பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளைக் கொல்வது என்ற பெயரில் பல அப்பாவிப் பொதுமக்களைக் கொன்றுகுவித்த அமரிக்காவின் ஆளில்லா விமானத்தை பிரஞ்சு அரசாங்கம் வாங்கவுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ வேண்டுகோளை பிரஞ்சு அரசு அமரிக்க அரசிற்கு முன்வைத்துள்ளது. இத் தகவலை பிரஞ்சு நாட்டின் பிரபல வாரந்தப் பத்திரிகையான லா ட்ரியூபீன் La Tribune தெரிவித்துள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அமரிக்க காங்கிரஸ் விற்பனைக்கான அனுமதியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகத்தில் யுத்தங்களைத் திட்ட்டமிட்டு உருவாக்கி மக்களை அழிப்பதைத் தவிர வேறு வழியற்ற நிலையில் உலகம் இராணுவ மயமாக்கப்படுகிறது.
நவீன ஏகபோக யுத்த முறைகளில் ஆளில்லா விமானம் பிரதான பங்கு வகிக்கும் என அவதானிகள் கூறுகின்றனர். பிரஞ்சுப் படைகள் மாலி நாட்டை ஆக்கிரமித்திருக்கும் நிலையில் தாம் இந்த விமானத்தைக் கொள்வனவு செய்வது என்பது தமது இராணுவ வலிமையை அதிகரிக்கும் என பிரஞ்சுப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்ததாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
உலகத்தை யுத்தமாகவும் இரத்தமாகவும் மாற்றியமைக்கும் புதிய உலக ஒழுங்கு இன்னும் பல பலிகளுக்காகக் காத்திருக்கிறது.