இந்தியப் பிரதமர் சந்திக்கு ம் இலங்கைத் தலைவர்கள் : பிள்ளையான் இல்லை!

சார்க் உச்சி மாநாட்டில் பங்குகொள்வதற்காக நாளை வெள்ளிக்கிழமை கொழும்பு வரவுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தான் கொழும்பில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானைச் சந்திப்பதற்கு மறுப்புத் தெரிவித்திருக்கின்ற அதேவேளையில், கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவைச் சந்தித்துப் பேசுவதற்கு இணக்கம் தெரிவித்திருக்கின்றார்.

கொழும்பு வரும் இந்தியப் பிரதமர் கிழக்கு மாகாண முதலமைச்சரையும் சந்திப்பார் என முதலில் வெளியான செய்திகள் தெரிவித்திருந்த போதிலும், பிள்ளையானைச் சந்திப்பதற்கு இந்திய வட்டாரங்கள் பின்னர் மறுத்துவிட்டன. கொழும்பில் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் ஆர்.சம்பந்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் அறுமுகம் தொண்டமான, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ராவூப் ஹக்கீம், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவிருக்கின்றார்.

அமைச்சர் றிசாட் பதியுதீனுடன் நடைபெறும் பேச்சுக்களின் போது ஹிஸ்புல்லாவும் உடனிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்களை விட அமைச்சர் மிலிந்த மொரகொட மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரை இந்தியப் பிரதமர் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேச்சுக்களை நடத்துவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது