இரணைத்தீவு புலிகள் முகாமை அழித்துள்ளதாகக் கூறுகிறது இலங்கை இராணுவம்

03.082008
இலங்கையின் வடமேற்குக் கடற்பரப்பில் இரணைத்தீவில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்றையும் விடுதலைப் புலிகளின் படகு ஒன்றையும் அழித்துள்ளதாகத் தெரிவித்திருக்கும் கடற்படையினர், இந்தத் தாக்குதலின்போது 4 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகக் குறிப்பிடுகின்றனர்.

இரணைத்தீவு பகுதியில் ஆள் நடமாட்டத்தை அவதானித்த கடற்படையின் துரித நடவடிக்கைப் படகு அணியினரும், விசேட படகு அணியினரும் அந்தத் தீவுக்குச் சென்று, அங்கு அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாமை அழித்துள்ளதுடன், விடுதலைப் புலிகளின் இரண்டு படகுகளையும் கைப்பற்றியிருப்பதாகக் கடற்படையினர் தெரிவித்திருக்கின்றனர்.

இதேவேளை, மன்னார், வவுனியா, வெலிஓயா, யாழ்ப்பாணம் முகமாலை ஆகிய களமுனைகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இடம்பெற்று வரும் தாக்குதல் நடவடிக்கைகளில் நேற்று மாத்திரம் 9 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இந்த மோதல்களில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

இந்தச் சம்பவங்கள் குறித்து விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

THANK:BBC

One thought on “இரணைத்தீவு புலிகள் முகாமை அழித்துள்ளதாகக் கூறுகிறது இலங்கை இராணுவம்”

  1. //இந்தச் சம்பவங்கள் குறித்து விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.//
    விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து இப்போதைக்கு ஒரு அறிவித்தலும் வராது. ஏனென்றால் 1995ம் ஆண்டும் புலிகள் யாழ்குடாவை விட்டு தப்பியோடி வன்னிக்குள் புகுந்துவிட்டு ஒரு அறிக்கையும் விடாமல் இருந்தார்கள். சில மாதங்களின் பின்பு 1995ம் ஆண்டு மாவீரர் தின உரையில் தங்களது தோல்வியை ஒத்துக்கொள்ளாமல்,இது ஒரு தந்திரோபாய பின்வாங்கல் என்று கூறப்பட்டது.
    அதே பாணியில்த்தான் இந்த முறையும் விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாக 2008ம் ஆண்டு மாவீரர் தின உரையும் அமையும்.
    அப்படி அமையாதவிடத்து; அடுத்ததாக நடக்கப்போகும்,அன்னிய தேசத்துத் தெருக்களில்,பொங்குதமிழென்றபெயரில்,பொலிஸ் பாதுகாப்போடு,வீர(மில்லா)த் தமிழர் பொங்கியெழுந்து,போக்குவரத்துநெரிசலை உண்டாக்கும் நிகழ்ச்சியில், நானும் பங்குபற்றி பொங்கியெழுவேன் என்பதை இத்தாள் உறுதிப்படுத்துகிறேன்.

Comments are closed.