இரு பக்கமும் இருந்த சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளாலேயே இன்று நாடு நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது:அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா

25 – July – 2008

இலங்கையில் பயங்கரவாதத்தை சந்தர்ப்பவாத தமிழ் தலைவர்கள் ஏற்படுத்தினார்களே தவிர சிங்களவர்கள் ஏற்படுத்தவில்லையெனத் தெரிவித்த அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா கடவுளை நாம் காப்பாற்ற முடியாது. கடவுள் தான் நம்மைக் காப்பாற்றவேண்டுமெனவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற வடக்கு, கிழக்கின் தற்போதைய நிலை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

சந்தர்ப்பவாத அரசியலை நாம் நிறுத்தவேண்டும். தமிழ் தலைவர்கள் தமது சுயநலன்களுக்காக இனவாதத்தை ஏற்படுத்தினார்கள். எமது சிங்கள இனவாதிகளும் தமிழரின் தோலில் செருப்பு தைத்துப் போடுவோம் எனக் கூறினார்கள். இரு பக்கமும் இருந்த சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளாலேயே இன்று நாடு நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது.

இந்தியாவுடன் நாம் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தவேண்டும். ஆனால் இங்கு இந்திய எதிர்ப்புணர்வை சிலர் கிளறுகின்றனர். இந்தியா ஒருபோதும் எம்மை ஆக்கிரமிக்காது.

மாலைதீவை தமிழ் ஆயுதக்குழுவொன்று கைப்பற்றியபோது அந்த நாட்டு தலைவர் தனது பெரியண்ணனான இந்தியாவிடம்தான் முறையிட்டார். உடனடியாகவே அவர்கள் வந்துதான் அரசைக் காப்பாற்றி தமிழ் ஆயுதக்குழுவை கைது செய்தனர். எனவே இந்தியாவுடனான நட்புறவு முக்கியம்.

கிழக்கு முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே சிறு சிறு சம்பவங்கள் நடைபெறலாம். அது வழமையானது. அவற்றை வைத்துக்கொண்டு கிழக்கு இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லையெனக் கூறக்கூடாது.

இந்தியாவுடன் பகையுணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டாமென நாம் கேட்டுக்கொள்கின்றோம். ஏனெனில் இந்தியா எமக்கு முக்கியம். பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு கவிழுமென பலர் எதிர்பார்த்தார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

மடுமாதாவுக்கு துப்பாக்கிச் சூடு படாதவாறு கூடமைத்தவர்கள் இந்த ஐ.தே.க.வினர். கடவுளை நாம் பாதுகாக்க முடியாது. கடவுள்தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதை ஐ.தே.க.வினர் புரிந்துகொள்ளவேண்டும்.