இந்திய அரசின் ஆக்கிரமிப்பிலுள்ள காஷ்மீரிமிரின் தலை நகர் சிறீநகரிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சோபியான் பிரதேசத்தில் இந்திய இராணுவம் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் 5 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். கஷ்மீர் போராளிகளின் இராணுவத் தாக்குதல் ஒன்றை முறியடிப்பதற்காகவே துப்பாகிப் பிரயோகம் செய்ததில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய இராணுவம் கூறியுள்ள போதிலும் அப்பிரதேச மக்கள் அதனை நிராகரித்துள்ள்னர். முன்னறிவிப்பின்றி மக்கள் மீது சுட்டதில் 5 பேர் கொல்லப்பட்டும் பத்திற்கு மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இந்திய இராணுவத்தின் இக் கொலைகளைக் கண்டித்து சோபியான் பிரதேச மக்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்திய வேளையில் அவர்கள் போலிசாரால் தடியடி மற்றும் கண்ணீர்ப் புகைப் பிரயோகங்களுக்கு உள்ளாகினர்.