வாசிப்பின் இரண்டாவது புத்தகமாக ‘இந்திய தேர்தல்களை வெல்வது எப்படி?’. சிவம் சங்கர் சிங் என்பவர் எழுதியிருக்கிறார்.India Shining என்ற சொல்லாடல் ஞாபகம் இருக்கலாம். வாஜ்பாய்யின் ஆட்சி முடிந்து இரண்டாம் முறை தேர்ந்தெடுக்கப்படவென ப்ரொமோத் மகாஜனின் முன்னெடுப்பில் பாஜகவுக்கான பிரச்சாரத்தில் பயன்படுத்தப்பட்ட வாசகம். ‘இந்தியா ஒளிர்கிறது’ என அர்த்தப்படும் அந்த சொல்லாடல்தான் நவதாராளமய இந்தியாவில் தேர்தல் பிரச்சாரங்கள் என்னவாக மாறவிருக்கின்றன என்பதற்கான முன்னறிவிப்பாக இருந்தது. ஆனால் அந்த தேர்தலில் பாஜக வீழ்த்தப்பட்டது.
அடுத்த 10 வருடங்களில் காங்கிரஸ்ஸின் ஆட்சி ஓய்கிறது. பாஜக மீண்டும் தேர்தலை சந்திக்கிறது. இம்முறையும் ஒரு சொல்லாடல் இருந்தது. ‘குஜராத் மாடல்’ என்கிற சொல்லாடல். கூடுதலாக அசுரத்தனமாக வளர்த்தெடுக்கப்பட்ட மோடி என்கிற ஒரு பிம்பம்.இம்மாதிரியான வார்த்தைகள், சொல்லாடல்களை பஞ்ச் வசனம் போல் அறிவித்து தேர்தல்களை சந்திப்பது அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளில் வழக்கம். உதாரணமாக ஒபாமா, தேர்தலின்போது தனக்கான பிரச்சார வார்த்தையாக ‘Change’ (மாற்றம்) என முன்வைத்து, ‘Yes we can’ என்பதை கோஷமாக பிரசங்கித்ததும் நினைவில் இருக்கலாம்.
அமெரிக்காவில் ஒவ்வொரு தேர்தலின்போதும் ஜனாதிபதி வேட்பாளர் ஒரு பிரச்சார நிறுவனத்தை பணிக்கு அமர்த்துவார். அந்த நிறுவனம் மாகாணவாரியான வாக்காளர்களின் எல்லா தரவுகளையும் எடுத்து அவற்றிலிருந்து தன்னுடைய வேட்பாளருக்கான வாக்காளர்களாகும் சாத்தியம் கொண்டவர்களை அடையாளம் கண்டு அவர்களை வெல்வதற்கான செய்திகளை funnel down செய்து கொடுக்கும். இது ஒருபுறம் எனில் மறுபக்கத்தில் தேசிய அளவிலான பிரச்சினைகளை எடுத்து அல்லது உருவாக்கி தன்னுடைய வேட்பாளரை முன்னிறுத்தும். இரண்டு வேட்பாளர்களுக்கும் இத்தகைய நிறுவனங்கள் வேலை செய்யும். அவரவர் வேட்பாளரை வெற்றியடையச் செய்யவென எந்த எல்லைகளுக்கும் நிறுவனம் செல்லும். சமயங்களில் இரு வேட்பாளர்களின் பிரச்சார நிறுவனங்களுக்கும் இடையில் தொடர்பு கூட இருக்கும். இத்தகைய பாணி தேர்தல்களை நகைச்சுவையாக The Campaign என்கிற ஆங்கில படத்தில் காட்டியிருப்பார்கள்.
2014ம் ஆண்டு தேர்தலில் மோடியின் வழியாக பாஜக மேற்குலக பிரச்சார உத்தியை மீண்டும் முன்னெடுத்தது. அந்த உத்தியுடன் தனக்கேயுரிய திருட்டுத்தனங்களையும் கலந்து கட்டி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெருவெற்றியை பெற்றது. India Shining சொல்லாடல் தோற்றதும் அந்த உத்தியை தூக்கிப் போட்டுவிடாமல் இன்னும் வேகமாகவும் திடமாகவும் அந்த உத்தியை பயன்படுத்திய பாஜக வெற்றி கண்டது.
2014ம் ஆண்டு வெற்றியிலிருந்து தேர்தல் பிரச்சார நிறுவனங்கள் பற்றிய அறிமுகம் இந்திய மக்களுக்கு ஏற்பட்டது. இத்தகைய பிரச்சார நிறுவனங்களால் எதிர்காலத்தில் நேரவிருக்கும் ஆபத்தை உணர்ந்த பெரும்பாலானோர் இவற்றை ஆதரிப்பதில்லை எனினும் பல அரசியல்வாதிகளும் கட்சிகளும் இத்தகைய நிறுவனங்களை பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.
சிவம் சங்கர் சிங் இத்தகைய நிறுவனத்தில் வேலை பார்த்தவர்தான். அதுவும் அமெரிக்காவில் படித்துவிட்டு 2014ல் பாஜகவில் இணைய வேண்டும் என இந்தியாவுக்கு வந்து பாஜகவுக்கு உதவத் தொடங்கி, உள்ளே அது செயல்படுகிற விதத்தை அறிந்து பிறகு தேர்தல் பிரச்சார வேலைகளை மட்டும் செய்ய முடிவெடுத்து இறுதியில் பாஜகவிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தவர். இந்திய தேர்தல்கள் தற்போது நடத்தப்படும் விதங்களை குறித்து விரிவாக பேசுகிறார். அதில் பல அதிர்ச்சிகள் நமக்கு காத்திருக்கின்றன.
குறிப்பாக திரிபுராவில் 20 வருடங்களுக்கு மேலாக நீடித்த கம்யூனிஸ்டுகள் தோற்பதற்கான வேலையை செய்து கொடுத்தவர் இவர்தான். கம்யூனிஸ்ட் ஆட்சி மீது எந்தவித புகாரும் மக்களுக்கு இருக்கவில்லை என்கிறார். பிற கட்சிகள் மீது பிரச்சாரத்துக்கென 100 குற்றச்சாட்டுகள் தயார் செய்வதை போல் கம்யூனிஸ்டு கட்சிக்கு தயார் செய்ய முடியவில்லை என்கிறார். பணத்துக்கு ஓட்டு விற்கும் தன்மைக்கும் திரிபுரா மக்கள் பழக்கப்படுத்தப்படவில்லை என்கிறார். இவை எல்லாவற்றையும் மீறி அங்கு கம்யூனிஸ்ட்டுகளை இவரால் வீழ்த்த முடிந்ததற்கு பின்னால்தான் இந்திய மக்களை எத்தனை பெரிய ஆபத்து நெருங்குகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
இந்திய தேர்தல் மட்டுமென இல்லாமல் சலுகைசார் முதலாளித்துவம், தேர்தல் அமைப்பு, அதிகார வர்க்கத்தின் ஊழல், இந்திய அரசியல் இயங்கும் விதம் என எல்லாவற்றையும் மிக நெருக்கத்திலிருந்து பார்த்த அனுபவத்திலிருந்து நமக்கு உண்மைகளை வழங்குகிறார்.
நாம் எவரும், நமக்கான எவரும் பங்கு பெற முடியாத தேர்தல்களாக இந்திய தேர்தல்கள் எப்படி மாறின என்பதை முன்னறிவிக்கும் முக்கியமான புத்தகம் இது. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த புத்தகத்தை மிக எளிய நடையில் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார் தோழர் இ.பா சித்தன்
எந்த நெருடலுமின்றி ஆற்று நீர் சலசலவென விரைந்து ஓடுவது போன்ற தடங்கலற்ற மொழிபெயர்ப்பு. வாழ்த்துகள் தோழர்.
புத்தகத்தில் முக்கியமான இரண்டு பத்திகள் வருகின்றன. தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆட்சி செல்வந்தர்களுக்கான ஆட்சி எனக் குறிப்பிடும் சிட்டிபேங்க் அறிக்கைகளில் ஒரு பத்தி வருகிறது. அதாவது இந்த் செல்வந்தர்களின் ஆட்சிக்கு ஆபத்து வரும் விதத்தை சொல்கிற பத்தி:
‘ஒரு மனிதர், ஒரு வாக்கு என்று துவங்கி, அதுவே தொழிலாளர்களின் ஒற்றுமையாக வலுவடைந்து, தங்களுடைய உழைப்பின் பெரும்பகுதியை சில பணக்காரர்கள் மட்டுமே சுரண்டிக் கொண்டிருப்பதை உணர்ந்து, அதனை எதிர்த்து அவர்கள் கேள்வி கேட்கத் துவங்கிவிட்டால், அதுவே செல்வந்தர்களின் இந்த ஆட்சிக்கு எதிராக மாறிவிடும்’.
இதை சொல்வது எந்த கம்யூனிஸ்ட்டும் அல்ல; பாஜக அரசுடன் நட்பு பாராட்டிக் கொண்டிருக்கும் வங்கிகள்!
மொத்த இந்திய அரசியலையும் நெருங்கி நின்று அவதானித்த மனிதராக சிவம் சங்கர் சிங் கட்சியில் இணைவதை பற்றி ஒரு பத்தியில் சொல்லி முடிக்கிறார்:
‘நூற்றுக்கு நூறு நல்ல கட்சியென்று எதுவும் இல்லை. அப்படியேதும் கட்சிகள் இருந்தாலும், அவர்களால் தேர்தல்களில் மிகப் பெரிய வெற்றிகளைக் குவித்திருக்கவும் முடியாமல் போயிருக்கும். அதனால், எந்தவொரு அரசியல் கட்சியிலும் இணைவதற்கு முன்னர், அக்கட்சியின் எழுதப்பட்ட கொள்கைகளை மட்டுமே எடை போடாமல், கடந்தகாலத்தில் அக்கட்சியின் செயல்பாடுகள், தவறுகள் என அனைத்தையும் பட்டியலிட்டு, அக்கட்சியினால் நீண்ட நெடுங்காலம் பெரியளவிற்கான சமரசம் செய்யாமல் நீடித்து இந்த அமைப்பு முறையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்கிற நம்பிக்கை கிடைத்துவிட்டால், அக்கட்சியில் இணைவது குறித்து முடிவெடுக்கலாம்.’
விளையாடுவதற்கு களத்தை பற்றி தெரிந்திருக்க வேண்டும். இப்புத்தகம் களத்தை பற்றி பேசுகிறது. ஆகவே வாசியுங்கள்.