இந்தியா ஆயுத விநியோகத்துடன் இலங்கை படைக்கு இராணுவப் பயிற்சி

இன நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான அரசியல் முயற்சிகளை மீள ஆரம்பிக்குமாறு கொழும்புக்கு புதுடில்லி அழுத்தம் கொடுத்துவருவதாக தெரிவிக்கப்படுகின்ற அதேசமயம் இலங்கைப் படையினருக்கு இந்தியாவின் பல்வேறு நிறுவனங்களில் பயிற்சியளிப்பதற்கு அந்நாடு முன்வந்துள்ளது. 2008 2009 காலப் பகுதியில் மட்டும் சுமார் 500 படை அதிகாரிகள் இந்திய நிறுவனங்களில் பயிற்சி பெறவுள்ளனர். இவர்கள் பல்வேறு தரத்தினை சார்ந்தவர்களாகும். மிசோரம் மாநிலத்திலுள்ள கிளர்ச்சி எதிர்ப்பு, வனயுத்தம் தொடர்பான பாடசாலையிலும் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள பீரங்கிப் படைக் கல்லூரி என்பவனவற்றிலும் இலங்கைப் படையினருக்கு பயிற்சியளிக்கப்படவுள்ளது. இதனைவிட ஏற்கனவே துவக்கு சுடுதல், கடல் நடவடிக்கைகள், தொடர்பாடல், நீர்மூழ்கி கப்பலில் சண்டையிடுதல் போன்றவற்றில் பயிற்சி வழங்கப்பட்டுவருவதாக தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி “ரைம்ஸ் ஒவ் இந்தியா’ பத்திரிகை நேற்று செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைப் படையினருக்கு அதிகளவிலான ஆயுதங்கள், யுத்த தளபாடங்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கும் தருணத்தில் பயிற்சியும் வழங்கப்படவுள்ளது.

இலங்கைக்குள் சீனா தந்திரோபாய ரீதியில் ஊடுருவுவதற்கு பதில் நடவடிக்கையாகவே புலனாய்வுத் தகவல் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புடன் கடல் ரோந்து என்பனவற்றுடன் ஆயுத விநியோகம் மற்றும் பயிற்சி வழங்குதல் என்ற இரட்டை உபாயத்தையும் இந்தியா முன்னெடுக்கவுள்ளது.

பத்து நாட்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்பு செயலாளர் விஜேசிங் ஆகியோரடங்கிய தூதுக்குழுவினர் ஆயுதங்களுக்காக சீனா மற்றும் பாகிஸ்தான் பக்கம் இலங்கை அதிகளவுக்கு நாடிச் செல்வது குறித்து விசனத்தை வெளியிட்டிருந்தனர்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உத்தேச பாதுகாப்பு உடன்படிக்கையானது நீண்டகாலமாக கிடப்பில் உள்ளது. தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளை இந்த உடன்படிக்கை தட்டி எழுப்பிவிடுமென்று அஞ்சியே புதுடில்லி இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை. ஆனால், கொழும்புக்கு ஆயுதங்கள் வழங்குவதில்லை என்ற நிலைப்பாட்டை புதுடில்லி இப்போது மாற்றிக்கொண்டுள்ளது.

உண்மையிலேயே 2002 இல் சுகன்யா ரோந்துக் கப்பலுடன் ஆயுத விநியோகம் ஆரம்பமாகிவிட்டது. இப்போது அண்மைக் காலமாக ஆயுத விநியோகம் விரைவுபடுத்தப்பட்டிருப்பதுடன் தற்போது பயிற்சியும் அளிக்கப்படவுள்ளது.

மாலைதீவு, மொரீசியஸ், மெங்கோலியா, வாட்ஸ்வானா, தஜிஜிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்த படையினருக்கு இந்தியா பயிற்சியை வழங்கிவருகின்ற போதும் இலங்கைக்கு அளிக்கப்பட்டுவரும் வசதிகள் ஏனையோரிலும் பார்க்க அதிக அளவினாதாகும்.

உதாரணமாக தெஹ்ராடூனிலுள்ள இந்திய இராணுவக் கல்லூரியில் 2008 2009 இல் இரு விசேட பாடநெறிகள் நடத்தப்பட்டு வருகிறது. இலங்கையிலிருந்து 100 இற்கும் அதிகமான படையினருக்கு இங்கு பாடநெறிகள் நடத்தப்படுகின்றன.

இதற்கு மேலதிகமாக 39 இலங்கைப் படை அதிகாரிகளுக்கு பூனே இராணுவ பொறியியல் கல்லூரியில் பாடநெறிகள் போதிக்கப்படவுள்ளன. தேங்காலியிலுள்ள பீரங்கிப் படைப் பாடசாலையில் 15 பேருக்கும் அஹமத் நகரிலுள்ள காலாப்படை நிலையத்தில் 29 பேருக்கும் ஜபால்பூரிலுள்ள உபகரணங்கள் முகாமைத்துவக் கல்லூரியில் 25 பேருக்கும் வடோராவிலுள்ள இலத்திரனியல், பொறியியல் பாடசாலையில் 30 பேருக்கும் கௌவிலுள்ள இராணுவ தொலைத்தொடர்பு பொறியியல் கல்லூரியில் 14 பேருக்கும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

நன்றி : தினக்குரல்