இந்தியா தலைமையிலான தெற்காசியப் பொருளாதாரத்தின் பசி, 50 ஆயிரம் தமிழ் பேசும் மக்களின் இரத்தத்தை உறிஞ்சி கொன்றுபோட்டுவிட்டு எதிர்ப்புகள் ஏதுமின்றி வெற்றி கொண்டுவிட்டதாக இறுமாப்படைந்து கொள்கிறது. அரசியலில் அரிவரி கூடத் தெரியாத அமைரிக்க அங்காடியொன்றில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ரஜபக்ச சகோதர்களை தனது கைப்பொம்மையாக்கிக் கொண்ட இந்திய அரசு, தனது பிராந்திய, அரசியல், பொருளாதார நலன்களுக்காக கொன்று போட்டவர்கள் போக மிஞ்சியவர்களை முகாம்களில் அடைத்து வைத்திருப்பதையும் நியாயப்படுத்துகிறது. இலங்கையின் சந்து பொந்துக்களிலெல்லாம் இந்திய ராட்சத முதலாளிகளின் முதலீடுகள் புற்றுநோய்போலப் பரவிக்கொண்டிருக்கிறது.
வெறித்தனமான பொருளாதார நலனை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்கும் இந்திய அரச பாதுகாப்பு ஆலோசகர், புதுடில்லியில் நடைபெற்ற பொலிஸ் உயர் அதிகாரிகள் மாநாட்டில் இராணுவம் மேற்கொண்ட பாரிய நடவடிக்கையினால் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமைத்துவம் அழித்தொழிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், பயங்கரமான அந்த இயக்கத்தின் அச்சுறுத்தல் இன்னமும் முடிவுக்கு வரவில்லை என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். படுகொலைசெய்யப்பட்ட மனித குலத்தின் ஒரு பகுதி குறித்தெல்லாம் நாராயணன் போன்ற மனிதகுல விரோதிகள் துயர்கொள்வார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், புலிகளின் அச்சுறுத்தல் தொடரும் என்பதிலிருந்து, இலங்கைத் தமிழ்ப்பேசும் மக்கள் மீதான அடக்குமுறையும் தொடரும் என மறுதலையான அறிவிப்பை விடுத்துள்ளார்.
தமிழ் நாட்டில் வாழும் ஆறுகோடித் தமிழ் மக்களையும் தாண்டி, உலகம் முழுவதும் அதிர்ந்துபோன மனிதப்படுகொலையால் கோபம் கொண்டிருக்கும் மனிதாபிமானிகளின் உணர்வுகளையெல்லாம் அவமானப்படுத்திவிட்டு, இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்களை இந்த நூற்றாண்டின் அடிமைகள் போன்று சித்தரிக்கும் இந்த அறிவிப்பு புதிய ஆசியப் பொருளாதாரத்தின் கோர முகம்! எல்லா முதலாளித்துவ ஜனநாயக விழுமியங்களையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, உலக முதலாளித்துவத்தின் பிரதான பகுதியாவதற்கு கோரப்பற்களோடு அலையும் இந்திய முதலாளித்துவத்தினதும், புதிய உலக ஒழுங்கு விதியினதும் உதாரணம்!!
இந்திய அதிகார வர்க்கம் தனது தெளிவான நிகழ்ச்சி நிரலை உருவாக்கி வைத்திருக்கிறது. தன்னுடைய ஒவ்வொரு அசைவுகளும் ஆயிரக்கனக்கான மக்களைக் கொன்றொழிக்கும் என்பதில் அவர்களுக்குச் சந்தேகமில்லை. அந்தக் கொலைகளுக்கெல்லாம் இந்தியா அதிகாரம் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறது. நாராயணன் இந்தக் கருத்தை வெளியிட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மாவோயிஸ்டுக்களை வெற்றிகொண்டாகவேண்டும் என்று சூழுரைத்திருக்கிறார்.
ஆக, அவர்கள் தங்களது வியாபாரத் தேவைகளுக்காக யாரையும் கொன்றுபோடத் தயாராகிவிட்டார்கள்.
அதற்காக உலகம் மொத்தமும் தமது தந்திரோபாயப் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார்கள். சீனா, இந்தியா, ரஷ்யா என்று உருவாகிக் கொண்டிருக்கும் பொருளாதார அதிகாரங்கள் இலங்கைப் பிரச்சனையில் தான் முதன் முதலில் தமது கூட்டை வெளிப்படையாக முன்வைத்திருக்கின்றன. அதுவும் ஆயிரமாயிரமாய் அப்பாவிகளைப் பலியெடுப்பதனூடாக அந்தக் கூட்டை வலுப்படுத்தியிருகிறார்கள்.
இதையெல்லாம் முதலாளித்துவ ஜனநாயகத்தின் “ஆசிய வடிவம்” என சிக்கனமாக உலகப் பொருளாதார ஆய்வாளர்கள் வர்ணித்துவிட்டு மௌனமாய்ப் அடங்கிப் போய்விடுகிறார்கள்.
புலிசார் தமிழ் வியாபாரிகள் கூட இந்த “ஆசிய வடிவத்திற்குள்” தம்மை உள்நுளைத்துக் கொள்கிறார்கள். ஆசிய ஜனாநாயக முறைமை குறிவத்தது இலங்கைத் தமிழ் பேசும் அப்பாவிகளை மட்டுமல்ல, தனக்கு எதிரான ஒவ்வொரு தனிமனிதனையும், அனைத்து அரசியலியக்கங்களையும், புதிய பொருளாதார அமைப்போடு தம்மை இணைத்துக்கொள்ள முடியாது போகும் சமூகத்தின் கீழணியிலுள்ள ஒவ்வொரு தனிமனித்னையும் அது தனது எதிரியாகப் பிரகடனப் படுத்தியிருக்கிறது.
அப்பாவி மக்களை அழிப்பதில் இலங்கை இந்திய அரசுகள் பெருமிதம் கொள்ளும் வெற்றி என்பது அவர்களின் தோல்விக்கான ஆரம்பத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது.
இவை எல்லாவற்றையும் மீறி இலங்கை இனப்படுகொலை புதிய மக்கள் எழுச்சிக்கான உரைகல்லாய் அமைந்திருப்பதை யாரும் மறுத்துவிட முடியாது. இது தான் இந்திய இலங்கைக் கொலையாளிகளின் முதற் தோல்வி.
தேசிய இனப்பிரச்சனை குறித்து முதன் முதலாக மக்கள் மத்தியிலும், குறிப்பாக ஆசியப் புத்திஜீவிகள் மத்தியிலும் புதிய பிரக்ஞை ஏற்பட்டுள்ளது. சந்தர்ப்பவாதிகள் தங்களை இனம்காட்டிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். முரண்பாடுகள் தெளிவாகத் தெரிய ஆரம்பித்துள்ளன. தமிழகத்தின் வாக்குக் கட்சிகளை மக்கள் நம்பத் தயாரில்லை அதிலும் குறிப்பாக எதிர்ப்பியக்கங்களின் இயங்கு சக்திகளான இரண்டாம் தலைமை இவர்களைப் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறது. கருணாநிதி கட்சிக்கு இனிமேலும் இவர்கள ஆதாரத் துண்களில்லை. ஜெயலலிதா, திருமாவளவன், வைகோ, வீரமணி, நெடுமாறன், பாண்டியன், ராஜா,மகேந்திரன் என்ற சந்தர்ப்பவாதப் பட்டியலை புதிய சக்திகள் முற்றிலும் நிராகரிக்க ஆரம்பித்துவிட்டன. இவர்களின் மறுபிரதிகளான பின்நவீனத்துவ வாதிகளின் “குறுங் கதையாடலைக்” குப்பைக்குள் போட்டுவிட்டார்கள்.
புலம்பெயர் தமிழர்கள் குறித்து நாராயனன் எச்சரிக்கை விடுத்து ஒரு வாரத்திற்குள்ளாகவே இந்திய அதிகாரவர்க்கத்தின் இன்னொரு எடான இந்தியன் எக்ஸ்பிரஸ் இலங்கைத் தமிழர்களின் நிகழ்ச்சித் திட்டம் தமிழ் நாட்டில் மறுபடி அரசியல் தளத்திற்கு வர ஆரம்பித்திருப்பதாக முன்னறிவித்திருக்கிறது.
இவர்களின் பய உணர்வும், முன்னெச்சரிக்கை அறிவுப்புகளும் புதிய சமூக உணர்வுள்ள சக்திகளின் அரசியல் வரவை நோக்கியதே. மக்கள் மத்தியில் தம்மைத்தாமே அம்பலப்படுத்திக்கொண்ட சந்தர்ப்பவாதிகளிடமிருந்து தம்மை விடுவித்துக்கொள்ளும் மக்கள் புதிய சமூக சக்திகளை நோக்கி அணிதிரள்வார்கள்.
தமிழகத்தில் மட்டுமல்ல இலங்கைத் தமிழர்கள் புலம்பெயர்ந்த மேற்கு நாடுகளிலெல்லாம் சந்தர்ப்ப வாதிகள் தமது நிலைப்பாட்டை தெளிவாகவே முன்வைக்கிறார்கள், இந்திய அரசின் கைப்பொம்மையான ராஜபக்ச அரசை ஆதரிக்கும் பல முன்னை நாள் “மாற்று” அரசியல் சக்திகளெல்லாம் இன்று இலங்கை அரசின் கிரிமினல் வலைப்பின்னலுடன் தம்மை இணைத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். ஒரு நாளைக்கு குறைந்தது 40 பேர் முகாம்களில் சாகடிக்கப்படுகிறார்கள் என்று இலங்கை மங்கள சமரவீர கூறும் அதேவேளை இன்னும் இரு தினங்களில் பண்டாரநாயக்க சர்வதேச மண்டபம் என்கிற இலங்கை அரசுக்குச் சொந்தமான, சாமான்யன் கால்வைக்கவே கூச்சப்படுகின்ற கொழும்பின் இதயப்பகுதியில் அமைந்திருக்கும் மாளிகையில் ராஜினி திரணகமவின் நினைவஞ்சலியை கொண்டாடுகிறார்கள் முன்பு “மாற்று அரசியல்” பேசிய புலம்பெயர் தமிழர்கள்.
இவர்களையெல்லாம் மக்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.
புலிகளின் முன்னை நாள் நிதிவழங்கும் பிரதானியான அமரிக்க வர்த்தகர் ராஜ் ராஜரட்ணம் இலங்கை அரசிற்கு மில்லியன்களை வழங்கியிருக்கிறார். பிரித்தானியாவின் ஹரோப் பகுதி புலிகளின் பிரமுகர் அம்சாவுடன் இணைந்து மறுபடி ஒரு அரசியலுக்குத் தயாராகிறார். புலிகளை ஆதரித்த புலம்பெயர் தமிழர்கள் பாசிஸ்டுக்களல்ல! இலங்கை அரசின் தொடர்ச்சியான இனச்சுத்திகரிப்பை எதிர்க்கும் குறியீடாகவே புலிகளை ஆதரித்தவர்கள். இவர்களும் சந்தர்ப்பவாதிகளை இனம்கான ஆரம்பித்திருக்கிறார்கள்.
நேற்றய தினம் பூந்தோட்டம் முகாமில் ஆயுதங்களே இல்லாமல் மக்கள் இராணுவத்திற்கெதிராகப் போராடியிருக்கிறார்கள்.
அதுவும் ஒரு அப்பாவியை இரணுவம் ஆயுதங்களோடு கொலைசெய்ய எத்தனித்த பின்பும் கூட! தமிழ் பேசும் இலங்கை மக்களை இந்த நூற்றாண்டின் இந்திய அடிமைகளாக, ஆசியப் பொருளாதாரத்தின் பலிகடாக்களாக உபயோகித்துக்கொள்ள அவர்கள் அனுமதிக்கப்போவதில்லை என்பதை முதல் தடவையாக அறிவித்திருக்கிறார்கள்.
புதிய உலக ஒழுங்கு விதி ஆசியாவின் கொல்லைப் புறத்தில் நடத்தி முடித்த படுகொலைகள் அதிகாரத்திற்கு எதிரான புதிய கருத்துக்களின் ஆரம்பமாகியிருக்கிறது. முள்ளிவாய்க்காலில் மக்களைத் திரளாகக் குவித்து கொன்று போட்ட இந்திய அதிகாரவர்க்கதின் அரசியல் தமிழ் நாட்டின் வாக்குக் கட்சிகளின் சந்தர்ப்பவாதத்தை வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது. ஆசியப் பொருளாதாரத்தின் கோரத்தை வேரறுக்கும் புதிய அரசியல் சக்திகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.
இவர்களெல்லாம் பிரபாகரன் மறுபடி வருவார் எனக்கண்களை மூடிக் கனவு காண்பவர்களல்ல. விழித்தே இருக்கிறார்கள்.
இந்தக்கட்டுரை மிகவும் உற்சாகமூட்டுகிறது என்பதோடு புலிகளுக்கு பிந்தைய சூழலிலும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தொடரவே புதிய ஜனநாயக புரட்சியாய் உருவாகும் நம்பிக்கையை விதைக்கிறது.
புலிகளின் அழிவிற்குப் பின்> முட்கம்பி வேலிக்குள் அடைபட்ட மக்கள்>ஆயுதங்களே இல்லாமல் இராணுவத்திற்;கு எதிராக போராடியுள்ளார்கள்! இது தமிழமக்களின் சுயநிர்னய உரிமைப் போருக்கான ஓர் மைல் கல்! எங்கு அடக்குமுறை உண்டோ அங்கு போராட்டம் உண்டு!
மதிப்புக்குரிய எங்கள் மேடம் ராஜனி திராணகமவை இருபது வருடங்களுக்கு முன் பாசிசப் புலிகள் படுகொலை செய்தார்கள். இன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் இரண்டாவது தடவையாக மேடத்தை அரச கைக்கலிகள் ஒன்றுசேர்ந்து படுகொலை செய்கிறார்கள். மேடம் ராஜனி அவர்கள் இவர்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
ராஜனி திரனகம யாழ்ப்பாணத்தில் 21.09.19989 தமிழ் ஈழ விடுதலைப்புலிகளால் கொலை செய்யப்பட்டபோது அதற்கு எதிராக குரல் கொடுத்தவர்களுள் நானும் ஒருவன். தற்போது இலங்கையில்தான் இருக்கிறேன். ராஜனி திரனகமவின் 20வது நினைவு கூறல் கொழும்பில் நடக்கவிருப்பதாக சென்றவாரம் அறிந்தேன். உடனே எனக்குத் தெரிந்த நண்பர்களிடம் விசாரித்தேன். தாங்கள் அறிந்ததாகவும் ஆனால் அழைப்பிதழ் குறிப்பிட்டவர்களுக்கு மாத்திரமே கொடுக்கப்பட்டதாகவும் நண்பர் சொன்னார். தனக்கும் அழைப்பிதழ் கிடைக்கவில்லை என்றும் சொன்னார். ராஜனி திரனகமவின் கொலை செய்யப்பட்ட சம்வத்தை சிங்கள பத்திரிகைகளில் வெளியிட உதவி செய்த ராஜனி திரனகமவை நன்கு தெரிந்த அந்த சிங்கள நண்பரோடு இது பற்றிக் கேட்டேன். தனக்கும் அழைப்பிதழ் கிடைக்கவில்லை என்றும் யார் யாரெல்லாம் இலங்கை அரசாங்கத்தின் ஆதரவு விசுவாசிகளாக இருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தன்னைப்போன்ற தீவிர இலங்கை அரசு – மகிந்தா எதிர்ப்பாளருக்கு எப்படி அவர்கள் அழைப்பிதழ் தரமுடியும். அவர்கள் சரியாகத்தான் நடந்துள்ளார்கள் என்று கூறி வேதனைப்பட்டார். ராஜனி திரனகமவின் மரணத்தை வைத்து இன்று கொழும்பில் அரசியல் வியாபாரம் பண்ணும் இக் கூட்டம் அன்று நாங்கள் புலிகளின் அச்சுறுத்தல்களையும் கொலை மிரட்டல்களையும் எதிர்கொண்டு ராஜனி திரனகமவின் கொலையை அம்பலப்படுத்தியபோது எங்கே இவர்கள் பதுங்கியிருந்தார்கள்.
தயாபரனின் கருத்து சரிதான். இங்கும் கூட இவர்கள் நடத்துகிற கூட்டங்கள் மிக ரகைச்யமாக நடக்கிறது. சமீபத்தில் கோவளம் (திருவனந்தபுரம்) கடற்கரையோர நட்சத்திர விடுதி மாநாடு கூட நடத்தி முடிக்கப்படும் வரை ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. அதன் ஒரு அழைப்பிதழ் கூட வெளியில் கசிந்து விடாமல் பார்த்துக் கொண்டார்கள். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரில் இந்து ராமின் தலைமையில் நடந்த கூட்டம், அம்சாவின் பிரிந்துபசார விழாவில் கலந்து கொண்ட வி.ஐ.பி க்களின் கூட்டம் என எல்லாமே ரக்சியம்தான். இம்மாதிரியான ரகரசியக் கூட்டங்களுக்கு இடது சாரிகள் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் சிலர் சகஜமாக சென்று வருகிறார்கள். வேதனையாக இருக்கிறது.
இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டு அல்லது இந்தியா இலங்கை அரசியலில் நேரடியா தலையீட்டு 22 வருடங்கள் ஆகின்றன. இந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலத்தில் ஜந்து அம்ச கோரிக்கைகளை முன்நிறுத்தி சாத்வீக ரீதியாக போராடி உயிர்நீத்த தியாகி தலீபனின் 22வது வருடத்தை நினைவு கொள்ளும் இந்த சந்தர்ப்பத்தில் நமது அரசியல் முன்னெடுப்புகளில் நாம் தவிர்த்துச் செல்ல முடியாத சக்தியாக உருவெடுத்திருக்கும் இந்தியாவின் அணுகுமுறைகள் குறித்தும் இதில் நமது நிலைப்பாடு எவ்வாறு அமையலாம் என்பது குறித்தும் சிறிது அவதானிப்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.
இன்று நாம் ஒரு மிகவும் இக்கட்டான முட்டுச் சந்தியில் நிற்கிறோம் என்பதில் எவருக்குமே கருத்து பேதங்கள் இருக்கமாட்டாது. இவ்வாறானதொரு நிலைமை ஏன் ஏற்பட்டது என்பதற்கு இன்று பலரும் பலவாறான கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர். இதற்கு புலிகளின் எதேச்சாதிகார அரசியலே பிரதான காரணம் என்போர் அதற்கான காரணங்களை அடுக்கிச் செல்கின்றனர். இல்லை இன்றைய உலக அரசியல் ஒழுங்கை சரியாக விளங்கிக் கொண்டு அதற்கு ஏற்ப அரசியலை கையாளும் திறன் புலிகளிடம் இல்லாததே இன்றைய அவலத்திற்கு காரணம் என்பது பிறிதொரு தரப்பினரது வாதம். இவைகளை விட்டுவிடுவோம் இதனை ஒட்டுமொத்த தமிழர்களின் தோல்வியாகக் கருதி அடுத்த கட்டம் பற்றி சிந்திக்க வேண்டியதே இன்றைய சூழலில் நமது கடப்பாடாகும் என்பது இன்னொரு சாராரது நிலைப்பாடு. என்னளவில் முன்றாவது தரப்பினரின் நிலைப்பாடே சரியானது என்பேன். இதற்காக விமர்சனங்கள், மீள்பார்வை தேவையில்லை என்பதல்ல அர்த்தம். அவைகள் தேவை, எந்த இடத்தில் நாம் தடுக்கி விழுந்திருக்கிறோம்? எந்த இடத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியாதிருந்திருக்கிறது? புதிய பலமையங்களுக்கிடையிலான உறவு-முரண்களை எம்மால் சரியாக புரிந்து கொள்ள முடிந்ததா? இப்படியான உரையாடல்கள் நமக்கு தேவை ஆனால் விமர்சனங்களை தனிப்பட்ட குரோதங்களாக மாற்றிவிடும் எழுத்துக்கள் நமக்கு தேவையற்றது என்பதே எனது கருத்து. விடுதலைப்புலிகளும் கடந்தகாலம் குறித்த விமர்சனங்களை உள்வாங்கி சிந்திக்கும் அரசியல் குறித்து சிந்திக்க வேண்டியிருக்கிறது.
கடந்த 30 வருட கால ஆயுதப் போராட்டத்தின் பண்பு வெளிப்பாட்டை துல்லியமாக மதிப்பிடுவோமானால் நமது அரசியல் உள்ளடக்கமாக இரண்டு விடயங்கள் இருந்து வந்திருப்பதை காணலாம், ஒன்று சிங்கள எதிர்ப்பரசியல் மற்றையது இந்திய எதிர்ப்பு அரசியல் இதனை பிறிதொரு வகையில் சொல்வதானால் நமது தமிழ்த் தேசிய விடுதலை அரசியல் இரு எதிர்ப்பு அரசியல் கூறுகளில் நிலை கொண்டிருக்கிறது, ஆரம்பத்தில் தமிழ்த் தேசியத்தி;கான ஒரு பக்கத்துணை சக்தியாகவே இந்தியா பார்க்கப்பட்டது எனினும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை தொடர்ந்து ஏற்பட்ட அனுபவங்களின் பின்புலத்திலேயே இந்திய எதிர்ப்பு அரசியல் மனோபாவம் வளர்ந்து சென்றது. இந்தியா ஈழத் தமிழரின் தேசிய நலன்களுக்கு தடையாக இருக்கும் ஒரு நாடு என்ற வகையிலேயே நமது எதிர்ப்பரசியல் நியாயம் அமைந்திருந்தது ஆனால் நாம் ஒரு விடயத்தை இங்கு தெளிவாக பார்க்கலாம் சிங்களத்துடனான எமது முரண்பாடும் ஒரு பிராந்திய வல்லரசான இந்தியாவுடனான முரண்பாடும் அடிப்படையிலேயே வேறுபாடானது. இன்று இந்தியா நமது அரசியலில் தலையீடு செய்து 22 வருடங்கள் கழிந்துவிட்ட நிலையிலும் மீண்டும் நம்முன் தாண்டிச் செல்ல முடியாததொரு பெரும் சக்தியாக இந்தியாவே தென்படுகிறது. விடுதலைப்புலிகளின் இராணுவரீதியான தோல்விக்கு பின்னாலுள்ள மறைமுக கரம் இந்தியா என்பது இரகசியமான ஒன்றல்ல. தெற்காசிய அரசியல் நிகழ்சிநிரலிருந்து விடுதலைப்புலிகளின் ஒரு இராணுவ சக்தி என்ற அந்தஸ்த்தை முற்றாக துடைத்து அழிக்க வேண்டுமென்ற முடிவிலிருந்துதான் இந்தியா கொழும்பின் பின்னால் இருந்திருக்கிறது என்னும் முடிவுக்கே நாம் வரவேண்டியுள்ளது.
இந்த பின்புலத்தில் இனிவரும் காலங்களில் இந்தியாவை நாம் எவ்வாறு அணுகப் போகிறோம்? அதிகார மையங்களுக்கிடையிலான அரசியல் போட்டிக் களமாக மாறியிருக்கும் இன்றைய புதிய உலக அரசியல் ஒழுங்கில் நமது இந்திய எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம் என்ன? தொடர்ந்தும் நடைமுறை சாத்தியமற்ற உணர்ச்சிகரமான அரசியல் சொல்லாடல்களுக்குள் சீவிக்கப் போகின்றோமா அல்லது நடைமுறைச் சாத்தியமான அரசியல் குறித்தும் அதற்கான அணுகுமுறைகள் குறித்தும் சிந்திக்கப் போகின்றோமா?
இப்படியான கேள்விகள் இன்றைய சூழலில் ஏன் நமக்கு அவசியப்படுகின்றன என்று இன்னுமொரு கேள்வியையும் இந்த இடத்தில் நாம் கேட்டுக் கொள்ளலாம். தனது பிராந்திய நலன்களுக்கு அச்சுறுத்தலான அன்னிய சக்திகளின் தலையீடு இலங்கையில் அதிகரிக்கின்றது என்ற அச்சத்தின் காரணமாகவே இலங்கையின் உள் அரசியலுக்குள் இந்தியா நேரடியாக தலையிட்டது. ஆனால் அன்றிருந்த உலக அரசியல் இன்று இல்லை. அன்று அமெரிக்காவின் இலங்கை மீதான கரிசனைகளை அச்சுறுத்தலாக பார்த்த இந்தியா இன்று மூலோபாய ரீதியாக அமெரிக்காவுடனான நட்பு சக்தியாக இருக்கின்றது. அமெரிக்காவின் ஆசிய காய்நகர்த்தலுக்கான பிரதான சக்தியாக இன்று இந்தியாவே இருக்கிறது. அமெரிக்கா முன்னர் சோவியத்துக்கு எதிராக சீனாவைவை கையாண்டது போன்று இன்று சீனாவிற்கு எதிராக இந்தியாவை கையாளுகின்றது. அரசியலில் நிரந்தர நன்பர்களும் கிடையாது நிரந்தர எதிரிகளும் கிடையாது, மாறாதது நலன்கள் மட்டுமே. இந்த மாற்றங்களை கருத்தில் எடுக்காமல் இனிவருங்காலத்தில் நமது அரசியலை முன்னெடுக்கக் கூடிய வாய்ப்பு இருக்கின்றதா?
இந்தியா தனது நலன்களிலிருந்தே ஈழத் தமிழர் விவகாரத்தை கையாள முற்பட்டது என்பது எவ்வளவு உண்மையோ அந்தளவு உண்மை எந்தவொரு அதிகார சக்தியும் தனது நலன்களில் இருந்தே தனது பிராந்திய பரப்பினுள் அமையும் அரசியலை கையாளும் என்பதும். ஜே.ஆர் தலைமையிலான சிறிலங்கா அரசை தனது பிடிக்குள் இறுக்குவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த இந்தியா யூலை 83 இற்கு பின்னரான சூழலை சாதமாகப் பயன்படுத்திக் கொண்டது. இலங்கையில் சிங்கள ஆட்சியாளர்களை நிரந்தரமாக கட்டுப்படுத்துவதற்கான ஒரு துருப்புச் சீட்டாக ஈழத் தமிழர்களை பயன்படுத்த எத்தணித்தது, இதன் தொடர்ச்சியாகத்தான் தமிழர் இயக்கங்களுக்கு பயிற்சியளிக்கும் முடிவையும் இந்தியா எடுத்தது. இதன் மூலம் கொழும்பிற்கு நெருக்கடிகளை கொடுப்பதே இந்தியாவின் திட்டமாக இருந்தது. அப்போது சிறிலங்கா இராணுவத்திற்கு இஸ்ரேல், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் பயிற்சியளித்துக் கொண்டிருந்தன என்பதையும் இங்கு குறித்துக் கொள்ள வேண்டும். ஆனால் சிங்கள இராஜதந்திரம் இதில் நுட்பமாக பணியாற்றி ஈழத் தமிழர்களையும் இந்தியாவையும் பிரிக்கும் காய்நகர்த்தல்களில் வெற்றிபெற்றது. இந்தியா, அமைதிப்படை என்ற பெயரில் இங்கையினுள் பிரவேசித்தாலும் கனரக ஆயுதங்கள், டாங்கிகள் சகிதமாகவே பிரவேசித்தது உண்மையில் அதன் உள்ளடக்கம் இலங்கையில் ஒரு தீர்வை ஏற்படுத்தினாலும் அதனை மேற்பார்வை செய்தல் என்ற பெயரில் நிரந்தர தளங்களை அமைப்பதுதான். அடிப்படையில் அன்றைய உலக ஒழுங்கில் இலங்கையை தனது இராணுவ, பொருளாதார தளமாக மாற்றிக் கொள்ளும் நோக்கில்தான் இந்தியா செயலாற்றியது என்ற முடிவுக்கே நாம் வரவேண்டியிருக்கிறது. இதனை நன்கு விளங்கிக் கொண்ட சிங்களம் புலிகளின் உதவியுடன் இந்தியாவை வெளியேற்றியது. இந்தியாவைப் பொறுத்தவரையில் இது ஓரு இராணுவ-புலானாய்வு ரீதியான பின்னடைவாகவே பார்க்கப்பட்டது. விடுதலைப்புலிகள்-பிரேமதாஸா உடன்பாட்டின் கீழ் இலங்கையிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கக்கட்ட இந்தியா நீண்டகாலமாக இலங்கை அரசியல் தொடர்பில் ஒரு விதமான தலையிடாக் கொள்கையை கடைப்பிடிப்பதாகவே காட்டிக் கொண்டது. விடுதலைப்புலிகளும் சிங்கள ஆட்சியாளர்களும் இணைந்தே இந்திய வெளியேற்றத்திற்கான சூழலை உருவாக்கியிருந்தாலும், தனது தந்திரோபாய தோல்விக்கான பிரதான சக்தியாக விடுதலைப்புலிகளையே இந்தியா கருதியது. நமது தரப்பிலும் உலகின் நான்காவது இராணுவத்தை தோற்கடித்த பெருமைக்குரியவர்கள் என்ற வகையான பெருமித அரசியலே முன்னெடுக்கப்பட்டது. இறுதியில் விடுதலைப்புலி – இந்திய முரண்பாடு என்பது ஒர் இந்திய எதிர்ப்பு அரசியலாகவே ஈழத் தமிழர்களுக்குள் வளர்ந்தது.
ஆனால் இன்று ஒரு பாரிய வீழ்சியை சந்தித்திருக்கும் நாம் இலட்சிய அரசியல் பற்றி சிந்திப்பதா அல்லது உலக, பிராந்திய அரசியலை விளங்கிக் கொண்டு அதற்கு ஏற்ப நடைமுறைச் சாத்தியமான அரசியல் பற்றி சிந்திப்பதா, எது சரியானது? அமெரிக்கா இந்தியாவுடன் கைகோர்த்து நிற்கும் இன்றைய அரசியல் சூழலில் நமது இந்திய எதிர்ப்பு அரசியலின் சாத்தியப்பாடென்ன? கொழும்பு சீனாவுடன் அதிகம் நெருங்கியிருக்கும் சந்தர்ப்பத்தில் அமெரிக்க- இந்திய கூட்டு நலன்களுடன் நமது நலன்களும் இணைந்து செல்வதற்கான வாய்புக்கள் இருக்கின்றனவா? இந்தியாவும் கொழும்பும் முரண்படும் சந்தர்ப்பங்களை கையாள வேண்டுமாயின் அது இந்தியா குறித்த நமது முன்னைய நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்து கொள்ளாமல் சாத்தியமாகுமா? இந்தியாவை எதிர்த்துக் கொண்டு அதன் மூலோபாய கூட்டாளியான அமெரிக்காவை நமது நலன்களுக்கு ஏற்ப அணுக முடியுமா?
இப்படியான கேள்விகளுக்கான விடைகளை நாம் தேட வேண்டியிருக்கிறது. இப்படியான கேள்விகளை முன்னிறுத்தி நாம் உரையாட வேண்டியிருக்கிறது. இன்றைய சூழலில் உணர்ச்சிகரமான அரசியலுக்கு இடம் கொடுக்காமல் நிலைமைகளை துல்லியமாக மதிப்பிட்டு அதற்கு ஏற்ப காய்களை நகர்த்த வேண்டியிருக்கிறது. அதற்கு நாம் முதலில் பரந்தளவில் உரையாட வேண்டியிருக்கிறது. இன்றைய நிலைமைகள் குறித்து நாம் நடைமுறைச் சாத்தியமான வகையில் சிந்திக்காவிட்டால் நாம் மேலும் தனிமைப்படும் ஆபத்தே நேரிடும். இன்று சிறிலங்கா அரசுக்கு எதிராக திரும்பியிருக்கும் மேற்கின் கரிசனையைக் கூட நாம் இழக்க நேரிடலாம்.
/ராஜனி திரனகமவின் மரணத்தை வைத்து இன்று கொழும்பில் அரசியல் வியாபாரம் பண்ணும் இக் கூட்டம் அன்று நாங்கள் புலிகளின் அச்சுறுத்தல்களையும் கொலை மிரட்டல்களையும் எதிர்கொண்டு ராஜனி திரனகமவின் கொலையை அம்பலப்படுத்தியபோது எங்கே இவர்கள் பதுங்கியிருந்தார்கள்./
இந்த படித்த புண்ணாக்கர்கள் அன்று லண்டனில் ஒரு கூட்டம் கூடி பின்னர் விஸ்கி குடித்து கவலை கொண்டனர்.