இந்தியாவுக்கு அமெரிக்கா ஏவுகணைகள்.

11.09.2008.

வாஷிங்டன்:

விமானங்களில் இருந்து கப்பல்களைத் தாக்கும் ஹர்ப்பூன் ரக ஏவுகணைகளை (Harpoon Block II Missiles) இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா முன் வந்துள்ளது.

அமெரிக்காவில் சுற்றுப் பயணத்தில் உள்ள பாதுகாப்பு அமைச்சர் ஆண்டனி, அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ஸுடன் நடத்திய பேச்சு வார்த்தையின் இறுதியில் இது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்திய விமானப் படையின் கடல் பகுதி தாக்குதல்களுக்கு இந்த ஏவுகணை மிக உதவியாக இருக்கும்.

170 மில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவுக்கு 24 ஹர்ப்பூன் ஏவுகணைகளை அமெரிக்கா வழங்கும்.

இந்த ஏவுகணைகளை விற்பது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இதற்கு அனுமதி கிடைத்தவுடன் ஏவுகணைகள் இந்தியா வந்தடையும்.