09.08.2008.
கொழும்பில் நடைபெற்று முடிந்த சார்க் மாநாடு இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் என எதிர்பார்த்திருந்த சிறுபான்மை மக்களுக்கு இம்மாநாடு பெரும் ஏமாற்றத்தையே கொடுத்திருப்பதாக இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் க.வேலாயுதம் தெரிவித்தார்.
இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் இந்தியாவின் அவசியத்தை வலியுறுத்தி வெளியான அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இலங்கையில் வன்முறை களும் மனித உரிமை மீறல்களும் அதிகரித்துள்ளபோதும் அதனைத் தவிர்ப்பதற்கான ஆக்கபூர்வமான அழுத்தங்கள் செலுத்தப்படாமை விரக்தியை தருகின்றது.
தற்போது ஏதாவது ஒரு வழியில் ஓர் தீர்க்கமான அமைதித் தீர்வையே அப்பாவி சிறுபான்மை மக்கள் எதிர்பார்க்கின்றனர். காலம் காலமாய் விரக்திக்கும் வேதனைக்கும் உள்ளாக்கப்பட்டு வரும் எமது மக்கள் தொடர்பாக ஆசியாவின் தாயாக விளங்கும் இந்தியாகூட ஒரு இரட்டை நிலைப்பாட்டைக் கைக்கொண்டு வருகின்றது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
இலங்கையில் ஓர் அரசியல் ரீதியான அணுகுமுறையூடாக இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டுமென இந்தியப் பிரதமர் கூறியுள்ளதை நன்றியுடனும், மகிழ்ச்சியுடனும் நாம் நோக்குகிறோம். மேலும் மனித உரிமை மீறல்களும் தடுக்கப்பட வேண்டுமென கூறியிருப்பதையும் வரவேற்கிறோம். ஆனால், இந்த அழுத்தங்கள் போதாது. ஓர் ஆக்கபூர்வமான நடவடிக்கை அவசியம் என்பதை இந்தியா உணரவேண்டும்.
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. அவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்: என்றெல்லாம் இந்தியாவும் சர்வதேசமும் வாய்கிழிய கத்தினாலும் இலங்கை அரசு அதனை காதில்போட்டுக் கொள்வதில்லை. இது இலங்கை எமக்கு தந்த அனுபவம். எனவே, ஓர் அர்த்தமுள்ள ஆக்கபூர்வமான நடவடிக்கைகளூடாக இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து இலங்கைவாழ் அனைத்து மக்களும் நிம்மதியாகவும், அமைதியாகவும் வாழவழி வகுக்க வேண்டும்.
இல்லையேல், தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டும், துன்புறுத்தப்பட்டும் நொந்து போய் இருக்கின்ற அப்பாவி மக்களுக்கு தற்போதைய நிலைமைகள் ஓர் நல்ல விளைவை தரும் என்று எந்தவொரு அடிப்படையிலும் எதிர்பார்க்க முடியாது. எங்கெல்லாம் ஒரு இனம் தொடர்ந்து தாக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு கொதித்து எழும்புகிறதோ அவ்வாறே அம்மக்களின் எழுச்சியை முறியடிக்க அடக்குமுறைகளும், ஒடுக்கு முறைகளும் கையாளப்படுகின்றதோ அங்கெல்லாம் மக்கள் கிளர்ச்சியொன்று எழுந்தேதீரும். இது உலகம் எமக்குக் கற்றுத்தந்துள்ள பாடம்.
எனவே, அழிவுகளும், பாதிப்புகளும் தடுக்கப்பட வேண்டும் எனின் சகலமக்கள் மீதான அடக்கு முறைகளும் ஓரங்கட்டப்பட்டு சகலரும், மதிப்புடனும் கௌரவத்துடனும் வாழ்வதற்கான சூழலை உருவாக்க வேண்டியது ஒவ்வொரு சர்வதேச தலைவர்களதும் கடமையாகும் என அவர் தெரிவித்தார்.