இலங்கையின் கொடூரமான உள்நாட்டு யுத்தத்தில் துப்பாக்கிகள், ஓய்வடைந்துவிட்டன. ஆனால், இனப் பகைமையினால் ஏற்பட்டிருக்கும் ஆழமான காயங்களை குணப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. அரசாங்கத்தால் நடத்தப்படும் முகாம்களில் சுமார் 3 இலட்சம் தமிழ் மக்கள் கைதிகளைப் போல் தொடர்ந்தும் இருந்து வருகிறார்கள் என்று நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
முடிவு இல்லாத யுத்தம் என்ற தலைப்பில் சர்வதேச நெருக்கடிக் குழுவின் ஆசியாவிற்கான நிகழ்ச்சிப் பணிப்பாளர் ரொபேர்ட் டெம்லர் இது தொடர்பாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் எழுதியுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;
சமூகங்களுக்கிடையில் ஆழமாக வேரூன்றியிருக்கும் அவநம்பிக்கையை இல்லாமல் செய்வதற்கான ஆரம்பமாக உதவி வழங்கும் நாடுகள் அரசாங்கத்திற்கு நீதியான சமாதானத்தை ஏற்படுத்துவது குறித்து தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அழுத்தம் கொடுக்க வேண்டியுள்ளது. இலங்கை இராணுவத்திற்கும் தமிழ் புலிகளுக்குமிடையிலான பல தசாப்தகால மோதல்களின் இறுதிக்கட்டமானது மிகவும் கொடூரமாக இருந்தது. இலட்சக்கணக்கான தமிழர்கள் இந்த யுத்தத்தில் சிக்கியிருந்தனர். இராணுவம், ஷெல், விமானத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்த போது, தப்பிச் செல்ல முயன்ற பொதுமக்களை புலிகள் சுட்டுள்ளனர். ஆயிரம் சிறுவர்கள் 7 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் பத்தாயிரத்திற்கு அதிகமானோர் காயமடைந்திருப்பதாகவும் ஐ.நா. மதிப்பீடு செய்திருந்தது.
எதிர்காலத்தில் தமிழரும் சிங்களவர்களும் சேர்ந்திருப்பதற்கு இரு தரப்பினரும் மேற்கொண்ட அட்டூழியங்கள் குறித்து விசாரணை செய்யப்படுவது தேவையாக உள்ளது. தற்போது உடனடி கரிசனைக்குரிய விடயமாகவிருப்பது முகாம்களிலுள்ள 3 இலட்சம் தமிழர்களின் நிலைமையாகும். அவர்களில் 2/3 பகுதியினர் பாரிய முகாமான மெனிக்பாமில் வைக்கப்பட்டுள்ளனர். சனச் செறிவு, சுகாதார வசதியின்மை, சுத்தமான குடிநீர் இன்மை, போதிய மருத்துவ சேவைகள் கிடைக்காமை என்பவற்றால் தினமும் உயிரிழப்புகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. மோசமான நிலைமைக்கு அரசாங்கம், ஐ.நா. மற்றும் சர்வதேச உதவி முகவரமைப்புகள் மீது குற்றஞ்சாட்டுகின்றது. ஏனென்றால், இந்த அமைப்புகள் இடம்பெயர்ந்தவர்களுக்கு நிரந்தரமான அல்லது அரைவாசி நிரந்தரமான புகலிடங்களை அமைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்தப் பிரச்சினையின் உண்மையான விடயமென்னவென்றால் தனது சோதனை நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதமாக்கவில்லை என்பதும் இடம்பெயர்ந்த மக்கள் தமது உறவினர்கள் அல்லது அவர்களை சேர்த்துக் கொள்ள விரும்பும் குடும்பங்களிடம் செல்வதற்கு இடமளிக்காதிருப்பதேயாகும். இவற்றுக்கும் மேலாக சர்வதேச முகவரமைப்புகள் வினைத்திறனுடன் உதவி விநியோகங்களை மேற்கொள்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. முகாம்களின் நிலைமை யுத்தத்தின் இறுதி மாதங்களில் பொதுமக்கள் எதிர்கொண்டவை என்பவை தொடர்பாக விடயங்கள் வெளிவருவதைத் தடுப்பதற்காகவே இந்தக் கட்டுப்பாடுகள் பல விதிக்கப்படுவதாகத் தென்படுகிறது. இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருப்போரை தனிப்பட்டவர்கள் பார்ப்பதற்கு அனுமதியில்லை. அங்கு கமராக்களோ அல்லது பதிவுசெய்யும் கருவிகளோ கொண்டு செல்லப்பட முடியாது.
இடம்பெயர்ந்த மக்களில் பலர் தமது குடும்ப உறுப்பினர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பது பற்றியோ அவர்களின் தலைவிதி பற்றியோ அறிந்து கொள்ள முடியாதவர்களாக உள்ளனர். புலிகளுடன் தொடர்பு உடையவர்களென சந்தேகிக்கப்பட்ட பலர் குடும்பங்களிடம் இருந்து தனியாக வேறுபடுத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டும் புனர்வாழ்வு நிலையங்களிலும் வைக்கப்பட்டுள்ளனர். 3 தமிழ் அரச மருத்துவர்களும் ஒரு சிரேஷ்ட சுகாதார அதிகாரியும் அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மட்டுமே யுத்தத்தின் இறுதி வாரங்களில் போர் வலயத்தில் தங்கியிருந்தவர்கள். அவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும். தம்மைப்பிடித்து வைத்திருந்தோர் நிர்ப்பந்தப்படுத்தி கூறவைத்ததாக ஜூலை 8 இல் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
யுத்தத்தில் வென்ற பின்னர் இலங்கை அரசாங்கம் மோதலினால் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தொடர்பான தனது அணுகு முறைகள் மூலம் சமாதானத்தை இழப்பதற்கான அபாயகரமான நிலைமையை எதிர்நோக்கியுள்ளது. பல வருட கால பகைமையை வெற்றி கொள்ள வேண்டுமானால் தனது போக்கை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டிய தேவை கொழும்புக்கு உள்ளது. அடுத்த தமிழ் கிளர்ச்சி ஏற்படாமல் தடுப்பதற்கு பழைய வெறுப்புணர்வுகளை தவிர்த்துக் கொள்வது அவசியமானதாகும். விசேடமாக முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் மக்களை முழுமையாக மீளக்குடியேற்றுவதற்கான துரிதமான கால அட்டவணையை அரசா ங்கம் வழங்க வேண்டிய தேவை உள்ளது. அத்துடன், முகாம்களுக்குச் சென்றுவருதல் மற்றும் அதன் நிலைமைகள் தொடர்பான குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அரசாங்கம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அங்குள்ளவர்களின் பட்டியலை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சகல இடங்களுக்கும் செஞ்சிலுவைச் சங்கம் சென்றுவருவதற்கு அனுமதிக்க வேண்டும். இராணுவ புலனாய்வு நிறுவனங்கள் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளின் சகல விடயங்கள் மற்றும் தடுத்து வைக்கப்படுதல் போன்ற இடங்களுக்கு இவை செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.
இந்த நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்கான தெளிவான பங்களிப்பு சர்வதேச சமூகத்திடம் உள்ளது. இலங்கையின் புனர்நிர்மாண அபிவிருத்திக்கான டோக்கியோ மாநாட்டின் இணைத்தலைமைகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே ஆகியனவற்றிடம் பொறுப்புகள் உள்ளன. இவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஒன்று கூடுவதற்குத் தயாராகின்றன. அவை ஏகோபித்து செய்தியை அனுப்ப வேண்டும்.
சகல உதவி வழங்கும் நாடுகளும் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பனவற்றில் தமது செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும். நாட்டிற்கான பொருளாதார உதவியை வழங்கும் போது நிபந்தனையை விதிக்க வேண்டும். நிலையானதும் சமத்துவமானதுமான சமாதானத்தை வலியுறுத்துவதற்குத் தேவையான அடிப்படை நிபந்தனைகளை இவை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
மூலம்:Thinakkural.