இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொடர்பான மரணத்தை இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை என்ற அளவில் மாநிலங்களிடம் இருந்து தகவலைப்பெற்று வெளியிட்டு வருகிறது மத்திய அரசு.
கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாதவகையில் கொரோனாவால் 4,529 பேர் இறந்துள்ளனர்.இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 83 ஆயிரத்து 248 ஆக உயர்ந்துள்ளது.உலக அளவில் எந்த நாடுகளிலும் ஒரே நாளில் 4,529 பேர் மரணித்ததில்லை.
அன்றாடம் இறப்போரின் எண்ணிக்கை கடந்த 14-ஆம் தேதி முதல் குறைந்து வருவதாக இந்திய அரசு கூறி வரும் நிலையில் உலக அளவில் மரண எண்ணிக்கை அதிகரித்துச் செல்கிறது. இன்னொரு பக்கம் சர்வதேச நாடுகள் இந்தியாவில் மரண எண்ணிக்கை குறைத்துக் காட்டுப்படுவதாகவும், நாளொன்றுக்கு 25 ஆயிரம் பேர் வரை உயிரிழந்து வருவதாகவும் சுட்டிக் காட்டுகிறது. கொரோனா முதல் அலைக்கும் இரண்டாம் அலைக்கும் இடையில் சுமார் 7 கோடி அளவிலான தடுப்பூசிகளை இந்தியா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. உற்பத்தியான தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து விட்ட நிலையில் இப்போது இந்திய மக்களுக்கு செலுத்துவதற்கான தடுப்பூசிக்கு கடும் தடுப்பாடு எழுந்துள்ளது.