வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் நிலைகுறித்து ஆராய்வதற்காக அரச சார்பற்ற அமைப்புகள் நேற்று புதன்கிழமை காலை நடத்திய சந்திப்பில் அனைத்து தமிழ்க்கட்சிகளது பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் விடுத்த அழைப்பை ஏற்றே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பிரதிநிதிகள் உட்பட அனைத்து தமிழ்க் கட்சிகளது முக்கியஸ்தர்களும் இதில் கலந்துகொண்டனர்.
இந்தியாவிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதியான திருமதி. இராமலிங்கமும் இதில் பங்கேற்றார்.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா வந்துள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தே இந்தச்சந்திப்பில் ஆராயப்பட்டது.
காலை 10.30 மணிமுதல் பிற்பகல் 1.30 மணிவரை கொழும்பில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஆர். சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரனும், ஈ.பி.டி.பி. சார்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், புளொட் சார்பில் அதன் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ். (பத்மநாபா அணி) சார்பில் எஸ். ஸ்ரீதரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் வீ. ஆனந்த சங்கரி மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்தோரின் நிலைமை குறித்து ஆராய்வதற்காக வவுனியா செல்ல வேண்டுமென்பதால் அதற்கான அனுமதியை ஜனாதிபதியிடமிருந்து பெறுவதற்காக அவருக்குக் கடிதம் ஒன்றை அனுப்புவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் கடிதத்தில் சம்பந்தன் உட்பட அனைவரும் கையெழுத்திட்ட போதும் அமைச்சர் என்ற ரீதியில் டக்ளஸ் தேவானந்தா கடிதத்தில் கையெழுத்திடவில்லை.
ஜனாதிபதியின் பதில் கிடைத்ததும் அடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.