இந்து சமய அற நிலையத்துறையை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும். இந்துக் கோவில்களை இந்துக்களே கட்டுப்படுத்த வேண்டும் என்பது பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகளின் கோரிக்கை. இந்துக் கோவில்களை பிரமாணர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காகவே இந்த கோஷம் முன் வைக்கப்படும் நிலையில், தமிழ்நாடு அரசு இந்துக் கோவில் சொத்துக்களை அபகரித்து ஆக்ரமித்து வைத்திருந்தவர்களிடம் இருந்து மீட்கபப்ட்டு வருகிறது. இதுவரை ஆயிரம் கோடி அளவிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்குச் சொந்தமாக சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்த 49 கிரவுண்ட் நிலத்தை இன்று இந்து சமய அறநிலையத் துறை கையகப்படுத்தியது.
99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்த இந்த இடத்திற்கான வாடகை செலுத்தப்படாலேயே இருந்தது.குத்தகைக்கு எடுத்திருந்தவர் இறந்துவிட்ட நிலையில், அவரது வாரிசுகள் அந்த இடத்தை தபால் நிலையம் ஒன்றுக்கு வாடகைக்கு விட்டிருந்தனர். ஆனால், அறநிலையத் துறைக்குச் செலுத்த வேண்டிய வாடகையைச் செலுத்தவில்லை.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் மூலம் அந்த இடம் இன்று சுவாதீனம் பெறப்பட்டது. இந்த நிலத்தின் மதிப்பு சுமார் 300 கோடி ரூபாய் இருக்குமென அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
“காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்குச் சொந்தமாக 160 கிரவுண்டுகளுக்கு மேல் நிலம் இருக்கிறது. ஏற்கனவே தனியார் ட்ரஸ்ட் நடத்திக்கொண்டிருந்த பள்ளிக்கூடத்தை ஸ்வாதீனம் செய்திருக்கிறோம். அவர்களும் கோடிக் கணக்கில் பாக்கி வைத்திருந்த நிலையில், அவர்கள் பயன்படுத்தியமைதானம் ஸ்வாதீனம் செய்யப்பட்டது. இரண்டும் சேர்த்து 50 கிரவுண்ட் இருக்கும். இன்று 49 கிரவுண்ட் ஸ்வாதீனம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள சுமார் 60 கிரவுண்டை வெகு விரைவில் இந்து சமய அறநிலையத் துறைக் கைப்பற்றும்.இன்று சுவாதீனம் செய்யப்பட்டது மட்டும் 300 கோடி ரூபாய்இருக்கும்” என சேகர் பாபு தெரிவித்திருக்கிறார்.
தற்போது கைப்பற்றப்பட்டுள்ள இடத்தில் ஒரு மிகப் பழமையான கட்டடம் ஒன்று இருக்கிறது. அந்தக் கட்டடத்தின் தொன்மை மாறாமல் புதுப்பித்து வேறு பயன்பாட்டிற்குக் கொண்டுவர முடியுமா என்பது குறித்து ஆய்வுசெய்யும் பணியில் தனியாார் அமைப்பு ஈடுபட்டுள்ளது.
“கடந்த சில நாட்களில் மதுரவாயில், மைலாப்பூர், திருப்போரூர் போன்ற இடங்களில் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள கோவில் சொத்துகளை மீட்டிருக்கிறோம். இன்னும் பல நூறு கோடி சொத்துகளை மீட்போம்.” என சேகர் பாபு தெரிவித்திருக்கிறார்.