வடக்கில் இன்று துருப்பிடித்த தகர விற்பனையிலிருந்து தங்க நகை வியாபாரம் வரை எல்லாமே இராணுவ மயப்பட்டுக்கிடக்கின்றது. வடக்கில் திரும்புகிற இடமெல்லாம் இராணுவத்தினர் நிர்வகித்துவரும் ஹோட்டல்களையும் பார்களையும், சூலைகளையும் பண்ணைகளையும், கராஜ்ஜிகளையும் ஹொட்வெயார்களையும் தான் பார்க்க முடிகின்றது.
சாதாரண கீரைக்கடையிலிருந்து கொரிக்கடலை பருப்பு கச்சான் விற்கும் பொறிக்கடை வரை எல்லாவற்றிலும் இராணுவத்தினரே வருமானம் ஈட்டி வருகின்றனர்.
யுத்தத்தால் பொருளாதார ரீதியாக நலிவடைந்து போயுள்ள மக்களை, எந்த தொழில் நடத்தியும் முன்னேற விடாமல், அவர்களின் தொழிலை ஆக்கிரமித்து வருவாயைப்பறித்து வயிற்றில் அடித்துப்பிழைக்கும் படுபாதகத்தையும் படுஈனத்தையும், வன்மத்தையும் வக்கிரத்தையும், இலங்கையில் அதுவும் வடக்குப்பகுதிகளில் மட்டுமே நீங்கள் பார்க்க முடியும்.
இரும்படிக்கிற இடத்தில் ஈர்க்கு குச்சி அகப்பட்டால் என்னவாகும்? அதுபோல தான் இப்போது வடக்கில் தமிழ் மக்களின் நிலைவரம்!
இராணுவத்தினரின் தொழில்துறைகள் அனைத்திலுமிருந்து ஈட்டப்படும் வருமானம், அவர்களின் பராமரிப்புச்செலவுகளுக்கும், பாதுகாப்பு செலவீனங்களுக்குமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
மாந்தை கிழக்கு (பாண்டியன்குளம்) பகுதியில் UNHCR அமைப்பின் நிதி ஊட்டத்தில், பயனாளிகளின் பங்களிப்புடன் 100 மலசலகூடங்கள் நிர்மாணிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
திட்ட விவரம்
மலசலகூடத்தின் அளவு 4 க்கு 4அடிகளும், மலக்குழியின் அளவு 4அடி சுற்றும் 5அடி தாழ்வுமாக அமைக்கப்படுதல் வேண்டும்.
மலக்குழிக்கு தேவையான 125 சீமெந்து அரிகற்களும், மலசலகூடத்துக்கு தேவையான 120 சீமெந்து அரிகற்களும், சப்பிலான நிலையுடன் கதவும், 12 சீமெந்து பைகளும், லேண்ட் மாஸ்டர் பெட்டியில் இரண்டு லோட் மணலும், ஒரு பெட்டி லேண்ட் மாஸ்டர் ஜல்லி கற்களை மூன்றாகப்பிரித்து அதில் ஒரு பங்கும் தலா நூறு பயனாளிகளுக்கும் பொருள்களாக வழங்கப்படுகின்றன. மேசன் கூலியாக 15,000 ரூபா பணமும் ஒவ்வொரு பயனாளிக்கும் வழங்கப்படுகின்றது.
மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தின் ஊடாகவே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. குறித்த திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தகாரர்களுக்கு பகிரங்க கேள்வி கோரல் அறிவித்தலை விடுக்காத பிரதேச செயலாளர் பிருந்தாகரன், மறைமுகமாக அவரே அந்த ஒப்பந்தத்தை ஏற்றுள்ளார். முறையற்ற, வெளிப்படத்தன்மை அற்ற குறித்த ஒப்பந்தத்தில் முறைகேடுகளும் ஊழல்களும் இடம்பெற்றுள்ளன.
சீமெந்து பைகள், ஜல்லி கற்களுக்கான Purchasing Order ஐ மட்டும் மல்லாவியில் உள்ள பிரபல Am… Hardware உடன் செய்துள்ள பிருந்தாகரன், ஏனைய பொருள்களுக்கான Purchasing Orders ஐ அவரே மேற்கொண்டுள்ளார்.
இராணுவத்துக்கு சந்தை வாய்ப்பு!
திட்டத்துக்கு தேவையான 24,500 சீமெந்து அரிகற்களையும், எருவில் நட்டாங்கண்டல் 612வது கட்டளைப்பணியகத்தில் (அங்கு இராணுவத்தினர் சீமெந்து கற்கள் அரிந்து விற்பனை செய்து வருகின்றனர்.) பிருந்தாகரன் கொள்வனவு செய்துள்ளார்.
சீமெந்து அரிகல் ஒன்றுக்கு ஆகக்குறைந்த சில்லறை விலையாக கணக்குப்பார்த்தால், 28X24,500=6,86,000 (ஆறு இலட்சத்து எண்பத்து ஆறாயிரம்) ரூபா பணம் இராணுவத்துக்கு தாரைவார்த்துக்கொடுக்கப்பட்டுள்ளது.
யார் பணத்தை யார் தின்று ஏப்பம் இடுவது?
குறித்த சீமெந்து அரிகற்களை கைகளால் தூக்கும் போதே அவை உருந்து கொட்டி விடுவதாக மக்கள் குற்றம் கூறுகின்றனர். கலவைக்கு தேவையான சீமெந்து அளவைக்குறைத்து மணலைக்கூட்டி கருகற்கள் Dust உம் கூடுதலாக கலந்து கற்கள் அரிந்தெடுக்கப்பட்டுள்ளமையினாலேயே, அவை தூக்கும் போதே உருந்து கொட்டி விடுகின்றன. உடைந்து விழுகின்றன. குறித்த அரிகற்கள் தரமற்றவையாகவும், உறுதியற்றவையாகவும் இருப்பதால், மலசலகூட சுவர்களில் வெடிப்புகள் உடைவுகள் ஏற்படுவதாகவும் மக்கள் பொருமுகின்றனர்.
திட்டத்துக்கு நிதி ஊட்டம் அளிப்பது UNHCR எனும் சர்வதேச தன்னார்வத்தொண்டு நிறுவனமாகும். இந்த திட்டத்துக்கு தனது “பொக்கட் மணியில் ஒரு சதத்தையேனும்” எமது மக்களுக்காக பிருந்தாகரன் செலவழிக்க வேண்டியதில்லை.
மக்கள் நலனுக்கு விரோதமான இவரது போக்குகள், வஞ்சிப்புகள், ஏய்த்துப்புழைப்புகள், ஏறி மிதிப்புகள் தொடர்பில், பல முறைப்பாடுகளை மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும், முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வடமாகாணசபை உறுப்பினர்களிடமும் பல தடைவைகள் கூறியும், அவர்கள் கள்ள மௌனம் சாதிக்கின்றனர். தெரிந்தும் தெரியாதது போல, கண்டும் காணாதது போலவே இருந்தும் விடுகின்றனர்.
வீட்டுத்திட்டத்துக்கு தேவையான மணலை மக்கள் பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு கட்டுபாடுகளை விதித்து, வகைதொகையின்றி கெடுபிடிகளையும் அழுத்தங்களையும் சட்டங்களையும் மக்கள் மீது பிரயோகித்துவரும் பிரதேச செயலாளர் பிருந்தாகரன்,
எருவில் நட்டாங்கண்டல் 612வது கட்டளைப்பணியகத்தில் இராணுவத்தினர் அரிந்து விற்பனை செய்யும் கற்களுக்கு தேவையான மணலைப்பெற்றுக்கொள்வதற்கு அவர்களுக்கு தாராள மனம் காட்டி (ஆற்றை) திறந்து கொடுத்துள்ளார். வன்னியின் இயற்கை வளம் கனிய வளம் எல்லாமே, ஏதோ தன் வீட்டு சீதனச்சொத்து போல!
போதாக்குறைக்கு, இப்போது இராணுவத்தினர் அரியும் அந்த கற்களை விற்பனை செய்வதற்கு, தனது வன்முறை ஏதேச்சதிகாரம் மூலம் சந்தை வாய்ப்பையும் பிருந்தாகரன் ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்.
இங்கே 3 விடயங்கள் முக்கியமானவை
1. இராணுவத்தின் வியாபார முயற்சிகள். பல வேளைகளில் அங்கே எதுவித நியமங்களும் கைக் கொள்ளப்படாமை. அவற்றிற்கான உரிமம் பெறப்படாமை.
2. தமிழரில் உள்ள சிலர் சட்டவிரோதமாக அரச ஒப்பந்தங்களைப் பெற்றுக் கொள்வது. இதற்கு இராணுவத்தையும் துணைக்கு எடுத்துக் கொள்வது. ஜனநாயகமற்ற சூழலைப் பயன்படுத்தி மக்களைப் பலிக்கடாக்களாக்குவது.
3. UNHCR என்ற ஐநா அமைப்பினிடமிருந்து தமிழ் மக்களைக் காட்டி பணத்தைப் பெற்றுக் கொள்வது. இதன் மூலம் தமிழர் பிரதேசங்களில் “ஏதோ” அபிவிருத்தி நடைபெறுகின்றது என்ற மாயையை ஏற்படுத்துவது.
வன்னியில் மக்கள் வாக்குகளால் வெற்றி பெற்றவர்கள் என்ன செய்கிறார்கள்?