பாஜக பிரதமர் வேட்பாளரும் இனக்கொலையாளியுமான நரேந்திர மோடி பாட்னாவுக்கு செல்வதற்கு முன்னதாக அவர் பேச இருந்த மேடைக்கு அருகே அடுத்தடுத்து 7 குறைந்த சக்தி குண்டுகள் வெடித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் ஐந்து பேர் உயிரிழந்தனர். 70 பேர் காயமடைந்தனர் என போலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது.குண்டு வெடிப்பு நரேந்திர மோடிக்கு மேலும் அனுதாப அலைகளைத் உருவாக்கும் என்பதால் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்கள் நிலவுகின்றன. மோடி குஜராத் இனக்கொலைக்குத் தலைமைதாங்கி வன்முறைகளில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் காணப்பட்டாலும் மோடி இதுவரை தண்டிக்கப்படவில்லை.
தொடர் குண்டுவெடிப்பு நிகழ்வதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக பாட்னா ரயில் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்தது.
காலை 9.30 முதல் 11.45 மணிக்குள் நிகழ்ந்த இந்த தொடர் குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை துணைக் கண்காணிப்பாளர் விமல் கராக் தெரிவித்தார்.
பாட்னா ரயில் நிலையத்தில் குண்டுவெடித்த சில நிமிடங்களில் அந்த இடத்துக்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் அந்த இடத்திலிருந்து மேலும் இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றியதாக ரயில்வே போலீஸ் கண்காணிப்பாளர் உபேந்திர குமார் சின்ஹா தெரிவித்தார். வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும்போது காவலர் ஒருவர் காயமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தால் நரேந்திர மோடி பேசிய பேரணிக் கூட்ட இடம் ஒரே புகைமண்டலமாக காட்சியளித்தது. தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக அறிக்கை அனுப்புமாறு பிகார் அரசை, மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் இது தொடர்பாக புலனாய்வு செய்வதற்காக தேசிய புலனாய்வு அமைப்பையும் (என்ஐஏ), தேசிய பாதுகாப்புப் படையினரையும் (என்எஸ்ஜி) உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது.
“”இது பயங்கரவாதிகள் செயலா அல்லது அரசியல் சதியா என்பது குறித்து உடனடியாக எதுவும் சொல்ல முடியாது. விசாரணை முடிந்த பின்னரே உண்மை நிலை தெரிய வரும்” என்று மத்திய உள்துறை இணையமைச்சர் ஆர்.பி.என். சிங் தெரிவித்தார்.