இந்திய அரசு சில மாநிலங்களில் நக்சலைட்டுகளுக்கு எதிராக வேறு ஒரு குழுவுக்கு ஆயுதங்களை வழங்குவதாக குற்றச்சாட்டு

சர்வதேச மனித உரிமை அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற அமைப்பு இந்தியாவின் சத்தீஸ்கர் மாநில அரசு சல்வா ஜூதூம் என்ற குழுவுக்கு நக்சலைட்டுகளை எதிர்பதற்காக ஆயுதங்களையும் பிற ஆதரவுகளையும் வழங்குவதாகவும் இதை இந்திய அரசு தடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.

தாக்குதல்களிலும், கொலைச் செயல்களிலும் இந்தக் குழு ஈடுபடுவதாகவும், இதன் செயல்பாடுகளால் ஏராளமானோர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் தெரிவித்துள்ளது.

சல்வா ஜூதூம் படையினரால் பாதிக்கப்பட்டவர்களை தாம் நேரில் கண்டு சாட்சியங்களைப் பெற்றுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நிலவும் நக்சலைட் பிரச்சனை தொடர்பாக, அங்கு சென்று ஆய்வு நடத்திய வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான கேசவன், சல்வா ஜூதூம் படையினருக்கு ஆதரவளிப்பதை பல மாவட்ட அதிகாரிகள் நேரடியாகவே தம்மிடம் ஒப்புக் கொண்டதாகத் தெரிவித்தார்.

பழங்குடி மக்களிடையே பிளவைத் தோற்றுவிக்கவும், நக்சலைட்டுகள் இருக்கும் பகுதிகளுக்கு பொலிஸ் படையினர் செல்லும் போது, கண்ணி வெடிகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் மனித கேடயங்களாகவும் சல்வா ஜூதூம் அமைப்பினர் பயன்படுத்தப்படுகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

இந்தப் பிரச்சனை குறித்து கருத்து வெளியிட்ட மத்திய உள்துறை செயலகத்தின் ஒய்வு பெற்ற மூத்த அதிகாரியான பி எஸ் ராகவன், கலவரத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மக்களுக்கு ஆயுதங்களை அளித்து அவர்களுக்கு சிறப்பு பொலிஸ் அதிகாரி என்ற அந்தஸ்த்தையும் சட்டபூர்வமாக அளிக்க முடியும் என்று கூறினார்.