இனப்பிரச்சினைக்கான தீர்வு 13 வது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் சென்று காணப்படவேண்டும்!:மன்மோகன் சிங்.

02.08.2008
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இந்தியப் பிரதம மந்திரி மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.
இந்தச் சந்திப்பு கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது. இதன்போது இனப்பிரச்சினை தொடர்பாகவும், அதற்கான முனைப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது கருத்துரைத்துள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் குழு இனப்பிரச்சினைத் தீர்வுக்காக அமைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சிக் குழுவின் பல விடயங்கள் இணக்கத்துக்கு வந்துள்ளன.

எனவே அதனை முன்கொண்டு சென்று அதன் மூலம் புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனப் பிரச்சினையைத் தீர்க்க முடியும். எனவே இதற்கு இந்தியா தனது முழு ஊக்கத்தையும் வழங்கவேண்டும் எனத் தெரிவித்தது.

இதன் போது தமது கருத்தை முன்வைத்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், 13வது திருத்தச்சட்டம் என்பது ஒரு தற்காலிக ஏற்பாடாகவே இருக்கமுடியும் எனக் குறிப்பிட்டார். உண்மையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு 13 வது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் சென்று காணப்படும் தீர்வாக இருக்கவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். அதாவது 13 வது திருத்தச்சட்டம் பிளஸ் பிளஸ் என மன்மோகன் சிங் குறிப்பிட்டதாக இராஜதந்திரத் தரப்புகள் தெரிவித்துள்ளன.

இதேவேளை இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வுக்கு இடமில்லை அரசியல் தீர்வே காணப்படவேண்டும் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டிருந்த கருத்தை வரவேற்பதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் குழுவினர் இதன் போது தெரிவித்தனர்.

இதனைத் தவிர இந்திய வம்சாவளி இலங்கைத் தமிழ் மக்களின் நலன்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய வம்சாவளி மக்களின் கல்வி, சுகாதாரம் தொழில்துறை போன்ற விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பெருந்தோட்ட மக்களின் பயன்பாட்டுக்கென கூட்டுறவு அடிப்படையில் 20 பேரூந்துகளை வழங்குவதற்கு இந்தியப் பிரதம மந்திரி உறுதியளித்துள்ளார்