27.10.20008.
2009 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்நாட்டு மக்களை கொலை செய்யவும் கொலைகாரர்களாக மாற்றவும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், கல்விக்கு நிதி குறைவாகவே ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் ஊடகங்களே. ஊடகங்கள்தான் இதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக கிழக்கு மாகாணக் கல்வி, பண்பாட்டலுவல்கள் அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்தார்.
“இன்ரர் நியூஸ்’ நிறுவனத்தின் ஏற்பாட்டில் அம்பாறை ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இக்கலந்துரையாடல் கிழக்கு ஊடக இல்லப் பணிப்பாளர் எம்.ஐ.எம். சதாத் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
ஊடகத்துறையினருக்கும் அரசியல் வாதிகளுக்கும் பொதுவாக பொருந்துவதில்லை. இந்நிலை தொடர்ந்து கொண்டே செல்கின்றது. சில ஊடகங்கள் தாம் சார்ந்த கட்சிக்கு அல்லது சமூகத்திற்கு துதிபாடுகின்றன.
இன்று இந்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் ஊடகவியலாளர்கள் கொல்லப்படுகின்றனர். எனவே, ஜனநாயக ரீதியில் ஊடக சுதந்திரம் பேணப்படல் வேண்டும். சில ஊடகங்கள் மக்களுக்கு நல்லவற்றையும் கொடுக்கின்றன. கெட்டவற்றையும் கொடுக்கின்றன.
அரசியல்வாதிகள் பலர் தங்களது விளம்பரத்திற்காக ஊடகவியலாளர்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், நான் அவ்வாறு இல்லை அவர்களைப் பயன்படுத்துவதும் இல்லை. நான் வெறும் விற்பனைப் பொருளாக மாற விரும்பவில்லை. சகலதும் விற்பனை பொருட்களாக மாறிவரும் இக்காலக்கட்டத்தில் எவருக்கும் என்னை விற்பனைப் பொருளாக மாற்றிவிட முடியாது நான் அடிமட்ட மக்களை மதிப்பவன். எனவே, என்னை மற்றைய அரசியல்வாதிகளுடன் ஒப்பிட வேண்டாம்.
யுத்தத்தின் மூலம் அகதிகளாக்கப்பட்டுள்ள மக்கள் மீது நம் கவனம் திரும்ப வேண்டும். இந்த நாட்டின் அரசியலமைப்பில் பல முரண்பாடுகள் காணப்படுகின்றன. சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுடன் கைகோர்த்து நாம் செயற்பட வேண்டும். ஆனால், ஊடகங்கள் என்ன செய்கின்றன?
சிங்கள ஊடகங்கள் சிங்கள மக்களுக்காக குரல் கொடுக்கின்றன. சுதந்திரமாக செயற்படுவதில்லை அதேபோன்று, அரச ஊடகங்கள் அரசுக்காக செயற்படுகின்றன. நடுநிலையாக நின்று நிதானமாக சிந்தித்துச் செயற்படுவதில்லை. இதுதான் இன்றைய ஊடகங்களின் நிலை.
கிழக்கு மாகாணத்தில் பல பிரச்சினைகள் உள்ளன. இவை மூவினத்தையும் பாதிக்கின்றன. என்னிடம் சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற பேதங்கள் இல்லை. நான் பேதம் பார்ப்பதும் இல்லை என்றார்.
இக்கலந்துரையாடலுக்கு தென்மாகாண மற்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Every singalavar’s should understand the political leaders. Only they are having intentions for capture the powers. They are behind the war and victimized Tamil people. Only solutions Tamil Eelam