அண்மையில் கொழும்பு வந்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த இந்திய அரசின் உயர்மட்டப் பிரதிநிதிகள் அடங்கிய மூவர் குழு வடக்கு கிழக்கை மீள இணைத்து, அரசமைப்பின் 13ஆம் திருத்தத்துக்கும் அப்பால் சென்று, இனப்பிரச்சினைக்குத் தீர்வை முன்வைக்குமாறு இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்தது என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
இந்த அழுத்தம் தொடர்பாக இலங்கை அரசின் நிலைப்பாடு என்னவென்பதை நாட்டு மக்களுக்கு அரசு உடன் தெரிவிக்கவேண்டும் என்றும் அக்கட்சி அரசக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட பிரமுகரும், எம்.பியுமான லக்ஷ்மன் கிரியெல்லவே மேற்கண்ட தகவலை வெளியிட்டார். அவர் இவ்விடயம் தொடர்பாக நேற்று மேலும் கூறியவை வருமாறு:
வடக்கில் இடம்பெறுகின்ற யுத்தத்தின் உண்மைநிலை தொடர்பாக அறியும் உரிமை இந்நாட்டு மக்களுக்கு உண்டு. மக்களின் பணம்தான் இந்த யுத்தத்திற்கு செலவிடப்படுகின்றது.
இந்த யுத்தம் இப்போது தொடங்கப்பட்டமை முதல் அது ஓர் இலக்கில்லாமல் செல்கின்றது. ஒரு வருடத்தில் புலிகளை இல்லாதொழிப்போம் என்று இராணுவத் தளபதி கூறுகின்றார். பின்பு மீண்டும் புதிய காலக்கெடு விதிக்கின்றார்.
இவ்வாறு காலம் இழுத்தடிக்கப்படுவதால் மக்களின் பணம் வீணடிக்கப்படுகிறது. உயரிழப்புகள் ஏற்படுகின்றன. படையினர் உளவியல் ரீதியாகப் பின்னடைவு காண்கின்றனர்.
எவ்வளவு காலம் யுத்தம் செய்தாலும் இறுதியில் அரசியல் தீர்வு ஒன்றின் ஊடாகத்தான் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கமுடியும்.
யுத்தத்திற்கு மக்களின் பணம் செலவிடப்படுவதால் யுத்தம் தொடர்பான உண்மை நிலையை அறிவதற்கு மக்களுக்கு உரிமை உண்டு.
ஆனால், அந்த உண்மையை ஊடகவியலாளர்கள் மக்களுக்குத் தெரியப்படுத்தினால் அவர்கள் தாக்கப்படுகின்றனர். “தேசதுரோகிகள்’ என்று முத்திரை குத்தப்படுகின்றனர்.
யுத்தம் நிறுத்தப்பட்டு அரசியல் தீர்வின் ஊடாகவே இலங்கைப் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்று பல நாடுகள் கூறுகின்றன. இந்தியாவும் அதே நிலைப்பாட்டைத்தான் கொண்டுள்ளது.
கடந்த மாதம் இந்திய உயர்மட்டத்தின் மூவர் கொழும்பு வந்து ஜனாதிபதியைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
வடக்கு கிழக்கு மீள இணைக்கப்பட்டு, 13ஆவது திருத்தத்துக்கும் அப்பால் தீர்வு முன்வைக்கப்படவேண்டும் என்று அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.
இந்தியாவின் இந்த அழுத்தம் தொடர்பாக இலங்கை அரசின் நிலைப்பாடு என்னவென்பதை அரசு இந்நாட்டு மக்களுக்குத் தெரிவிக்கவேண்டும் என்றார். (07)