சர்வதேசத்தின் பார்வையில் இடைக்கால நிர்வாகம் உருவாக்கப்பட வேண்டும். இதுவே தமிழ் மக்களுக்கான தீர்வாக அமையும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்
தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் காணிகளைப் பறிப்பதற்கு இலங்கை அரசு திட்டமிட்டு வருகின்றது. இதே போக்கில் போகுமானால் இன்னும் 5 வருடங்களில் தமிழ் மக்களுக்கு எதுவுமே இல்லாத நிலை ஏற்படும்.
வலி. வடக்கில் 20 வருடங்களாக மக்கள் வெளியேறி இருக்கின்றனர். அவர்களது தாயக நிலத்தைக் கைப்பற்றுவதை அரசு குறியாக கொண்டுள்ளது. சொந்த மக்கள் அவர்களது காணிகளுக்கு போக முடியாத நிலையை அரசு ஏற்படுத்தி அவர்களது காணியைக் கையகப்படுத்தியுள்ளது.
தமிழ் அரசியல் தரப்புக்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் இந்த விடையத்தில் ஒரு நிலைப்பாட்டில் இருக்க வேண்டும். காணி பறிப்பு தொடர்பில் தமிழ் தரப்பினர் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளது.
மக்களுடன் வீதிகளில் இறங்கி போராட்டங்களை முன்னேடுக்க வேண்டும் ஜனநாயக ரீதியில் மக்களுக்கு விளிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்களின் பிரச்சனைகளை மையப்படுத்தி போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளாத தீர்வை முன்வைப்பதற்கு வடமாகாண சபைத் தேர்தலை வடபகுதியில் ஏற்படுத்தி மக்களை ஏமாற்றுவதற்கு அரசு முயல்கின்றது. அதனை எங்கள் கட்சி எதிர்க்கும்.
மக்களின் பலத்தை சரியாகப் பயன்படுத்தி மக்களுடைய உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக போராட வேண்டும். அதற்கான காலம் நெருங்கியுள்ளது.
கடந்த காலத்தில் ஏற்பட்ட இன அழிப்புக்கு சர்வதேச விசாரணை தேவை. அவை குறுகிய காலத்தில் நடைபெற்ற பேர்க்குற்ற விசாரணை மட்டும் போதாது 65 வருடங்களாக நடைபெற்ற தமிழ் இன அழிப்பு தொடர்பாகவும் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.