21.10.2008.
இலங்கையின் உள்விவகாரங்களில் இந்தியா ஒருபோதும் தலையிடப் போவதில்லை. இந்தியாவின் இத்தலையிடாக் கொள்கைக்கான அடித்தளத்தை காமினி திசாநாயக்க இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளதாக பிரதியமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உள்விவகாரங்களில் இந்தியா தலையிட வேண்டும் என்று சிலர் விரும்புகின்றனர். அது ஒருபோதும் நடக்கப்போவதில்லை. இந்தியா இலங்கைப் பிரச்சினைகளில் ஒருபோதும் தலையிடப் போவதில்லை. எனது தந்தை பயங்கரவாதத்திற்குப் பலியானார். இந்தியாவுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தமையாலேயே என் தந்தையார் வேலுப்பிள்ளை பிரபாகரனால் கொல்லப்பட்டார்.
இந்திய அரசு இலங்கை மீது கொண்டிருந்த மனக்கசப்புக்கள் மற்றும் தவறான எண்ணங்களை மறைந்த அமைச்சர் காமினி திசாநாயக்க மாற்றியமைத்து இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திட வழிசெய்தார்.
இந்த ஒப்பந்தத்திற்காக அவர் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்தார்.
இந்தியா பருப்பு மூடைகளை விமானம் மூலம் கொண்டுவந்து இலங்கையில் போட்ட காலமொன்று இருந்தது. ஆனால், இந்திய இலங்கை ஒப்பந்தம் மூலம் இத்தகைய நிலைமை மாறியுள்ளது.
மறைந்த காமினி திசாநாயக்கவை கொலைசெய்த பயங்கரவாதம் இன்னும் நாட்டிலுள்ளது. இப்பயங்கரவாதத்தை உடைத்தெறிய வேண்டும். எனவே, கட்சி அரசியலை மறந்து பயங்கரவாதத்தை ஒழிக்க நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
கட்சி அரசியல் தேர்தல் காலத்துடன் மட்டும் இருக்க வேண்டும். அரசியல் புரிய நாடு, தேசம் இன்றியமையாததாகும். பயங்கரவாதம் தொடருமானால் காமினி திசாநாயக்க, ஜானக பெரேரா போன்று இன்னும் எத்தனையோ தலைவர்களை இழக்க வேண்டி ஏற்படுமோ தெரியாது.
எனது தந்தை தனது இறுதி நாட்களில் மிகவும் வேதனையுடன் இருந்தார். அவர் பல முட்டுக்கட்டைகளால் பின் தள்ளப்பட்டார். அரசியல் என்பது பழிவாங்கல்களும் துரோகத்தனமும் கொண்டதாக மாறியுள்ளது என்றார்.
இங்கு முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.டி. சிறிசேன உட்பட பலரும் உரையாற்றினர். இவ்வைபவத்தில் வலது குறைந்தோருக்கான சக்கர நாற்காலிகள் மற்றும் மூக்குக் கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.