நபர்களை இரகசியமான முறையில் கைது செய்து, தடுத்து வைக்கப்படும் நாடுகளின் வரிசையில் இலங்கையின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.
இரசிய இடங்களில் நபர்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படும் நாடுகளின் பட்டியில் இலங்கையின் பெயரும் உள்ளடங்குவதாக ஐக்கிய நாடுகளின் உரிமைகள் தொடர்பிலான விசாரணைக் குழுவினர் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
நான்கு பேரைக் கொண்ட விசேட குழுவொன்று இந்த விசாரணைகளை நடத்தியுள்ளது.
ஐக்கிய அமெரிக்கா, ஈரான், பாகிஸ்தான், சீனா, ரஸ்யா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான யுத்தத்தின் காரணமாக பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு இரசியமான முறையில் நபர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக இராணுவ சீருடை தரித்த அல்லது சிவில் உடை தரித்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தமிழர்களை இவ்வாறு கைது செய்வதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
1993ம் ஆண்டு அவசரகால சட்டத்தின் இரகசிய கைதுகள் சட்டத்திற்கு முரணானதென தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், சட்ட விரோத கைதுகள் தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.