அறுபது நீண்ட ஆண்டுகள், தமிழ் பேசும் சிறுபான்மையினர், இடைவெளியின்றிச் சூறையாடப்பட்டிருக்கின்றனர். வேறுபாடின்றி தெருவோரத்தில் கொன்று போடப்பட்டிருக்கின்றனர்;. அவர்கள் காணி நிலம், வீட்டு முற்றம், தெருக்கோடி எல்லாமே பேரினவாதப் புற்று நோய்க் கிருமிகளால் சிறுகச் சிறுக அரிக்கப்பட்டு அதன் உச்ச பட்ச வடிவமாக வன்னி நிலம் முழுவதுமே அபகரிக்கப்படும் அபாயத்துடன் கூடவே தமிழர் பகுதிகள்; மறுபடி மறுபடி அவலங்களின் பூமியாக மாற்றப்பட்டு விட்டது.
வட கிழக்கு பௌத்த சிங்கள மயமாவதற்குக் கூட இலங்கை அரசின் தமிழ் உளவாளிகளும் அரசின் புலம் பெயர் நீட்சிகளும் நியாயம் சொல்கின்றன. நாளாந்த உணவிற்காக, தமது குழந்தை செத்துப் போகாமல் வளர்வதற்காக அநாகரிகமான இராணுவத்திற்கு உடலை விற்கும் தமிழ்ப் பெண்களின் சோக வரலாறுகள் நெஞ்சைப் பிழிகின்றன. இரண்டு வருடங்கள் வெற்றுச் சுலோகங்களோடு கடந்துபோயின. அரச உளவாளிகள் புற்று நோய் போல புலம் பெயர் நாடுகளின் ஒவ்வொரு அங்கங்களுக்குள்ளும் தம்மைச் செருகிக் கொண்டுள்ளனர்.
இப்போது மறுபடி ஒன்றிணைவோம் என்கிறார்கள்.
இவர்களை நோக்கி மக்கள் மீது பற்றுள்ளவர்களின் கேள்வி ஒன்று தான் ‘எதற்காக ஒன்றிணைகிறோம்’? வன்னிப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்ட வேளையில் இலட்சோப இலட்சமாய் ஐரோப்பியத் தெருக்களில் ஒன்றிணைந்தும் ஏன் இனப்படுகொலையை நிறுத்த முடியவில்லை? மூன்று லட்சம் பொது மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டு, சிறுகச் சிறுக அழிக்கப்பட்ட போது ஏன் ஒன்றிணைவு மட்டும் பலனளிக்கவில்லை? இன்றும் சூறையாடப்படும் வட-கிழக்கு மக்களின் அவலத்தை ஏன் நிறுத்த முடியவில்லை, குறைந்த பட்சம் அவர்களின் குரல் உலகிற்குக் கேட்கும் வண்ணம் எம்மை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை?
எமது மக்களின் நலன்களை முன்னிறுத்தி ஒன்றிணைவோம்!
எமது ஒவ்வொரு நகர்வையும் நிதானமாக முன்வைப்போம். ஏமாற்றியவர்களை முற்றாக நிராகரிப்போம்!
இன்று வரை ஒடுக்கும் அரசுகளோடும், சந்தர்ப்ப வாத அரசியல் வாதிகளோடும் தான் ஒன்றிணைந்திருக்கிறோம். நண்பர்களுக்குப் பதிலாக எதிரிகள் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம். நியாயமான எமது போராட்டம் ஆயிரமாயிரம் மக்கள் அழிவில் முள்ளிவாய்க்காலில் கரைந்துபோன போது இவர்களில் யாருமே எம்மைத் திரும்பிப்பார்த்ததில்லை.
இப்போது என்ன செய்யலாம்?
1. இனப்படுகொலையின் இலங்கை அரசு தண்டிக்கப்பட வேண்டும்
2. இனச்சுத்திகரிப்பு நிறுத்தப்பட வேண்டும்
3. மீள் குடியேற்றம் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்
4. காணாமற் போனோரின் தகவல்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்
5. வடக்கிழக்கில் இராணுவ ஆட்சி நீக்கப்பட வேண்டும்
6. சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்
இரவோடிரவாக மக்களைக் கொன்றொழித்த கொலைகாரர்களிடமிருந்து இவற்றைக் கேட்டுப் பெற்றுக்கொள்ள முடியாது. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அறிக்கை இலங்கை அரசின் கொலைகளை உத்தியோக பூர்வமாக வெளிக்கொண்டு வந்திருக்கிறது. இலங்கை அரசுக்கு எதிரான உலகம் தழுவிய கருத்தை உருவாக்க இதனைப் பயன்படுத்திகொள்வோம். உலகமெங்கும் பரந்திருக்கும் மனிதாபிமானிகளும், ஜனநாயக வாதிகளும், முற்போக்கு சக்திகளும் எமது போராட்டத்தை, எமது மக்கள் மீதான ஒடுக்குமுறையைத் திரும்பிப்பார்க்க வேண்டும். அவர்களுக்கெல்லாம் நமது மக்கள் அழிகப்படுவதையும் நமது போராட்டம் அதற்கு எதிரான போராட்டம் எனபதையும் தெளிவுபடுத்த வேண்டும். உலகப் பொது கருத்தை ஏற்படுத்த ஒவ்வொரு அசைவையும் நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஒடுக்கும் கறைபடிந்த அரச அதிகாரங்களோடு கைகோர்த்துக்கொண்டு அவர்களை நாம் வென்றெடுக்க முடியாது. போர்க்குற்றங்களைச் சுமந்துகொண்டு அதனை முன்னெடுக்க முடியாது. எமது போராட்ட அரசியல் என்பது இன்று சிலர் கருதுவது போல பழைய மொந்தையில் புதிய கள்ளாக இல்லாது புதிய வழிமுறையானது என்பதையும் உலகிற்கு உணர்த்துவோம். எமது போராட்டத்தின் உண்மையான நண்பர்களிடம் இதை எடுத்துச் செல்வதன் மூலமே எமது போராட்டங்களை வெற்றிகரமானவையாக மாற்றியமைக்க முடியும்.
நாமும் ஜனநாயக வாதிகளதும் முற்போக்கு சக்திகளினதும் பக்கம் தான் என்பதை அவர்களுக்குக் கூறவும், இலங்கை அரசின் போர்க்குற்றங்களை வெளிப்படுத்தவும் இன்னொரு சந்தர்ப்பமாக போர்க்குற்ற நாளைப் பயன்படுத்திக்கொள்வோம்.இலங்கை அரசின் போர்க்குற்றங்களை வெளிப்படுத்தவும் இன்னொரு சந்தர்ப்பமாக போர்க்குற்ற நாளைப் பயன்படுத்திக்கொள்வோம்.
இத்தோடு இணைக்கப்பட்டிருக்கும் ஆங்கிலப் பிரசுரத்தை பிரித்தானியாவில் வாழ்கின்ற ஏனைய சமூகம் சார்ந்தவர்களுக்கு வழங்குமாறும் கோருகின்றோம்.
இனப்படுகொலைக்கு எதிரான உலகப் பொதுக் கருத்தை உருவாக்க ஒன்றிணைவோம்!
உலகின் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களோடு ஒருங்கிணைவோம்!!
ஆங்கிலப் பிரசுரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது பொதுக் கருத்தை உருவாக்குவதற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக பிரசுரத்தின் அச்சுப் பிரதிகளை ஐரோப்பாவில் வாழும் ஏனையோருக்கு வினியோகிக்குமாறு புதியதிசைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Click:
இன்னும் யூதர் தமது அழிவை மறூக்கவில்லை அதை நினைவுகளூடன் வைத்திருக்கிறார்கள்.இமயத்தை தொடும் பணக்காரராக இருந்தாலும், அமெரிக்காவை மேன்மை செய்யும் அரசியல்வாதியாக இருந்தாலும் தாம் யூதர் என்பதை மறக்காதவராகவே இருக்கின்றனர் ஆனால் தமிழர்? முள்ளீவாய்க்கால் நமது வேர்கள் எரிக்கப்பட்ட கொடுமையான நாள்.தமிழன் தன் தாய் மண்ணீலே விலங்கிடப்பட்டு, விலங்குகள் போலே இழுக்கப்பட்டு, அவமானமாக்கி கொல்லப்பட்ட நாள்.இந்த நாள் நமக்குச் சொல்வதென்ன? இனியும் நமக்குள் கோஸ்டி மோதல் தேவையா? குறோய்டனும், டூட்டுங்கும் தமிழா உனக்கு மட்டுமா சொந்தம்? ஏன் நமக்கு உள்ளே சண்டை? நாமெல்லாம் தமிழரல்லவா? ஒருவருக்கு ஒன்ரெண்டால் இன்னொருவர் துடிக்க வேண்டாமா?
தமிழ்மாறன நல்ல பிள்ளையாம்.!
இனியாவது ஒன்றிணைவோம்