இந்தியப் போர்க்கப்பல்கள் கரைக்கப்பால் நிலைகொண்டு பாதுகாப்பை வழங்கும்!

புதுடில்லி: கொழும்பில் இடம்பெறவுள்ள பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்க (சார்க்) உச்சிமாநாட்டின் போது இலங்கைக்கு மூன்று போர்க்கப்பல்களை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பிற்காக அனுப்புவதற்கு புதுடில்லி திட்டமிடுகின்றது. இந்தியப் பிரதமருக்கும் அவருடன் வருகைதரும் தூதுக்குழுவினருக்கும் போதிய பாதுகாப்பை வழங்குவதற்காக ஏவுகணைகளை அழிக்கும் வல்லமை வாய்ந்த இருகப்பல்கள் உட்பட மூன்று யுத்தக்கப்பல்களை இலங்கைக் கடற்பரப்பில் நிறுத்துவதற்கு இந்தியா திட்டமிடுவதாக ரைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகை நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து அதிக மட்டத்திலான அச்சுறுத்தல் இருக்கலாமெனக்கருதி தவறுகள் எதுவும் இடம்பெறாமல் உறுதிப் படுத்திக் கொள்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மிகவும் சுறுசுறுப்பான விதத்தில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருகின்றதுடன், இந்த விடயத்தை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனே கவனித்து வருகின்றார்.

விடுதலைப்புலிகள் தற்கொலைக் குண்டு தாரிகளைப் பயன்படுத்துவது தெரிந்த விடயமாக இருப்பதால் தவறுகள் நேர்ந்துவிடுவதற்கு இடமளிக்கக்கூடாது என்பதில் இந்தியத் தரப்பு மிக கவனமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

விடுதலைப்புலிகள் ஆகாய, கடல்மார்க்க படை பலத்தை கொண்டிருப்பதாலும் ஆழ் கடலுக்குள் சுழியோடிச் சென்று தற்கொலைத்தாக்குதல்களை மேற்கொள்வதற்குரிய பயிற்சிகளைப் பெற்றிருப்பதாலும் அதற்கான எத்தகைய சந்தர்ப்பங்களுக்கும் இடமளிக்கக் கூடாதென்பதிலும் இந்திய நிபுணர்கள் கவனமாக இருக்கின்றனர். அத்துடன், ராடரில் கண்டுபிடிக்கப்படாமல் கொழும்புக்கு சமீபமாக விமானத்தளம் மீது சிறிய விமானத்தில் சென்று புலிகள் வெற்றிகரமாக குண்டுத்தாக்குதல் நடத்தியதையும் இந்திய அமைப்புகள் மனதில் கொண்டுள்ளன.

அதேசமயம் இந்தியப் பிரதமருக்கு மிக நெருக்கமான முறையில் பாதுகாப்பு வழங்கும் விசேட பாதுகாப்புக்குழுவினரின் எண்ணிக்கை கொழும்பு விஜயத்தின்போது அதிகளவுக்கு இருக்குமென தகவலறிந்த வட்டாரங்கள்குறிப்பிட்டுள்ளன.

வெளிநாட்டு விஜயங்களின் போது வழமையாக இந்தியப் பிரதமருக்கு வழங்கப்படும் பாதுகாப்பை விட இந்தத் தடவை விசேட பாதுகாப்புக் குழுவினரின் தொகை கொழும்பு விஜயத்தின்போது அதிகமாக இருக்குமென அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

சார்க் உச்சிமாநாட்டு அமர்வுகள் ஜூலை 27இல் ஆரம்பமாகின்றபோதும் கடைசி இருநாள் மாநாட்டிலேயே இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்வார்.

இலங்கைப் பாதுகாப்பு அதிகாரிகளுடன் 3 இந்திய யுத்தக் கப்பல்கள் பாதுகாப்பை வழங்கவுள்ளன. டெல்சி கிளாஸ் நாசகாரி, ராஜ்புட் கிளாஸ் நாசகாரி என்பனவும் இவற்றில் உள்ளடங்கும். மேலும் இவற்றில் சீகிங், சீரக் ஹெலிகொப்டர்களும் உள்ளன.

பாதுகாப்புக்கு தேவையான முழுப் பரிமாணத்தையும் அவை கொண்டிருக்கும். 6900 தொன் எடையுள்ள டெல்கி கிளாஸ் நாசகாரியில் 360 பணியாளர்கள் உள்ளனர். இது சக்தியை பிறப்பிக்கும் யுத்தக்கப்பலாகும். அணுஇரசாயன, உயிரியல் சூழ்நிலையிலும் இது இயங்கக்கூடிய ஆற்றலை இக்கப்பல் கொண்டதாகும். அத்துடன் பரந்தளவிலான வீச்சைக் கொண்ட ஏவுகணைகள், ஆயுதங்களையும் இக்கப்பல் கொண்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, உச்சி மாநாட்டின் போது ஆகாய மார்க்க பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டிருப்பதுடன் கொழும்புக் கோட்டை, கொள்ளுப்பிட்டி போன்ற அதியுயர் பாதுகாப்பு வலயப்பகுதிகளின் வான்மார்க்க கண்காணிப்புக்கான கொழும்பின் வான்பரப்பில் இந்திய விமானப்படை ஹெலிகொப்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுமென்றும் பேசப்படுகிறது.

இதேவேளை இந்தியாவின் அதியுயர்மட்டப் பாதுகாப்ப்புப் பிரிவின் பிரசன்னம் குறித்து இலங்கையில் விமர்சனங்களும் எழுந்துள்ளது. குண்டுதுளைக்காத வாகனங்கள் உட்பட பாதுகாப்புக்கு அதிகளவு தொகையை செலவிடுவது குறித்து சில பிரிவினர் ஏற்கனவே கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்தியப் பிரதமர் கொழும்பிலிருக்கும் தருணத்தில் இந்தியப் பாதுகாப்பு படையினர் கொழும்பில் நிரம்பி வழியப் போகின்றார்களென வெளியாகும் செய்திகள் தொடர்பாக சில தேசியவாதக் குழுக்கள் குழம்பிப் போயுள்ளன.

எவ்வாறாயினும் இவை தொடர்பான சில செய்திகள் மிகைப்படுத்தப்பட்டவையென தகவலறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. “ஆயிரக்கணக்கான இந்தியப் படையினர் உச்சிமாநாட்டின்போது பிரசன்னமாகியிருப்பார்கள் என்பதும் ஆதாரமற்றவையெனவும் திட்டங்கள் குறித்து தற்போதும் இலங்கை அரசாங்கத்துடன் ஆராயப்பட்டுவருவதாகவும், அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

கடந்த மாதம் கொழும்புக்கு விஜயம் செய்த இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்பு அதிகாரி விஜேசிங் ஆகியோரடங்கிய குழுவினர் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் சார்க் மாநாட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தே பேச்சுவார்த்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தியப் போர்க்கப்பல்கள் கரைக்கப்பால் நிலைகொண்டு பாதுகாப்பை வழங்குமெனவும் இலங்கை அரசின் இணக்கப்பாட்டுடனேயே இவை மேற்கொள்ளப்படுமெனவும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.

உதாரணமாக 6900 தொன் எடையுடைய டெல்சி கிளாஸ் நாசகாரிக் கப்பலில் பலரகமான ஏவுகணைகளும் ஆயுதங்களும் இருக்கின்றன. இக்கப்பல் 2 சீகிங் ஹெலிகொப்டர்களையும் காவிச்செல்ல முடியும். அடிப்படையில் இவை நீர்மூழ்கிக்கப்பல்களுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தக்கூடியவை. இந்த ஹெலிகொப்டர்கள் ஒவ்வொன்றிலும் யுத்தத்திற்கு தயார்நிலையில்28 படைவீரர்கள் இருப்பார்கள். இதேபோன்றே 4974 தொன் எடையுடைய ராஜ்புட் கிளாஸ் நாசகாரிக்கப்பலானது கமோங்28 அல்லது சீரக் ஹெலிகளை தாங்கிச் செல்லக்கூடியதாகும். இவை இழப்புகள் ஏற்பட்டால் மீட்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும் ஆற்றல் படைத்தவையாகும்.

மேலும் இந்தியாவின் கரையோரப் பகுதி தளங்களும் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும். தமிழ்நாட்டின் இராமநாதபுரத்திலுள்ள படைத்தளங்கள் போன்றவை உச்சிமாநாட்டின்போது ஏதாவது அசம்பாவிதம் இடம்பெற்றால் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தயார்நிலையில் வைக்கப்பட்டிருக்கும்.

இலங்கைக்கு இந்தியாவானது 40 மி.மீ. எல்70 தன்னியக்க விமான எதிர்ப்பு துப்பாக்கிகளையும், தாழப்பறக்கும் விமானங்களை கண்டுபிடிக்கும் இந்திரா ராடர்களையும் வழங்கியுள்ளது. இதற்கப்பால் 500 இலங்கைப் படையினருக்கும் வருடாந்தம் இந்தியா பயிற்சி வழங்கிவருகிறது. அத்துடன் கடல் பரப்பில் புலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக சர்வதேச கடற்பரப்பில் இலங்கை கடற்படையுடன் கூட்டு ரோந்தில் ஈடுபட்டுவருவதுடன் ரோந்து நடவடிக்கைகளை அதிகரித்தும் உள்ளது.

அத்துடன் இலங்கைக்குள் சீனாவின் தந்திரோபாய ஊடுருவலுக்கு பதில் நடவடிக்கையை மேற்கொள்ளும் நோக்கத்துடன் இந்தியக் கடற்படையினரும் கரையோரக் காவற்படையினரும் அதிக யுத்தக்கப்பல்களை பாக்கு நீரிணையிலும், மன்னார் குடாவிலும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியுள்ளனர். ஆயுத விநியோகம், இராணுவப் பயிற்சியுடன் கடற்படை ரோந்து, புலனாய்வு தகவல்பரிமாற்றம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது சீனாவின் நடவடிக்கைகளுக்கு பதில் நடவடிக்கையை மேற்கொள்ளும் நோக்கமாகும்.