இராணுவ நடவடிக்கைக்குக் கால எல்லை வகுப்பது முட்டாள்தனம். கோதபாய ராஜபக்ஷ

8/29/2008 9:00:01 AMவன்னியில் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கை எதிர்பார்த்தபடி வெற்றிகரமாக நடைபெறுகின்றது. அரசாங்கம் இயலுமானவரை பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே இராணுவ நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதியான வவுனியாவுக்கு வர வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். இராணுவ நடவடிக்கைகளுக்கு காலவரையறையினை வகுப்பது முட்டாள்தனமானது. வன்னி முற்றுகைக்கு பதிலடியாகவே திருமலையில் புலிகள் மேற்கொண்ட விமானத் தாக்குதல் அமைந்துள்ளது. புலிகள் பயன்படுத்தும் சிறிய ரக விமானங்களை உலகின் எந்த நாட்டினாலும் கண்காணிக்க முடியாது என்றும் அவர் மேலும் கூறினார். வெளிவிவகார அமைச்சில் நேற்று முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷ மேலும் கூறியதாவது:

வன்னியிலுள்ள மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அரசாங்கம் தங்குதடையின்றி அனுப்பி வருகின்றது. எனவே, வன்னியில் உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை. அரசாங்கம் வன்னிக்கு பொருட்களை விநியோகம் செய்வதற்கு ஒரு பொறிமுறையை கடைப்பிடித்து வருகின்றது. இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு நிவாரணங்களை வழங்குவதில் அரசாங்கம் உலக உணவுத் திட்டத்துடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது. இடம்பெயர்ந்த மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. இராணுவ நடவடிக்கை அரசாங்கம் வன்னியில் திட்டமிட்டபடி மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கை வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது. அரசாங்கம் இயலுமானவரை பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையிலேயே வன்னியில் இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றது. இது தொடர்பாக இராணுவத்தினருக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே வன்னி இராணுவ நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இராணுவ நடவடிக்கைகளுக்கு காலவரையறையை வகுப்பது முட்டாள்தனமானது. ஏனெனில் இராணுவ நடவடிக்கைகள் மூலம் எதிர்பார்த்த காலத்திற்கு முன்னதாகவே சிலவேளைகளில் இலக்கை அடைய முடியும். சில வேளைகளில் அவை தாமதமடையலாம்.

இடம்பெயர்ந்த மக்கள் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக மன்னார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கிளிநொச்சியில் இடம்பெயர்ந்துள்ள மக்களை அரசாங்க கட்டுப்பாட்டு பகுதியான வவுனியாவிற்கு வருமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

வவுனியாவிற்கு வருகை தரும் இடம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் வழங்கும். இவ்வாறு வருகை தரும் மக்களில் மன்னாரைச் சேர்ந்தர்கள் விரைவில் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படுவார்கள். ஏனைய மக்கள் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்கவைக்கப்படுவார்கள். கிழக்கைப் போன்றல்லாது வடக்கின் புவியியல் நிலைமை மிகவும் வித்தியாசமானது.

கிழக்கில் ஒவ்வொரு பிரதேசமும் புவியியல் ரீதியில் வேறாக்கப்பட்டது.எனவே இராணுவ நடவடிக்கையின்போது புலிகள் தப்பிச் செல்லும் வேளையில் சிவிலியன்கள் அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். ஆனால், வன்னியில் நிலைமை வேறாக உள்ளது. அங்கு மிகப்பெரிய நிலப்பரப்பு, வனப்பரப்பு உள்ளது. எனவே இராணுவம் முன்னோக்கிச் செல்லும்போது மக்கள் பின்னோக்கிச் சென்றுள்ளனர்.

எனினும், புலிகளால் நீண்ட காலத்திற்கு மக்களை கட்டுப்படுத்தி வைக்க முடியாது. மக்கள் விரைவில் புலிகளின் கட்டுப்பாடுகளை உடைத்து அரசாங்கக் கட்டுப்பாட்டு பகுதிக்கு வருவார்கள் என நாம் நம்புகின்றோம்.

புலிகளின் எதிர்ப்பு அரசாங்கம் கிழக்கை கைப்பற்றிபோது வன்னியை ஸ்திரப்படுத்தும் நோக்கில் புலிகள் தந்திரோபõயமாக பின்வாங்கிச் சென்றதாக கூறப்பட்டது. ஆனால், இப்போது என்ன நடக்கின்றது?இராணுவ ஆய்வாளர்களும், விடுதலைப் புலிகளின் ஆதரவு இணையத் தளங்களும், புலிகளின் உத்திகள் தொடர்பில் பல்வேறு கோணங்களில் தகவல்களை வெளியிடுகின்றனர்.இராணுவத்தினர் வன்னியில் மேற்கொண்டுள்ள முற்றுகைத் தாக்குதலுக்கான பதிலடியாகவே திருகோணமலை மீதான புலிகளின் வான் தாக்குதல் அமைந்துள்ளது. மிகக் குறுகிய நேரத்தினுள் அவர்கள் தாக்குதலை நடத்திவிட்டு சென்றதால், விமானப்படையால் பதில் தாக்குதலை மேற்கொள்ள முடியவில்லை.புலிகள் பயன்படுத்திய சிறிய ரக விமானங்களை உலகின் எந்த நாட்டினாலும் கண்காணிக்க முடியாது. புலிகள் வழமையான உத்திகளையே தற்போதும் பயன்படுத்துகின்றனர். இந்தத் தாக்குதலின் மூலம் இராணுவத்திற்கு உளவியல் ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று புலிகள் கருதியுள்ளனர்.இந்தத் தாக்குதலால் எமக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. எமது இராணுவம் உலகிலேயே நிபுணத்துவம் மிகச் சிறந்த படையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் எமக்கு எந்தக் கவலையும் இல்லை.அரசியல் தீர்வு இராணுவ நடவடிக்கை மூலம் அரசியல் ரீதியான தீர்வுக்கு ஏதுவான சூழலை உருவாக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் சுதந்திரமாக செயற்படும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். அரசியல் ரீதியான செயற்பாடுகள் நடத்தப்பட்டு, சுதந்திரமான தேர்தலின் மூலம் ஜனநாயகம் கட்டியெழுப்பப்பட வேண்டும். இதற்கான சூழலை ஏற்படுத்தவே இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.