18.03.2009.
இந்தியா தொடர்ந்து வழங்கிவரும் பாரிய ஒத்துழைப்பினாலேயே பயங்கரவாதத்தை இந்தளவுக்கு ஒழிக்க முடிந்துள்ளது. பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா எமக்கு வழங்கி வரும் உதவிகள் அளவிடமுடியாதவை. அந்த வகையில் இந்தியாவுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். இவ்வாறான நிலையில், இந்தியாவுக்கும் எமக்குமிடையிலான நட்புறவை சீர்குலைக்க முயற்சிகள் நடக்கின்றதென சபை முதல்வரும் சுகாதார அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை விசேட அறிக்கையொன்றை விடுத்த ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அநுர குமார திசாநாயக்க, இந்திய இராணுவ மருத்துவர்களின் வருகை தொடர்பாக பல குற்றச்சாட்டுகளை முன் வைத்ததுடன், அது தொடர்பாக கேள்விகளையும் எழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த சுகாதார அமைச்சர் நிமால் சிறிபா டி சில்வா மேலும் கூறியதாவது;
ஜே.வி.பி.யினர் தமது சுவரொட்டி ஒட்டும் போராட்டத்துக்கு தற்போது புல்மோட்டை வைத்தியசாலை, இந்திய இராணுவ மருத்துவர்கள் வருகை என்ற புதிய தொனிப்பொருளை கண்டுபிடித்துள்ளனர்.
பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க இந்தியா எமக்குப் பாரிய உதவிகளை வழங்கியுள்ளது. தற்போதும் வழங்கி வருகின்றது. இந்தியாவின் பாரிய ஒத்துழைப்பினால்தான் எம்மால் பயங்கரவாதத்தை இந்தளவுக்கு ஒழிக்கமுடிந்துள்ளது.
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றாமல் அதனை அணைக்கும் ராஜதந்திர நடவடிக்கைகளில் நாம் தற்போது ஈடுபட்டுளோம். அந்த வகையில் எமக்கு உதவ முன்வரும் நாடுகளின் உதவிகளை நாம் பெற்று வருகின்றோம்.
இந்தியா பெரும் தொகையான மருந்துப் பொருட்களை எமக்கு வழங்கியது. அதனை எனது அமைச்சு மூலமே நான் தேவைப்படும் இடங்களுக்கு வழங்கினேன்.ஐ.தே.க. காலத்தில் விமானத்தில் பருப்பு போட்டது போல் இந்தியா தற்போது செயற்படவில்லை.
தற்போது இலங்கை வந்துள்ள இந்திய மருத்துவர்கள், இராணுவத்தைச் சேர்ந்தவர்களல்ல. அவர்கள் இராணுவத்துக்கு மருத்துவம் பார்ப்பவர்கள். அவர்களின் தகைமைகள் தொடர்பில் நாம் திருப்தியடைந்துள்ளோம். அவர்கள் முறையாக பதிவும் செய்யப்பட்டுள்ளனர்.
இதே வேளை, புல்மோட்டை வைத்தியசாலை நிரந்தரமானதல்ல. அது ஒரு நடமாடும் வைத்தியசாலை, தேவையில்லாத பட்சத்தில் அதனை அங்கிருந்து அகற்றிவிடமுடியும்.
இலங்கை இராணுவத்தின் மருத்துவ துறைக்கு பணியாற்றச் செல்ல மருத்துவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.50 மருத்துவர்களை நான் இராணுவத்தின் மருத்துவ துறைக்கு பலவந்தமாகவே அனுப்பினேன்.அப்படி செல்லாதுவிட்டால் நியமனம் கிடையாது என்று கூறித்தான் அவர்களை அனுப்பிவைத்தேன்.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் கடமைக்குச் செல்ல எந்த மருத்துவரும் தயாராக இல்லை. விரைவில் 1500 தாதிகளுக்கு நியமனம் வழங்கப்படும். இவர்களில் 200பேர் வட,கிழக்குக்கு அனுப்பிவைக்கப்படுவர்.வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் எந்த இயலாமையும் அரசுக்கு இல்லை. ஆனால் தனியார் செயற்படமுடியாது. கடல்கோள் அனர்த்தத்தின் போது இந்தியாவின் உதவியைப் பெறுமாறு வலியுறுத்திய ஜே.வி.பி. இன்று இந்தியாவிடம் உதவி பெறக் கூடாதென்கிறது. ஜே.வி.பி.யின் நிலைப்பாடு அடிக்கடி மாறுகின்றது.
புல்மோட்டைக்கு வந்துள்ள இந்திய மருத்துவர்கள் அங்குள்ள கனிய வளங்களை எடுத்துச் சென்றுவிட மாட்டார்கள். புல்மோட்டை வைத்தியசாலையில் அவசர சிகிச்சை மட்டுமே வழங்கப்படும். அதன் பின்னர் நோயாளர்கள் பதவியா, கந்தளாய், திருகோணமலை வைத்தியசாலைகளுக்கே அனுப்பிவைக்கப்படுவர்.
உதவி வழங்குபவர்களிடம் வேண்டாம் என்று சொல்ல நாம் தயாரில்லை. எமக்கு உதவிகளை வழங்குவதற்கு சுவிஸ், நோர்வே உள்ளிட்ட பல நாடுகளின் தூதுவர்கள் என்னுடன் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். அவர்களின் உதவிகளைப் பெற நாம் தயாராகவேயுள்ளோம்.
புல்மோட்டையில் அமைக்கப்பட்ட மருத்துவமனையிலோ அல்லது இங்கு வந்துள்ள இந்திய மருத்துவர்களாலோ எமது நாட்டின் இறைமைக்கு, சுதந்திரத்திற்கு எந்தவித ஆபத்தும் ஏற்பட்டுவிடாது.
ஜே.வி.பி.யினர் எதையெடுத்தாலும் சந்தேகப்படுகின்றனர். அவர்கள் அதிலிருந்து வெளிவரவேண்டும். அரசுடன் சேர்ந்து செயற்படவேண்மென்பதை ஜே.வி.பி.இனியாவது புரிந்துகொள்ளவேண்டும்.