கொழும்பிலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள தள்ளாடி படைத்தளம் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன என்று சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில், விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே போர் உச்சக் கட்டத்தை அடைந்திருக்கிறது. இந்த சண்டையில், இரு தரப்பிலும் பெரும் அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மன்னார் மாவட்டத்தில் உள்ள தள்ளாடி சிறிலங்கா படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்தி ஒன்று குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
தள்ளாடி சிறிலங்கா படைத்தளம் மீது இன்று இரவு 10.50 மணிக்கு விடுதலைப் புலிகளின் வானூர்தி ஒன்று இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் இதனால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று படைத்தரப்பு மேலும் தெரிவித்திருக்கின்றது.
இரவு 11.28 மணியளவில் கொழும்பை அண்டிய களனிதிஸ்ஸ மின் வழங்கு நிலையத்திலும் தாக்குதல்கள் நடத்தியாதாகவும் இதனையடுத்து அங்கு பாரிய தீச்சுவாலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மணித்தியாலத்திற்கு பின்னர் அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் இந்த தாக்குதலின் காரணமாக மின்சார நிலைய மின்பிறப்பாக்கிகளுக்கு எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
புலிகளிடம் செக் நாட்டு உற்பத்தியான மூன்று Zlin-143 ரக விமானங்கள் உள்ளதாகவும், அவற்றில் உள்ளூர்த் தயாரிப்பான குண்டு வீசும் கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதாகவும் அரச இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.