வன்னிப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு நான்கு இரத்தம் தோய்ந்த வருடங்கள் கடந்து சென்றுவிட்டன. மனிதத்தை கொன்று உண்டு பழகிப்போன கொலை வெறிகொண்ட மனித மிருகங்கள் அவலங்களின் மீது அரசியல் நடத்தக் கற்றுக்கொண்டதில் முப்பது ஆண்டுகளைக் கடந்துபோயின. இன்றோ ஒவ்வொரு அதிகாலையும் அவலத்தின் செய்திகளோடே விடிகின்றன.
இழந்துபோன மூன்று தசாப்தங்களில் தமிழ்ப் பேசும் மக்கள் முப்பதாயிரம் மனித உயிர்களை, நாளைய கனவுகளோடு வாழ்ந்தவர்களின் உயிர்களை விடுதலைக்காகத் தாரைவார்த்துக் கொடுத்திருக்கிறார்கள். மனிதர்களின் விடுதலைக்காக தமது வாழ்க்கைய விலையாகக் கொடுத்த பெண்கள் கொடியவர்களால் விலை பேசப்படுகின்றனர். சிறைகளில் பெருமூச்சுவிட்டவர்கள் கூட சிதைக்கப்படுகின்றனர்.
பல்லாயிரம் மனிதப் பிணங்களின் மேல் சலனமின்று உட்கார்ந்துகொண்டு பயங்கரவாதம் ஒழிந்த்தாகக் கூறும் இந்த தசாப்தத்தின் கோரமான கொலையாளி மகிந்த ராஜபக்சவோடு வியாபாரம் பேசவா அவர்கள் புத்தகங்களுப்பதிலாக ஆயுதம் ஏந்தினார்கள்.
இவை எதனையும் கண்டுகொள்ளாத பிழைப்புவாதிகளின் அரசியல் இன்றும் மக்களைத் துவம்சம் செய்துகொண்டிருக்கின்றது. பெண்கள் பலவந்தமாக இராணுவத்தில் இணைக்கப்படுகின்றனர். புத்தரின் சிலைகள் அமைதியாக அன்றி அழிக்கப்பட்ட பிணங்களின் வாடையோடு தமிழ்ப் பிரதேசங்களின் முளைத்துப் பயமுறுத்துகின்றன. அமைதியின் சின்னம் என்று அடையாளப்படுத்தப்பட்ட புத்தர் ஆக்கிரமிப்பின் சின்னமாக முளைத்து மௌனமாகின்றார்.
இவற்றில் எதையும் கண்டுகொள்ளாத ‘ஈழ ஆதரவாளர்கள்’ தமது அடையாளங்களுக்காக மோதிக்கொள்கிறார்கள். நந்திக்கடலில் இரத்தமும் சதையுமாகக் கரைந்துபோன ஆயிரமாயிரம் மனிதர்களின் அழிவு ஒரு அரசியல் தோல்வியென்றால் அந்தத் தோல்விக்கான காரணம் குறித்துப் பேசுவதைக் கூட துரோகம் என்று கூறும் புலி ஆதரவுத் தலைமைகள் தமிழ்ப் பேசும் மக்களது விரோதிகள். இன்னொரு போராட்டம் தோன்றிவிடக்கூடாது என்பதில் அவதானமாகச் செயற்படும் மனித விரோதிகள்.
இவர்கள் தமிழ்ப் பேசும் மக்களது தலைமைப் பொறுப்பிலிருந்து அறுத்தெறியப்படுவது விடுதலைக்கான முன்நிபந்தனைகளுள் ஒன்று. இவர்களோடு ஒட்டிக்கொண்ட, புலிகள் வாழ்ந்தபோது விலை கொடுத்து வாங்கப்பட்ட சீமான், வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட பிழைப்புவாதிகள் ஈழம் பெற்றுதருவோம் என்று நடத்தும் வியாபாரம் நிறுத்தப்படுவது இன்னுமொரு முன் நிபந்தனை.
இன்று வட கிழக்கில் இரண்டு மனிதர்களுக்கு மேல் ஒன்று கூடினாலே, இராணுவமோ அதன் துணைக்குழுக்களோ அழைத்துச் சென்று சித்திரவதை செய்யும் அளவிற்கு பேரினவாதிகளின் பாசிசம் மக்களை அதன் கோரப்பிடிக்குள் வைத்திருக்கின்றது.
இதற்கு எதிரான ஜனநாயக இடைவெளி ஒன்று தோன்றினால் மட்டுமே தமிழ்ப் பேசும் மக்கள் தமது சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுக்க முடியும். அவ்வாறான ஜனநாயக வெளி ஒன்று தோன்றினால் மக்களின் போராட்டம் புதிய ஆரம்பமாக அமையும். அதற்கு ஒரே வழி ராஜபக்ச சர்வாதிகாரத்தயும் பேரினவாதக் கூறுகளையும் பலவீனப்படுத்துவதே.
தமிழ்ப் பேசும் முஸ்லீம்களும், மலையகத் தமிழர்களும் ராஜபக்ச பாசிசத்தின் கோரப்பிடிக்குளிருந்து விடுதலையடைவதற்கான போராட்டத்தை நடத்தியே ஆகவேண்டும் என்ற நிலைக்கு வந்துள்ளனர். தவிர சிங்கள மக்களின் ஒடுக்கப்பட்ட பிரிவுகளும் இளைஞர்களும் பேரினவாதத்தின் அச்சம் தரும் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
சிங்கள மக்கள் மத்தியில் எமது விடுதலைக்கான நியாயங்களைக் கொண்டுசெல்வதும் அவர்கள் மத்தியில் கரு நிலையிலுள்ள புரட்சிகரக்க் குழுக்களை வளர்ப்பதும் விடுதலைக்கான இன்னொரு முன்நிபந்தனை.
அப்பாவி சிங்களவர்களைக் கொன்று குவிப்பதே சரியானது என்று வாதிடும் புலம்பெயர் பிழைப்புவாதத் தலைமைகளிடமிருந்து இவற்றையெல்லாம் எதிர்பார்க்க முடியாது.
1980 களில் இன்றிருப்பதைப் போன்று பாசிசம் ஒவ்வொரு மனிதனதும் கொல்லைப்புறம் வரைக்கும் சென்றிருக்கவில்லை. அன்று அது ஆரம்ப நிலையிலேயே காணப்பட்டது. 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜே.ஆர்.ஜெயவர்தன தலைமைதாங்கி நடத்திய தமிழ் இனப்படுகொலையை பார்த்த சிங்கள இளைஞர்கள் பலர் தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டத்திற்கான நியாயத்தைப் புரிந்து கொண்ட்ருந்தார்கள்.
புளட் அமைப்பினர் தமிழீழத்தின் குரல் என்ற வானொலிச் சேவையை சிங்கள மொழியிலும் நடத்தினார்கள். இதனூடான தொடர்புகளூடாக 200 இற்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் புளட் அமைப்பில் தமிழ்ப் பேசும் மக்களின் சுயநிர்ணைய உரிமைக்காகப் போராடுவதற்காக இணைந்துகொண்டனர்.
200 வரையான சிங்கள இளைஞர்களுக்கு முல்லைத் தீவில் புளட் இயக்கத்தினரால் இராணுவப் பயிற்சியளிக்கப்பட்டது. அவர்கள் தமது தேசிய இனம் சார்ந்த பிரச்சனைகளுக்காகப் போராடுவதற்கு வந்திருக்கவில்லை. தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் இணைந்து போராடவே அனைத்தையும் துறந்து முழு நேரப் போராளிகளாக இணைந்துகொண்டனர். குறிப்பாக ஜே.வி.பி என்ற இனவாத அமைப்பிலிருந்து பிளவுற்ற புதிய ஜே.வி.பி என்ற இளைஞர் குழு குறிப்பிடத்தக்கவர்கள்.
புளட் அமைப்புத லைமை கொலைகாரர்களின் மாபியா அமைப்பாக இனம் காணப்பட்ட போது அந்த சிங்கள இளைஞர்களும் சிதைந்து போயினர். அவர்களின் ஒரு பகுதி பேரினவாத இனவெறி இராணுவத்தின் கைகளில் சிக்கி அழிந்துபோயினர். இன்னொரு பகுதி வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றனர்.
ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற அமைப்புக்களிலும் சிறிய அளவினான சிங்கள இளைஞர்கள் இணைந்து செயற்பட்டனர்.
இவ்வாறு வெளிவராத பல தகவல்கள் உறைந்துகிடக்கின்றன. 2000 ஆண்டுகளின் நடுப்பகுதியில் கொழும்பு ரயிவே தொழிற்சங்கத் தலைவர் உள்ளடங்கிய குழுவினர் புலிகளிடம் இராணுவப் பயிற்சிபெற்றனர். இவர்கள் அனைவரும் இலங்கை அரசால் கைதுசெய்யப்பட்டு சிலர் சிறையிலேயே கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
வன்னிப் படுகொலைகளின் பின்னர் சிங்கள ஜனநாயக முற்போக்கு சக்திகள் மத்தியிலும் எதிர்வலைகளை ஏற்படுத்தியது. மனித குலத்தின் ஒரு பகுதியை சாரிசாரியாகக் கொன்றொழித்ததை ஒரு குறித்த சிலராவது அறிந்து வைத்திருந்தார்கள். பேரினவாத ஊடகங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையிலும், தமிழ் இனவாதிகளின் வெறித்தனமான சிங்கள வெறிக்கு மத்தியிலும் கொலைகளின் கோரங்களை பல கல்விகற்ற இளைஞர் சமூகத்தின் ஒரு பகுதியாவது அறிந்து வைத்திருந்தது.
சிங்கள மக்கள் மத்தியிலிருந்து தமிழ்ப் பேசும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கான குரல் மேலெழுமானால் அதுவே பேரினவாதிகளின் அழிவிற்கானா ஆரம்பம் என்பதை ராஜபக்ச அரசு அறிந்து வைத்திருந்தது. ஆக அவ்வாறான சூழல் உருவாவதைத் தடுப்பதற்கான இரண்டு பிரதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. முதலில் தமிழ்ப் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகக் குரல்கொடுப்போர் மனிதாபிமானமற்ற அருவருப்பான இனவாதிகள் என்ற விம்பத்தைச் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது. அதற்கான திட்டத்தை புலம் பெயர் தமிழ் இனவாதிகள் ஊடாகவும், தமிழகத்தின் இனவாதிகள் ஊடாகவும் பேரினவாத அரசு மேற்கொண்டது. இந்திய ஐரோப்பிய, அமரிக்க உளவு நிறுவனங்கள் இவ்விடயத்தில் ராஜபக்சவிற்கு ஆதரவாகச் செயற்பட்டன என்பதற்கான பல ஆதாரங்கள் காணப்படுகின்றன.
இரண்டாவதாக சுய நிர்ணய உரிமைக்கான கோரிக்கை நாட்டைப் பிளவுபடுத்தி சிங்கள மக்களை அழிக்கும் இனவாதம் என்ற கருத்தை சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டும். இதற்கான செயற்திட்டம் முன்னிலை சோசலிசக் கட்சி, சம உரிமை இயக்கம் போன்றவற்றினூடாக கன கச்சிதமாக திட்டமிட்டு நகர்த்தப்படுகின்றது.
ஜே.வி.பி யின் தலைமைப் பொறுப்பிலிருந்து யுத்த்தை ஆதரித்த பெரும்பாலனவர்கள் பிரிந்து தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைக்காகப் போராடுகிறோம் என்ற விம்பத்தைப் புனைந்து இறுதியாக சுய நிர்ணயம் என்பதே இனவாதம் என்று பிரச்சாரம் மேற்கொள்கிறது இந்தக் கூட்டம். ஜேவிபின் அதே முழக்கங்களை முன்வைத்தாலும் அவர்களை விட ஆபத்தானவர்கள். இவர்களையும் மீறி தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் அரசியல் நியாயத்தைப் புரிந்துகொண்ட பலவீனமான குழுக்கள் சிங்கள மக்கள் மத்தியில் காணப்படுகின்றன. இவர்களை தமிழ்ப் பேசும் மக்களின் மக்கள் சார்ந்த அரசியல் இயக்கத்தின் உருவாக்மே பலப்படுத்தும்.
(இன்னும் வரும்..)