நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால் கண்காணிப்பு ஒப்பந்தத்தை பரிசீலிக்கும்படி பன்னாட்டு அணு சக்தி முகமைக்கு விடுத்த வேண்டுகோளை மத்திய ஐ.மு.கூ. அரசு திரும்பப் பெற்றுக்கொள்ளும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
மக்களவையில் பெரும்பான்மையை இழந்தால அணு சக்தி ஒப்பந்தம் கைவிடப்படும் என்றும், ஐ.ஏ.இ.ஏ. ஆளுநர்களின் கூட்டத்தை கூட்டுமாறு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளை, ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நடவடிக்கை என்று கருதுவது தவறு என்று காங்கிரஸ் கட்சி விளக்கமளித்துள்ளது.
“இடதுசாரிகள் தாங்கள் அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றாலும், மக்களவையில் போதிய பெரும்பான்மையைப் பெறுவோம் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் பெரும்பான்மையை இழக்கவில்லை” என்று காங்கிரஸ் பேச்சாளர் வீரப்ப மொய்லி கூறினார்.
கண்காணிப்பு ஒப்பந்தத்தின் வரைவை பரிசீலனைக்காக ஐ.ஏ.இ.ஏ. ஆளுநர்கள் குழு உறுப்பினர்களுக்கு வழங்கும்படி ஐ.ஏ.இ.ஏ.வைக் கேட்டுக்கொள்வது, கண்காணிப்பு ஒப்பந்த வரைவை இறுதி செய்வதற்காக ஐ.ஏ.இ.ஏ.வை நாடுவது என்றாகாது என்றார் அவர். |