தார்.
இலங்கையைப் பொறுத்தவரை பரிந்துரைகள், பொறுப்புக் கூறல் என்பவற்றை தம்மீது சுமத்தப்படும் அழுத்தங்களாகப் பார்க்கின்றது.
தமது அறிக்கையை வைத்து உருவாக்கப்படும் பிரேரணை தீர்மானமாகி, இறுதியில் சர்வதேச சுயாதீன விசாரணை என்கிற பொறிக்குள் தம்மை மாட்டி விடுமோ என்பது தான் இலங்கை ஆட்சியாளரின் அச்சம்.
ஆகவே, எந்தவிதமான தீர்மானமும் தனக்கெதிராக மேற்கொள்ளப்படக் கூடாதென்பதில் இலங்கை உறுதியாக இருப்பதன் பின்புலக் காரணி இதுவாக இருக்க முடியும். தீர்மானமொன்று வராமல் தடுப்பதற்கு நாடாளுமன்றத் தெரிவுக் குழு அமைக்கின்றோம் என்பதோடு, ஆணைக்குழுவின் அறிக்கையில் சகலவிதமான பொறுப்புக் கூறலும் உள்ளடக்கப்பட்டிருப்பதாக கூட்டத் தொடக்கத்தில் இலங்கைப் பிரதிநிதி, அமைச்சர் மஹிந்த சமரசிங்க வலியுறுத்தினாலும், வெள்ளியன்று உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி ஆணையாளரின் கருத்தினை ஆதரித்தார்.
ஆனாலும், இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகள், பரிந்துரைகளை நிறைவேற்றவும், உள்நாட்டில் அதற்கான பொறிமுறைகளை உருவாக்கவும் இலங்கைக்கு கால அவகாசம் வழங்க வேண்டுமெனக் கூற ஆரம்பித்திருப்பதைக் கவனிக்க வேண்டும்.
வெளி அழுத்தம் இல்லாமல் உள்நாட்டிலேயே தீர்வு காண முற்படும் இலங்கைக்கு ஆதரவு கொடுக்க வேண்டுமென, மனித உரிமை பேரவையை நோக்கி வேண்டுகோள் விடுத்தார் பாகிஸ்தான் பிரதிநிதி.
ஆகவே புவிசார் அரசியலில் இரு முகாம்களாக பிளவுபுட்ட நாடுகள், இலங்கை விவகாரத்தில் தமது நிலைப்பாட்டினை வெளிப்படையாகத் தெரிவித்த நிகழ்வுகளை மனித உரிமைப் பேரவையில் காணலாம்.அணிசேரா நாடுகளின் சார்பில் பேசிய எகிப்தின் பிரதிநிதி, இலங்கைக்கு எதிரான அழுத்தம் தேவையற்றது எனக் குறிப்பிட்ட விவகாரம் இப் பிளவினை மேலும் துல்லியமாகப் புலப்படுத்தியது