கொரோனா பெருந்தொற்று இந்தியாவில் பல்லாயிரம் பேரை பலி கொண்டு வரும் நிலையில் இதுவரை ஆயிரம் மருத்துவர்களும், நூற்றுக்கணக்கான முன் களப்பணியாளர்களும், 240 பத்திரிகையாளர்களும் மடிந்திருக்கிறார்கள். முதல் கொரோனா பரவலில் 736 மருத்துவர்கள் உயிரிழந்த நிலையில் தற்போதைய கொரோனா 2-வது அலையில் 244 மருத்துவர்கள் மரணம் அடைந்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 50 மருத்துவர்கள் இறந்திருக்கிறார்கள்.அதே போன்று இந்தியா முழுக்க பத்திரிகையாளர்கள் 240 பேர் இதுவரை பலியாகி இருக்கிறார்கள். டெல்லி பல்கலைக்கழக பேராசிசியர்கள் மட்டும் 35 பேர் பலியாகி இருக்கிறார்கள். இந்திய மருத்துவச் சங்கத்தின் தலைவர் டாக்டர் கே.கே. அகர்வால் நேற்று முன் தினம் கொரோனாவுக்கு பலியானார்.
இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி பற்றாக்குறை போன்றவை நிலவும் நிலையில் இந்தியாவில் மருத்துவர்களின் மரணம் சுகாதாரத்துறையை அச்சுறுத்தியிருக்கிறது. இந்தியாவில் 1500 மக்களுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. இது வெறும் அலோபதி மருத்துவர்களை மட்டும் சொல்லவில்லை. அலோபதி, ஆயுர்வேதம், சித்தா போன்ற பல்வேறு மருத்துவர்களையும் சேர்த்துதான் இந்திய அரசு இப்படி ஒரு புள்ளிவிபரத்தைக் கொடுக்கிறது. ஆனால், கொரோனா தொற்றுக்கு பலியாகும் பெரும்பான்மை மருத்துவர்கள் அலோபதி மருத்துவர்களே என்பதும் கவனிக்கத் தக்கது.