மோதல் பகுதியிலிருந்து வெளியேறி அரசின் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போதிய சுகாதார வசதிகள் இல்லாததாலும் தண்ணீர் தட்டுப்பாட்டினாலும் நோய்களால் பீடிக்கப்படும் அபாயம் அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
பிரிட்டனின் “த கார்டியன்’ பத்திரிகை நேற்று திங்கட்கிழமை முகாம்களில் தங்கியிருப்போரின் நிலைமை தொடர்பான செய்தியை வெளியிட்டிருக்கிறது. அப்பத்திரிகையின் நிருபர் கெதின் சேம்பர் லெய்ன் வவுனியாவுக்கு சமீபமாக இருக்கும் மெனிக்பார்ம் பகுதியிலிருந்து இந்த முகாம்களின் நிலைமை தொடர்பாக எழுதியிருக்கிறார்.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
மெனிக்பார்ம் முகாமுக்குள் சிறிய எண்ணிக்கையான சர்வதேசப் பத்திரிகையாளர்கள் செல்வதற்கு அரசாங்கம் அனுமதியளித்திருக்கிறது. சிறந்த முறையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக உதவி வழங்கும் முகவரமைப்புகள் இது தொடர்பாக தெரிவித்துள்ளன. ஆனால், இங்குள்ள மக்கள் தாங்கள் நடத்தப்படும் விதம் குறித்தும் நடமாடும் சுதந்திரம் இல்லாதமை பற்றியும் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.
சுருள் சுருளான ரேசர் வயர்கள் மரக் கம்பங்களுக்கிடையில் உள்ளன. அங்கிருந்து வெளியேற முடியாது. வரிசையாக கூடாரங்கள் இருப்பதை பார்க்க முடியும்.
சாக்குகள் வழங்கப்பட்டுள்ளன. வெப்பத்தை தாங்குவதற்காக அவை விரிப்புகளாக வழங்கப்பட்டுள்ளன. முகாம்களுக்கு உட்புறமும் வெளிப்புறமும் படையினர் உள்ளனர். இது ஒரு சிறையென பெண் ஒருவர் “கார்டியனுக்கு’ தெரிவித்தார்.
அடுத்த சில நாட்களில் ஆயிரக்கணக்கானோர் மோதல் பகுதியிலிருந்து வெளியேறி வருவார்களென எதிர்பார்ப்பதாக அரசாங்கம் கூறுகிறது. மனிதாபிமான நடவடிக்கையாக மக்களை முகாம்களுக்குள் வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்களுடன் புலிகள் முகாம்களுக்குள் பிரவேசித்திருப்பதாக அதிகாரிகள் நம்புவதாக வவுனியா அரச அதிபர் பியன்சி சார்ள்ஸ் கூறியுள்ளார்.
“இந்த மக்களினதும் நாட்டினதும் பாதுகாப்பே எமது கவலையாகும். இவர்களை இங்கிருந்து நாம் விடுவித்தால் வெளியில் பாதிப்பு ஏற்படக்கூடும்’ என்று அவர் கூறியுள்ளார்.
கிளிநொச்சியிலிருந்து தனது குடும்பத்தினருடன் சசிகுமார் அங்கு வந்திருந்தார். அவர்களுக்கு உணவு, பாதுகாப்பு தொடர்பாக உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பு அங்கு காணப்படவில்லை. கொங்கிறீட் தரையில் பாயில் அவர்கள் உறங்குகின்றனர். தகரத்தால் அடைக்கப்பட்ட சுவர்களுக்கிடையில் இருப்பதால் கடுமையான வெப்பம் காணப்படுகிறது.
இலையான்களுக்கிடையில் குமாரின் (34 வயது) 2 மாத குழந்தை விக்கி தூங்குகிறது. “சரியான சூடாக உள்ளது. சுகாதாரப் பிரச்சினைகள் மோசமாக உள்ளன. பிள்ளைகள் இருமல், வயிற்றோட்டத்தால் பீடிக்கப்பட்டுள்ளனர்’ என்று அவர் கூறியுள்ளார்.
“நாம் வெளியே போக முடியாது. வேலிகளுக்கு உள்ளேயே இருக்க வேண்டும். ஏன் அவர்கள் எங்களை இங்கு கொண்டு வந்தனர் என்று படையினரைக் கேளுங்கள். பாதுகாப்பு ஏற்படும் போது மட்டுமே நாம் போக முடியும் என்று கூறுகிறார்கள். ஒருவருடம் ஆகலாம் என்று அவர் கூறியுள்ளார்’.
முகாம்கள் தொடர்பாக இலங்கையிலுள்ள ஐ.நா. பேச்சாளர் கோர்டன் வெய்ஸ் கூறுகையில்; இதுவொரு மோசமான இடம், வசதியில்லாதது என்று தெரிவித்துள்ளார்.







